புல்லாங்குழலின் அழகிய காதல்

194

எனக்காக பிறப்பெடுத்த புல்லாங்குழலே
என் நேசக்கரத்தால் உனை மீட்டி
காற்றலையோடு இராகம் பாடி
சிங்கார கீதத்தை இசைக்கப் போகிறேன்

வனவாசம் களைந்து
புது நதியில் நீராடி
காருண்யமாய் காவியமெழுதி
அதை காணிக்கை செலுத்தப்போகிறேன்

சலனங்கள் ஏதுமின்றி
உள்ளத்துச் சிறையுடைத்து
கருவறை தாண்டி
இரகசியமாய் உள் நுழைந்து
இசையால் புதுப் புரட்சி செய்வேன்

ஆதி அந்தக் கனவோடு
புழுதி மண்ணில் நின்றுகொண்டு
விழி நீரால் அர்ச்சனை செய்து
நம்தேச கீதத்துக்கு உனை மீட்டியே
பாமாலை சூட வேண்டும்

மக்கிப் போனாலும் கர்ச்சித்து
உயிர்ப்பாக வடித்தெடுத்த சிலைபோல்
என் பூர்வீக மண்ணில்
நின்று கொண்டொரு
ராகமிசைக்கப் போகிறேன்

மேனி சிலிர்க்க பரவசத்தோடு இசைவடிப்பேன்
மனதை ஊடுருவித் துடிக்கும் நினைவுகள்
பெருகிடும் காதலோடு
போதையாய் பேதையின் ஆசைகள்

துளிர்த்து நிற்கும் ஞாபக வேர்களே
இசையில் அரங்கேற்றம் காண்பதற்கு
தெம்மாங்காக வந்துவிடுங்கள்
நீர்ப்பறவையாய் தாகத்தோடு காத்திருக்கிறேன்…

புலரும் பொழுதில்
சூரியனைத் தேடும் தாமரையாய்
துன்பக்கோடுகளை பெருந்தீயில் அழித்து
என் மூச்சுக் காற்றை இசையோடு தூதுவிடுகிறேன்

-பிரபாஅன்பு-