புரட்சிக்காரன் மனசு மென்மையானது…

193


1995 ஆம் ஆண்டின் மார்ச் முதலாம் நாள், யாழ் குடாநாட்டில் புலிக்கொடி பறந்த காலம். புலிகளிடம் போர் கைதிகளாக அகப்பட்டிருந்த சிங்கள படையைச் சேர்ந்த 16 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்திருந்தார்கள்.

94 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் தான் சந்திரிக்கா அம்மையார் “சமாதான புறா” என்ற அடைமொழியுடன் சனாதிபதி ஆகியிருந்தார். சந்திரிக்கா சனாதிபதி ஆனதுடன் புலிகளும் தன்னிச்சையாகப் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். இழுத்தடித்து சிங்கள அரசும் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு வந்தது.

எனினும், தமிழர் பகுதி மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்கச் சிங்கள அரசு மறுத்து வந்தது. பொருளாதாரத் தடையை நீக்கினால் உண்ணாவிரதம் இருந்த போர் கைதிகளை விடுவிக்க முடியும் எனப் புலிகள் அறிவித்தார்கள்.

16 பேரும் ஐந்து வருடங்களுக்கு மேலாக போர் கைதிகளாக இருந்தவர்கள். அதுவரையிலும் இரண்டு தடவைகளுக்கு மேல் உண்ணாவிரதமிருந்திருந்தார்கள். 100க்கும் மேற்பட்ட கடிதங்களைச் சிங்கள அரசுக்கு அனுப்பி இருந்தார்கள்.

இருந்த போதும், சிங்கள அரசு அவர்களை விடுவிக்க எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், அவர்களை விடுவிக்கும் அனைத்து சந்தர்ப்பமும் இருந்தது. எனவே, அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

சு.ப. தமிழ்செல்வன் போர் கைதிகள் உண்ணாவிரதமிருப்பது அவர்களது உரிமை, அதை நாம் தடுக்கப் போவதில்லை என ஊடகங்களுக்கு அறிவித்தார்.

சொல்லியது போல் 7 நாட்கள் நீர் அருந்தி உண்ணாவிரதமிருந்த போர் கைதிகள் , 8வது நாள் நீர் அருந்துவதையும் தவிர்த்தார்கள்.

உண்ணாவிரதம் தொடர்பான சகல தகவல்களும் அப்போதைய யாழ் அரச அதிபர் க.பொன்னம்பலம் ஊடாக அரசுக்கு அறிவிக்கப்பட்டது. சர்வதேச, உள்ளூர் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன.

ஆனாலும், உண்ணாவிரதம் ஆரம்பித்து 8வது நாளில் கூட வெளியுறவு அமைச்சராகவிருந்த லக்ஸ்மன் கதிர்காமர் தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது எனக் கூறினார்.

உண்ணாவிரதத்தின் 10வது நாள் போர்கைதிகளின் உறவினர்கள் சனாதிபதிக்கு மகஜர் ஒன்றைக் கையளிக்கச் சென்றார்கள். எனினும் அவர்களின் மகளிரைச் சனாதிபதி செயலகம் ஏற்க மறுத்தது.

அதே தினம் அமைச்சராகவிருந்த வாசுதேவ நாணயக்கார, விடுதலை தொடர்பாகத் தான் பேசுவதாகவும், போர் கைதிகள் நீர் அருந்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார். போர்கைதிகள் இதை ஏற்றுக் கொண்டு நீர் அருந்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்கள்.

உண்ணாவிரதத்தின் 11வது நாள் அரசாங்க தரப்பின் 23 எம்பி கள் தமிழர் பகுதி மீதான எரிபொருள் தடையை நீக்கி போர்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டாக கடிதம் மூலம் சந்திரிக்கா அம்மையாரிடம் கோரிக்கை முன்வைத்தார்கள்.

11 வது நாள் போர் கைதிகளின் உறவினர்களும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள்.

12 வது நாள் அப்போதைய தேசிய நல்லிணக்க பிரதி அமைச்சராகவிருந்த ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே எரிபொருளுக்கு தடைவிதித்தாலும் அதனால் புலிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, மக்களுக்குத் தான் பாதிப்பு, எனவே தமிழர் பகுதிக்கான எரிபொருள் தடையை முற்றாக நீக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.

15 வது நாள் போர் கைதிகளின் நிலை மிக மோசமாகியது. பலர் நினைவிழந்து மரணத்தை நெருங்கியிருந்தார்கள். இரண்டு பேர் கோமா நிலைக்குச் சென்றிருந்தார்கள்.

உறவினர்கள் இனி அரசை நம்பி பயன் இல்லை. “உங்கள் உயிர்கள் அங்கு போனால் எங்கள் உயிர்கள் இங்கு போகும்” என அறிவித்தார்கள். பல வெகுசன அமைப்புக்கள் உண்ணாவிரத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்கள். தென்னிலங்கையிலிருந்த யாழ்ப்பாணம் வந்த ஜெயதேவ உயங்கொட், அங்கிலிக்கன் திருச்சபை ஆயர் கென்னத் பெர்னான்டோ போன்றவர்கள் உண்ணாவிரத்தை கைவிடுமாறு போர் கைதிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்திருந்தார்கள்.

இதே காலப்பகுதியில் சென்னை மத்திய சிறையிலிருந்து விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்பட்ட 46 கைதிகளும் தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்கள். வேலூர் சிறையிலிருந்த 6 பேர் தப்பி சென்றிருந்தார்கள்.

16 வது நாள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் போர் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப் போவதாக அறிவித்திருந்தார். சொல்லியது போல் 16 போர் கைதிகளை அப்போதையராவய பத்திரிக்கையின் ஆசிரியர் விக்டர் ஐவன், சண்டே ஒப்சவர் பத்திரிக்கையின் ஆசிரியர் அஜித் சமரநாயக்க, தாராக்கி சிவராம், தமிழோசை ஆனந்தி, விரிவுரையாளர் ஜெயதேவ உயங்கொட போன்றோர் முன்னிலையில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கைதிகள் ஒப்படைக்கப்பட்டார்கள்.

ஒருபக்கம், உண்ணாவிரதமிருந்தவர்கள் செத்து விடுவார்கள் என்ற நிலையிலும் சிறிதும் இரக்கம் காட்டாத சிங்கள பேரினவாத அரசு. இன்னுமொருபுறம் கைதிகளின் உண்ணாவிரதத்தை அடாவடியாகக் கையாண்ட ஜெயலலிதா தமிழ் நாடு மற்றும் இந்திய அரசு.

ஆனால், இடையிலிருந்த புலிகள் அமைப்பு மனிதாபிமானத்தை வெளிக்காட்டிச் சாவை நெருங்கிய உண்ணா விரதிகளை விடுத்திருந்தார்கள்.

போராடுபவர்களுக்கு தான் போராட்டங்களின் வலியும் வேதனையும் தெரியும். ஒடுக்குபவனால் அதை உணர முடியாது. ஒடுக்குபவர்களின் மனம் எப்போதும் கொடூரமானதாகத் தான் இருக்கும். 2012-13 காலப்பகுதியில் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதி இருவரை அடித்து கொலை செய்தவர்கள் இவர்கள் தான்.

தியாகி திலீபன் நினைவுக் கூறப்படும் ஒவ்வொரு நிமிடமும் இந்த உண்மை சிங்கள பேரினவாத சமூகமும், அவர்களுடன் சேர்ந்தவர்களும் இதை நினைத்து வெட்கம் கொள்ளவே வேண்டும்.

ஏனெனில் மக்களை ஆழமாக நேசிப்பவர்களால் மாத்திரம் தான் மாபெரும் தியாகங்களைச் செய்யவும், போற்றவும் இயலும்.

புரட்சிக்காரர்கள் எப்போதும் சத்திரசிகிச்சையாளர்கள் போன்றவர்கள். பல சமயங்களில் தீவிரமான வேதனை தரும் சிகிச்சைகளைச் செய்பவர்கள். ஆனால், அது அவர்களின் அன்பு மனதின் வெளிப்பாடு .

@Richard Archidev