புலிகள் மீதான தடை நீக்கம் நடந்தது என்ன?

192

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று சொல்லித் தடை செய்துள்ள அரசுகளில் பிரிட்டனும் ஒன்று. இந்தியாவில் போலவே பிரிட்டனிலும் இந்தத் தடையை அவ்வப்போது நீட்டிப்பது அரசின் வாடிக்கையாக இருந்து வந்தது.

இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு தடையைக் காலவரையின்றி நீட்டிச் செல்வதை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ’தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையத்தில்’ முறையீடு செய்தது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
செய்த மேல்முறையீடு சென்ற சூலை 31ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளை பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்கும்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியது.

ஓர் அமைப்பு நிகழ்நடப்பில் (பயங்கரவாதச் சட்டம், 2000 தந்துள்ள வரைவிலக்கணப்படி) “’பயங்கரவாதத்தில்’ தொடர்புடையது” என்று உள்துறைச் செயலர்”நியாயமாக நம்பினால்” மட்டுமே அந்த அமைப்பைத் தடைசெய்ய முடியும்.

ஆனால் தடைக்கான சட்டச் சோதனை தொடர்ந்து நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலை அரசினர் மீளாய்வு செய்வதற்கு எவ்விதப் பொறிமுறையும் இல்லை.

அதாவது தடைநீக்கத்துக்காக உள்துறைச் செயலருக்குத் தரப்படும் விண்ணப்பம் வெற்றிபெறா விட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் காலவரையின்றி தடைப்பட்டியலில் இருந்து வரும் என்று பொருள்.2018 திசம்பரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அப்போதைய உள்துறைச் செயலர் சஜித்ஜாவித், எம்.பி.க்கு எழுதிய விண்ணப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைநீக்கம் செய்யக் கேட்டது.

இதற்கு இரண்டு காரணங்கள் எடுத்துக்காட்டப்பட்டன. அந்த அமைப்புக்கு பயங்கரவாதத்தில் தொடர்பில்லை என்பது ஒன்று.

அதன் மீதான தடை நீடிப்பது (நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட) தமிழ்மக்களின் பேச்சுரிமைக்கும் கூட்டங்கூடும் உரிமைக்கும் இடையூறாக உள்ளது என்பது மற்றொன்று.

அவர்கள் சுதந்தர அரசின் வடிவில் தமிழர் தன்தீர்வுரிமைக் கோரிக்கையை வலியுறுத்த தடையாக உள்ளது என்று நாகதஅ எடுத்துக்காட்டியது.2019 மார்ச்சில் உள்துறைச் செயலர் இவ்விண்ணப்பத்தை மறுத்தார்.

அந்த மறுப்புக்கு எதிராகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீட்டு ஆணையத்தில் முறையீடு செய்தது.

சூலை 31ஆம் நாள் நடந்த திறந்த விசாரணையில் உள்துறைச் செயலருக்கான சட்டத் தரணிகள் வாதுரைத்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என்று அவர் ‘நம்புவதற்கு நியாயமான காரணங்கள்’ இருப்பதாகக் கூறினார்கள்.

இந்த முடிவுக்கு உள்துறைச் செயலர் வருவதற்கு அடிப்படையாக அமைந்தது கூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையத்தின் மதிப்பாய்வுதான்.

சிறிலங்கா ஒட்டுசுட்டானில் 2018 ஜூன் மாதம் மூன்று தனியாட்கள் ஆய்தங்களையும் விடுதலைப்புலிக் கொடிகளையும் வண்டியில் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒரே ஒரு நிகழ்ச்சி பற்றிய பத்திரிகைச் செய்திகளை அந்த மதிப்பாய்வு எடுத்துக் காட்டிற்று.

இதன் பொருள் “தமிழீழ விடுதலைப் புலிகளைச் சார்ந்த ஆட்களும் குழுக்களும்” ”பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்களாக” இருக்கக் கூடும் என்பது இந்தப் பகுப்பாய்வுக் குழுவின் மதிப்பாய்வு.

ஆனால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதுரை என்னவென்றால், உள்துறைச் செயலருக்குத் தரப்பட்ட தகவல் குற்றச்சாற்றுகளின் நம்பகத்தன்மையைச் சரிவர மதிப்பாய்வு செய்வதற்கோ அந்நிகழ்ச்சிக்கு விடுதலைப் புலிகளைக் காரணமாகச் சொல்வது சரியாக இருக்குமா என்று மதிப்பாய்வு செய்வதற்கோ போதுமானதாக இருக்காது என்பதே.

நிகழ்ச்சி என்பது உண்மையில் சிறிலங்கா அரசாங்கம் தனக்கான ஆள்காட்டியைக் கொண்டு நடத்திய ’வலைவிரிப்பு நடவடிக்கை’யாக இருந்திருக்கலாம் என்று அந்தச் செய்திகளே கவலை கொள்கின்றன. உள்துறைச் செயலர் இந்தச் சிக்கல்கள் எதையும் கருதிப் பார்த்து முடிவுசெய்யவில்லை என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதுரைத்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ‘பயங்கரவாதத்தில் தொடர்புண்டு’ என்று முடிவுசெய்து விட்ட உள்துறைச் செயலர் அவ்வமைப்பைத் தொடர்ந்து தடைசெய்யத் தமது விருப்புரிமையைச் சட்டமுறைப்படிப் பயன்படுத்தவில்லை, விடுதலைப் புலிகள் மீது தொடரும் தடை தமிழர் தன்னாட்சிக்கும் தமிழீழத் தனியரசுக்கும் ஆதரவு திரட்டவும் ஆதரவு தெரிவிக்கவும் பிரித்தானியாவில் தமிழர்களுக்குள்ள உரிமைகள் மீது தாக்கம் கொள்வதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விட்டார் என்பதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதுரை ஆகும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கூறியதாவது:

“இந்த மேல்முறையீடு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் முத்திரையிடுவதற்கு எதிரான முக்கிய அறைகூவல் ஆகும்.

இந்த முத்திரை சுதந்திர அரசு வேண்டும் என்ற தங்கள் வேணவாவை வெளியிடும் மக்களை அச்சப்படுத்தும் விளைவுடையது; சிறிலங்கா அரசு தன் தமிழினவழிப்பை பயங்கரவாதத்தோடு சமர் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் உபாயமாக இம்முத்திரையைப் பயன்படுத்துகிறது.

”ஜூலை31ஆம் நாள் மறைவான வழக்கு நடவடிக்கையில் கமுக்கச் சாட்சியத்தை ஆணையம் விசாரித்தது. இன்றைய விசாரணையில் கலந்து கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றாலும், மறைவான வழக்கு நடவடிக்கையில் அதன் நலன்களுக்குப் பகராளிகளாக புகழ்பெற்ற சட்ட்த்தரணிகளாக அங்கஸ் மக்குல்லோஹ், ராசேல் டோனி ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் இப்போது வந்துள்ள தீர்ப்புதான் பிரிட்டனில் புலிகள் மீதான தடைநீக்கம் என்பது. இந்த்த் தீர்ப்பை பிரித்தானிய அரசு மதித்து நடக்கும் என நம்புகிறோம்.

பிற ஐரோப்பிய நாடுகளும் இதேவழியைப் பின்பற்றி புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் எனக் கோருவோம்.

இந்தியாவிலும் புலிகள் மீதான தடை நீக்கக் கோரிக்கைக்கு இந்தத் தீர்ப்பு வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன் உறுதியான சட்டப் போராட்டத்தில் கண்டுள்ள இந்த வெற்றி தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கும் தமிழ்த் தேசிய ஆற்றல்களுக்கும் குடியாட்சிய ஆற்றல்களுக்கும் கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தலைமையமைச்சர் தோழர் உருத்திரகுமாரனுக்கு நம் பாராட்டினையும் வாழ்த்தினையும் உரித்தாக்குவோம்!