பின்கதவால் பாராளுமன்றம் செல்ல தயாரில்லை – ரணில் விக்கிரமசிங்கே!

162

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்க மறுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது சுமார் 43 வருடங்கள் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற தனக்கு இவ்வாறு பின் கதவு வழியாக பாராளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சித் தலைவர் குறித்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்ள மறுப்பதால் அதனை தனக்கு வழங்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கேட்டுக் கொண்டதன் பின்னர் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஒரே ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் நபர் அடுத்த கட்சித் தலைவர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவதால் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

பரம்பரை அடிப்படையில் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கக்கூடும் என கருதப்படும் ரூவான் விஜயவர்த்தனவிற்கு குறித்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.