கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொசாம்பிக். 1975ஆம் ஆண்டு
புரட்சி வழியே விடுதலையடைந்த மொசாம்பிக் நாடு, அதன் தேசியக் கொடியில் ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கியை வைத்த போது மேற்கு நாடுகள் பல அனத்தத் தொடங்கின.
‘கொடியில் போய் யாராவது ரஷிய ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கியை வைப்பார்களா?’ என்ற அனத்தல் அது.
‘ஏன் வைக்கக் கூடாது? ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கி என்பது மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த போராடும் மக்கள் குழுமத்தின் எழுச்சியின் அடையாளம்’என்று பதில் அளித்தது மொசாம்பிக்கின் புரட்சிகர பிரிலிமோ மக்கள் அரசாங்கம்.
ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போர்க்கருவியை அல்ல, ஓர் இசைக்கருவியை தன் கொடியில் வைத்திருந்தவன் நம் தமிழ்ப் பெரும்பாட்டன் இராவணன்.
இராவணன் என்ற பெயர், இரா வண்ணன் (இரவு நிறத்தவன்), இரவன் என்ற பொருளிலேயே வந்திருக்க வேண்டும். ஆனால் கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்தபோது கைகள் நசுங்க வலியில் கர்ஜித்ததால் ராவன் Ravan என்ற பெயர் வந்ததாக வடக்கே ஒரு கதை உண்டு.
இராவணன் கத்திய கத்தல், உலக உயிர்கள் அனைத்துக்கும் ஒருங்கே வலியை ஏற்படுத்த உலகமே அன்று கதறியதாகவும் ஒரு கதை உள்ளது.
எது எப்படியோ? அன்றே உலகத்தை தன்னோடு ஒன்றாக்கி கதற வைத்திருக்கிறான் எங்கள் பெரும்பாட்டன்.
இனியும் கதற வைப்பான்.