விடுதலைப் புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

எழுபதுகளின் ஆரம்ப காலத்தில், சிங்கள இனவாத அடக்குமுறை அரசுக்கு எதிராகத் தமிழ்த் தீவிரவாத இளைஞர்கள் முன்னெடுத்த வன்முறையானது செம்மையாகத் திட்டமிடப்படாத, ஒன்றோடொன்று தொடர்பற்ற, ஒழுங்கமைவற்ற வன்செயல்களாக அங்குமிங்கும் வெடித்தன. இத்தகைய வன்முறைப் போராட்டத்தில் அதிருப்தியடைந்த இளைஞர்கள், புரட்சிகரமான அரசியல் கோட்பாட்டையும் செயற்பாட்டையும் ஆதாரமாகக் கொண்ட ஒரு விடுதலை அமைப்பைத் தேடி அலைந்தார்கள். போராட்ட உணர்வால் குமுறி நிற்கும் தீவிரவாதத் தமிழ் இளைஞர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு வெளிப்பாடு காணும் வகையில் உருப்படியான, புரட்சிகரமான திட்டம் எதுவும் தமிழர் ஐக்கிய முன்னணியிடமோ அன்றி இடதுசாரி இயக்கங்களிடமோ இருக்கவில்லை.

தமிழர் ஐக்கிய முன்னணியைப் பொறுத்தவரையிலே, அதன் அரசியல் கட்டமைப்பு, பழமைவாதக் கருத்தியலைத் தளமாகக் கொண்டது. எனவே, புரட்சிகர அரசியல் செயற்படுவதற்கான தளத்தை வழங்க அதனால் இயலவில்லை. தமிழ் தேசியத் தலைவர்கள் தமிழரின் இலட்சியத்திற்காக பாடுபடுவதாக உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டிருந்த போதிலும், ஒடுக்கப்படும் தமிழினம் விடுதலை பெறுவதற்காக உருப்படியான அரசியல் திட்டம் எதையும் வகுக்கத் தவறிவிட்டார்கள். இந்த உண்மையை தமிழ் மக்கள், குறிப்பாக போராட்ட உணர்வுடைய தீவிரவாத தமிழ் இளைஞர் ஐயந்திரிபறக் கண்டுகொண்டனர். முடிவடைந்த மூன்று தசாப்தங்களாக, தமிழ் அரசியல்வாதிகள் தாம் அறிந்த அனைத்து வெகுசனப் போராட்ட வடிவங்களை நடத்திப் பார்த்து சலித்துப் போனார்கள். சிங்கள அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்தும் அவர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் அவர்கள் நாடாளுமன்ற நாற்காலிகளில் ஒட்டிக் கொண்டிருந்து அவ்வப்போது தமது குமைச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். பாலைவனத்தில் ஒலித்த சப்தமாக அவர்களது குரலுக்கு எவரும் செவிமடுக்கவில்லை. வெற்றுச் சுவருக்கு வேதாந்தம் ஓதும் நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் அரசியல் இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் தலைகீழாக மாற்றிக் கொண்டார்கள். அவர்களது அரசியல் சிந்தனை ஆளும் வர்க்கத்தின் கருத்தியலால், அதாவது சிங்கள-பௌத்த பேரினவாதத்தால் மழுங்கடிக்கப்பட்டிருந்தது. கூட்டுச் சேர்ந்து விட்டுக் கொடுக்கும் சந்தர்ப்பவாத அரசியலைத் தழுவிக் கொண்ட இடதுசாரிகள், தமிழர்களுக்கு எதிராக அரச ஒடுக்குமுறை தீவிரமடைந்தபோது அக் கொடுமையான மெய்நிலையை கண்டும் காணாதது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்த் தேசியப் போராட்டத்தினது புரட்சிகரமான வரலாற்றுப் புறநிலையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்த் தீவிரவாத இளைஞர்களது அரசியல் அபிலாசைகளின் தார்ப்பரியத்தையும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

தமிழ் மாணவர் பேரவை, 1970இல் உருவாகியது. புரட்சிகர அரசியலை அது பரிந்துரைத்தது. மாணவத் தலைவர்கள் போராட்ட வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என விதந்துரைத்தது. அரசின், ‘தரப்படுத்தல்’ என்ற பிரித்து ஒதுக்கும் கல்விக் கொள்கைக்கு எதிராக, மாணவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்தது. கருத்தரங்குகள், மாநாடுகளை ஒழுங்கு செய்து, எதிர்ப்புக் குரல்களுக்கான மேடைகளை வழங்கியது. அரச ஒடுக்குமுறைக்கு எதிராக, நடைமுறைச் சாத்தியமானதும் புரட்சிகரமானதுமான ஆயுத எதிர்ப்புப் போராட்ட வடிவத்தையே மாணவர் பேரவைத் தலைவர்கள் மறைமுகமாகத் தூண்டினார்கள். தாயக விடுதலை உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள் மாணவர் பேரவையின் வழிகாட்டலையும் தலைமையையும் நாடினார்கள்.

மாணவ பேரவையின் தலைவர்கள் வெறும் வார்த்தை வழிகாட்டலுக்கே லாயக்கானவர்களாக இருந்தார்கள். காரிய சாத்தியமான செயற்திட்டம் ஒன்றை செயலளவில் நடைமுறைப் படுத்துவதற்கான தலைமையையோ வழிகாட்டலையோ வழங்க அவர்கள் தயாராக இல்லை. அடக்குமுறை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தி வழி நடத்துவதற்கு வேண்டிய அறிவோ துணிச்சலோ அவர்களிடம் இருக்கவில்லை. மாணவர் பேரவைத் தலைமைப் பீடத்தின் கையாலாகாத் தன்மையால் ஏமாற்றமடைந்த தீவிரவாத இளைஞர்கள் வன்முறைப் போராட்டங்களைத் தனித்தும் குழுக்களாகவும் தாமே தொடுக்கத் தீர்மானம் பூண்டார்கள்.

இதன் விளைவாக, அங்கிங்கென, தாறுமாறான வன்தாக்குதல்கள் இடம்பெற்றன. அரசியல் படுகொலைகள், குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, அரச சொத்துடமைகளுக்கு தீ வைத்தல், அரச வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. அரச ஆயுதப் படையினர், குறிப்பாக காவல்துறையினர் பதிலடியாக தமிழ் இளைஞர்கள் மீது எல்லையற்ற வன்முறையைப் பிரயோகித்தார்கள். பெரும் அளவில் கைது, வழக்கின்றிச் சிறை, சித்திரவதை, கொலை ஆகியவை நாள் தோறும் நடந்தேறின. தீவிரவாத இளைஞர்களுக்கு உற்சாகமும் தார்மீக அதரவும் வழங்கியவர்கள் தமிழ் மாணவர் பேரவையினர் என்பது தெரிந்ததும், பேரவைப் பணிமனை மீது காவல்துறையினர் சோதனை நடத்தி, அதன் தலைவர் சத்தியசீலன் உட்பட ஏனைய தலைவர்களையும் கைது செய்தனர். தாங்கவொணாச் சித்திரவதைக்கு உள்ளான பேரவைத் தலைவர்கள், அரசியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களில் முதன்மையானவர்களின் பெயர்களை ஒப்புவித்திருக்கிறார்கள். காவல்துறையினரின் வேட்டைக்கு தாம் ஆளாகலாம் என்பது கண்டு, முதல்நிலைத் தீவிரவாதிகளில் முக்கியமானவர்கள் தலைமறைவானார்கள்.

அன்று தலைமறைவாகிய இளம் தீவிரவாதப் போராளிகளில் ஒரு அற்புதமான இளைஞரும் இருந்தார். இவர், தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்த ஒரு இளம் மாவீரன். காவல் துறையினரின் தீவிர வேட்டைக்கு இலக்காகியிருந்த அந்த இளம் புரட்சிவாதிக்கு அப்பொழுது வயது பதினாறு. அன்றைய காலத்து விடுதலைப் போராளிகளின் வரிசையில் இவரே வயதில் மிக இளையவராவார். இவரே வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழரின் தேச சுதந்திர இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப் போரியல் பாதைக்கு அத்திவாரமிட்ட வரலாற்று நாயகன்.

யாழ்ப்பாண தீபகற்பத்தின் வடகடலோரப் பட்டினமாகிய வல்வெட்டித்துறையில் 1954 நவம்பர் 26ஆம் நாள் பிரபாகரன் பிறந்தார். வரலாற்றின்படி பார்த்தால், தீரமிகு கப்பலோட்டிகளும், துணிச்சல் மிகுந்த கடத்தல் வேட்டைக்காரரும் வாழ்ந்த இடமாக வல்வெட்டித்துறை கருதப்படுகிறது. சிங்கள இனவாத அடக்குமுறை அரசுக்கு எதிராக தீவிரவாத எதிர்ப்புணர்வை காட்டுவதிலும் வல்வெட்டித்துறை புகழ்பெற்றது. தாயகப் பற்றும், தேசிய விடுதலை உணர்வும் மிக்க நிகரற்ற சுதந்திரப் போராளிகளை பெற்றெடுத்த புனித மண்ணாக இது விளங்குகிறது.

திருவேங்கடம் வேலுப்பிள்ளை, வல்லிபுரம் பார்வதி தம்பதியாரின் கடைசிப் பிள்ளை பிரபாகரன். இவருக்கு இரண்டு சகோதரிகள். ஒரு சகோதரன். அப்பா ஓர் அரசாங்க ஊழியர். மாவட்ட காணி அதிகாரி. அப்பழுக்கற்ற நடத்தை. இனிமையான சுபாவம். மென்மையான போக்கு. அவதிப்பட்டோருக்கு ஓடிச் சென்று உதவும் பாங்கு. ஊரிலும் உலகிலும் பிரபாகரனின் அப்பாவுக்கு நல்ல மதிப்பு.

இளம்பிராயத்தில் மிகுந்த நுண்ணறிவும் விழிப்புணர்வும் கொண்டிருந்த பிரபாகரன், தனது மக்கள் வாழ்ந்த அடக்குமுறையான சூழ்நிலையையும் அவர்கள் அனுபவித்து வந்த ஆழமான துன்ப துயரங்களையும் உணர்ந்து கொண்டார். இன ஒடுக்குமுறையின் கோரமான தன்மையையும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மிருகத்தனமான அட்டூழியங்களையும் சிறுபிராயத்திலிருந்தே, பல வழிகளில் – தனது குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கிராமத்து முதியவர்கள் – ஆகியோரிடமிருந்து அறிந்து கொண்டார். அப்பாவித் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட வதைகளையும் கொடுமைகளையும் கேட்டறிந்தபோது இளம் பிரபாகரனின் இதயத்தில் வெஞ்சினம் பொங்கியது. ஒடுக்கப்பட்ட தனது மக்கள் வாய்மூடி மௌனிகளாக தொடர்ந்தும் இக் கொடுமைகளை அனுபவிக்காது, அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடவேண்டுமென்று பிரபாகரன் எண்ணினார்.

மனிதர்கள் தமது விருப்புகள், அபிலாசைகளுக்கு அமைவாக சுயாதீனமாக வாழும் உரிமைதான் சுதந்திரமென அவர் கருதினார். வெளி அழுத்தங்களிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெறும்பொழுதுதான் உண்மையான சுதந்திரத்தை மனிதர்கள் சுகிக்க முடியும் என்றும் பிரபாகரன் நம்பினார். சுதந்திரம் என்ற இந்த உன்னதமான வாழ்வியல் விழுமியத்தை அடைவதற்கு, சில சூழ்நிலைகளில் பெரும் தியாகங்கள் புரிந்து, அர்ப்பணிப்புகள் செய்து போராடுவது அவசியம் என்றும் அவர் சிந்தித்தார். இளம் புரட்சிவாதியான பிரபாகரனுக்கு சுதந்திரம் என்பது இதய பாசமாயிற்று. சுதந்திரத்திற்காகப் போராடுவது என்பது தணியாத தாகமாயிற்று. பள்ளிப் படிப்பு பிரபாகரனை வெகுவாகக் கவரவில்லை. மானிட சுதந்திரம் பற்றியும், சுந்திரத்தை அடைய மனிதர்கள் தொடுத்த போராட்ட வரலாறு பற்றியும் நிறையக் கற்றறியவேண்டும் என்பதே இளம் பிரபாகரனின் வேட்கையாக இருந்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கொந்தளிப்பான வரலாறு பிரபாகரனை வெகுவாகக் கவர்ந்தது. அக்காலத் தமிழ் அரசியல்வாதிகள் மகாத்மா காந்தியை வழிபட்டனர். காந்திஜியின் அகிம்சைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சாத்வீகப் போராட்ட முறையைத் தழுவினர். பிரித்தானிய குடியேற்ற ஆட்சிக்கு எதிராக வன்முறைப் போர்தொடுத்த சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் ஆகிய கிளர்ச்சியாளரே பிரபாகரனை வெகுவாகக் கவர்ந்தனர். ஆங்கில ஆட்சியாளருக்கு எதிராகத் தலைமறைவுத் தாக்குதல்களை நடத்திவந்த சீக்கிய இளம் புரட்சிவாதியான பகத் சிங்கை விட சுபாஸின் விடுதலைப் போராட்ட வரலாறே பிரபாகரனை வெகுவாக ஈர்த்தது.

பிரித்தானியருக்கு எதிராக இந்திய தேசிய விடுதலையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டமே உகந்த வழியெனக் கருதி, ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைக் கட்டியெழுப்பிய சுபாஸின் துணிச்சலை பெரிதும் மதித்த இளம் பிரபாகரன், அந்த இந்திய சுதந்திர வீரனின் வாழ்க்கை பற்றியும் சிந்தனை பற்றியும் நிறைய வாசித்தார். சுபாஸின் பிரசித்தி பெற்ற உரைகள் இவருக்கு ஊக்கத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்தன. மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும் பிரபாகரன் படிக்கத் தவறவில்லை. காந்திஜியின் அகிம்சைத் தத்துவத்தின் அடிநாதமாக விளங்கிய ஆன்மீக அறநெறிப் பண்புகளுக்கு அவர் மதிப்பளித்தபோதும், அவை தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பொருத்தமாக அமையுமா என்பதில் பிரபாகரனுக்கு ஆழமான ஐயப்பாடு இருந்தது. சிங்கள இனவாத அரசின் ஈவிரக்கமற்ற அடக்குமுறைப் போக்கு அகிம்சைவாத அறநெறிப் பண்புகளுக்கு மதிப்பளிக்கப் போவதில்லை என்பதை தமிழரின் அரசியல் வரலாற்றிலிருந்து பிரபாகரன் ஏற்கனவே அறிந்து கொண்டார். இந்தியக் காவியமான மகாபாரதம் இளம் புரட்சிவாதியான பிரபாகரனை மிகவும் கவர்ந்தது.

மகாபாரதத்தை தீய சக்திகளுக்கு எதிரான ஒரு தர்ம யுத்தமாகக் கண்ட பிரபாகரன், ஈற்றில் தர்மமும் சத்தியமுமே வெற்றிகொள்ளும் என்ற மெய்யுண்மையை இக்காவியம் வாயிலாகத் தெளிந்து கொண்டார். வரலாறு படைத்த தமிழ்ப் பேரரசுகள் பற்றியும், தமிழ்ச் சக்கரவர்த்திகளின் வீரம்செறிந்த வரலாறுகள், படையெடுப்புகள், போர்கள் பற்றியும் பிரபாகரன் நிறைய வாசித்தார். தமிழரின் பெருமை மிக்க வரலாறுகள் அவருக்குப் புத்துணர்வை அளித்தன.

அந்நிய குடியேற்ற ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் ஆயுத வன்முறைப் போரில் குதித்த இந்திய விடுதலை வீரர்களது வாழ்வும் புரட்சிகர சிந்தனையும் இளம் பிரபாகரனை ஆழமாகப் பாதித்தது. பண்டைத் தமிழ் இனத்தின் பழம்பெரும் நாகரீகமும், வீரம்செறிந்த வரலாறும் அவருக்குப் பெருமிதம் அளித்தன. இளம்வயதிலேயே இவற்றையெல்லாம் படித்தறிந்த பிரபாகரன், ஒடுக்கப்பட்டு வாழும் தனது மக்களின் விடுதலைக்காக தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துப் போராட உறுதிபூண்டார். கொடூரமான ஒரு அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் போர்தொடுக்கும் ஒரு புரட்சிவாதி எதிர்கொள்ளவேண்டிய பேராபத்துகள் பற்றி பிரபாகரன் உணர்ந்து கொள்ளத் தவறவில்லை. ஆயினும் தேச விடுதலை என்ற பொதுவான தர்மத்திற்காகச் சாவைத் தழுவவும் அவர் தயாராக இருந்தார்.

பதினாறு வயதிலேயே அரசினால் தேடப்பட்டு, தப்பி ஓடித் திரியும் தலைமறைவு வாழ்வை வரித்துக் கொள்ளவேண்டிய அவல நிலை பிரபாகரனுக்கு ஏற்பட்டது. அதுவும், இரகசிய காவல்துறையினரின் கண்துஞ்சாக் கண்காணிப்பு இவரது சொந்தக் கிராமம் மீது திருப்பப்பட்டு, நள்ளிரவுகளில் இவரது வீடு சுற்றிவளைப்புகளுக்கு இலக்காகியதைத் தொடர்ந்து, தலைமறைவு வாழ்வும் நெருக்கடியானதாக மாறியது. கைதுசெய்யப்படுவதைத் தடுக்க குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்து வாழவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. தங்குவதற்கு வதிவிடமின்றி, நாளுக்கு நாள் அங்குமிங்குமாக அலைந்து திரிவதும், பகலில் பதுங்கி ஒளிந்திருந்து இரவில் மட்டும் நடமாடுவதுமான ஒரு நாடோடி வாழ்க்கை. நிம்மதியாகத் தூங்குவதற்கு வாய்ப்புமில்லை வழியுமில்லை. இந்துக் கோவிலுள்ள மடங்கள், தேர்கள், கூரைகள், அனாதரவாக விடப்பட்ட பாழடைந்த வீடுகள், காய்கறித் தோட்டங்கள் – இப்படியாக அந்தந்த வேளைக்கு கிட்டும் இடங்களில், அதுவும் சில மணிநேரம் மட்டும் தூங்குவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று என்னிடம் ஒருதடவை தனது நாடோடி வாழ்க்கைபற்றி விபரிக்கும்போது பிரபாகரன் சொன்னார்.

பசிவதை அவரை சதா உறுத்தியது. சில சமயங்களில், முழு நாளாகப் பட்டினி கிடந்து துன்புற வேண்டியிருந்தது. பசி தாங்க முடியாமல், சில இரவுகளில், காய்கறித் தோட்டங்களுக்குள் நுழைந்து மரவள்ளிச் செடியைப் பிடுங்கி, கிழங்குகளை தோண்டியெடுத்து, பச்சையாகப் பச்சை மிளகாயுடன் சேர்த்து உண்ணும்போது அமிர்தமாக இருக்குமென என்னிடம் சொன்னார். இளம் போராளியாக விடுதலைப் பாதையில் காலடி வைத்த காலத்திலிருந்தே பசியின் உபாதைக்குப் பழகிக் கொண்டார் பிரபாகரன். தணியாத இலட்சியப் பசி பிரபாகரனின் வயிற்றுப் பசிக்கு தீனி போட்டது. இளம்பிராயத்தில் அனுபவித்த இடர்கள், துன்பங்கள், அவர் எதிர்கொண்ட சோதனைகள், சவால்கள், ஆபத்துக்கள் எல்லாமே அவரது இலட்சிய உறுதிக்கு உரமூட்டின.

தனி மனிதனாக நின்று, தலைமறைவு வாழ்க்கையை வரித்துக் கொண்டு பிரமாண்டமான அரச அடக்குமுறை யந்திரத்தை எதிர்த்து நின்ற இளம் புரட்சிவாதியான பிரபாகரனுக்கு, செம்மையாகத் திட்டமிடப்படாது தனித் தனிச் சம்பவங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வந்த அரசியல் வன்முறைச் செயல்கள் அர்த்தமற்றவையாகப் புலப்பட்டது. இவை, தமிழரின் அரசியல் போராட்டத்தை முன்நகர்த்தப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டார். இவரோடு சமகாலத்தில் அரசியலில் ஈடுபட்டவர்கள் ஒருவர்பின் ஒருவராக காவல்துறையினரால் கைதாகி சிறையில் வாடிக் கொண்டிருந்தார்கள். தனி நபர்களால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட வன்முறை நடவடிக்கைகளும் செம்மையாக ஒழுங்கமைக்கப்படாமல் தேர்ச்சியின்றிக் கையாளப்பட்டதால் அவை பிசுபிசுத்துப் போனதையும் இவர் கண்டறிந்து கொண்டார். தீவிரவாத இளைஞரின் அரசியல் வன்முறைப் போராட்ட நடவடிக்கைகளை ஆழமாகப் பார்த்தபோது, அவை ஏற்படுத்திய எதிர்மறையான அரசியல் விளைவுகளையும், அதனால் தீவிரப்படுத்தப்பட்ட அரச ஒடுக்குமுறையின் பாதிப்புகளையும் அவர் உணர்ந்து கொண்டார். இவற்றிலிருந்து பிரபாகரனுக்கு ஒரு உண்மை தெட்டத் தெளிவாகப் புரிந்தது. ஒழுங்கமைவான ஆயுதப் போராட்ட வழிமுறை வாயிலாக, தேசிய விடுதலையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு புரட்சிகர அரசியல் அமைப்பு அவசியமானதும் வரலாற்றுத் தேவையானதும் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

ஆயுதப் போராட்டத்திற்கு அத்தியாவசியமான ஒரு தலைமை, வழிகாட்டல், ஒழுங்கமைவான கட்டமைப்பு ஆகியவற்றை மாணவர் பேரவைத் தலைவர்கள் வழங்குவார்கள் என்று பிரபாகரன் நம்பியிருந்தார். ஆனால் இப் புரட்சிகரப் பணியை மேற்கொள்வதில் இந்தத் தலைவர்கள் ஈடுபாடு காட்டாததால் இவருடைய எதிர்பார்ப்பு தவிடுபொடியாயிற்று. பேரவைத் தலைவர்கள் கைதாகிச் சிறைப்படுத்தப்பட, பேரவையும் செயலிழந்து செத்துப் போனது. இதனால் உருவாகிய அரசியல் வெற்றிடத்தையும் அதேவேளை தீவிரமாகிச் செல்லும் அரச ஒடுக்குமுறைச் சூழலையும் எதிர்கொள்வதற்கு, புரட்சிகர அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டிய அவசியத் தேவை நிலவியது. இங்கே ஒரு முக்கிய தீர்மானத்துக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் பிரபாகரனுக்கு ஏற்பட்டது. தனது தலைமையின் கீழ் ஆயுதம் தரித்த அமைப்பு ஒன்றை நிறுவுவதென, இறுதியில் அவர் தீர்மானித்தார். இத்தகைய வரலாற்றுச் சூழலிலேயே 1972இல் தமிழ்ப் புலிகள் இயக்கம் வரலாற்று ரீதியாக பிறப்பு எடுத்தது. இதன் ஆரம்பத்தின்போது புதிய தமிழ்ப் புலிகள் என்று அவ்வமைப்பு தன்னை அழைத்துக் கொண்டது. பின்னர், 1976 மே 5 அன்று, அதன் உறுப்பினர்கள் தம் அமைப்பின் பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மீளப் பெயர் சூட்டிக்கொண்டார்கள்.

ஆரம்பத்தில் புலிகள் இயக்கம், ஒரு நகரப்புற கெரில்லா அலகாக தனது கட்டமைப்பை நிறுவிக் கொண்டது. மிக உயர்ந்த அர்ப்பணிப்பும், இலட்சிய உறுதிப்பாடும் கொண்ட இளம் போராளிகளை பிரபாகரன் தனது அணியில் அரவணைத்துக் கொண்டார். தலைமைக்கு விசுவாசமானவர்களாகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது உயிரையே ஈகம் செய்யத் தயாரானவர்களாகவும் புலி உறுப்பினர்கள் விளங்கினர். தேச விடுதலை என்ற அரசியல் இலட்சியத்திற்கு விசுவாசமாக சத்தியப் பிரமாணம் செய்து, மிகக் கண்டிப்பான ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் கோவையைக் கடைப்பிடித்த விடுதலைப் புலிகள் ஆரம்ப காலத்தில் ஒரு தலைமறைவு அமைப்பாகவே விளங்கினர்.

தொடக்கத்தில், கெரில்லாப் போரியல் முறையிலான ஆயுதப் போராட்ட வடிவத்தையே பிரபாகரன் தேர்ந்தெடுத்தார். தமிழீழ மண்ணின் களநிலை யதார்த்த சூழலுக்கு கெரில்லாப் போராட்ட முறையே சாலச் சிறந்த ஆயுதப் போர்வடிவம் என்பது அவரது கணிப்பு. ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் குடியேற்ற வல்லரசுகளின் அடக்குமுறைக்கு எதிராக நிகழ்த்தப்பெற்ற ஆயுதப் போராட்ட வரலாற்று அனுபவங்களிலிருந்து கற்றுத்தேறியவற்றை ஆதாரமாகக் கொண்டே கெரில்லாப் போரியல் வடிவத்தை தேர்ந்தெடுத்தார் பிரபாகரன். ஒரு நவீன அரசின் ஒழுங்கமைவான இராணுவ பலத்தை, பலம்குறைந்த ஒரு சிறிய ஒடுக்கப்படும் இனம் எதிர்கொண்டு போராடுவதாயின் கெரில்லா வடிவப் போரியல் முறையே மிகப் பொருத்தமானது என அவர் முடிவு செய்தார்.

தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கத்தின் ஆயுதக் கிளர்ச்சி சந்தித்த படுதோல்வியானது புரட்சிக் கலை சம்பந்தமாக ஒப்பற்ற பாடங்களை பிரபாகரனுக்குப் புகட்டியிருந்தது. உலகத்தின் வேறு பகுதிகளில் வெற்றியீட்டிய விடுதலைப் போராட்டங்களையும் அவற்றின் போரனுபவத்திலிருந்து வகுக்கப்பட்ட போரியல் கோட்பாடுகளையும் உத்திகளையும் கண்மூடித்தனமாக இலங்கையின் புறநிலைகளுக்கு நடைமுறைப்படுத்த முடியாதென்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எமது சூழ்நிலையில் நிலவும் உள்ளூர் கள யதார்த்தம் மற்றும் அரசியல் வரலாற்றுப் புறநிலைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டும். ஆயுதங்களைக் கையாள்வதற்கான பயிற்சியும் மற்றும் போரியல் முறைகளும் தெரிந்திருப்பதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருந்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டபோதும் தமது போராளிகளுக்கு தகுந்த பயிற்சி அளிப்பதிலும் தமிழ்ப் பகுதிகளில் தலைமறைவு அலகுகளை அமைப்பதிலும் பிரபாகரன் நீண்ட காலத்தை ஒதுக்கினார். வெளிநாடுகளில் ஆயுதப் பயிற்சி பெறுவதை அவர் விரும்பவில்லை. லெபனானில் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஆதரவின் கீழ் ஆயுதப் பயிற்சிக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது அதனைப் பிரபாகரன் நிராகரித்து விட்டார். உள்ளூர் களத்திலேயே போராட்டத்திற்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதால் அக் களத்திலேயே பயிற்சியை அளிப்பது சாலச்சிறந்தது என அவர் கருதினார். பொருத்தமான உத்திகளையும் நன்கு சிந்தித்து, செம்மையாகத் திட்டமிடப்பட்ட தந்திரோபாயப் போர் நடவடிக்கைகளையே பிரபாகரன் வலியுறுத்துவார். உணர்ச்சிவசப்பட்டு, முரட்டுத் துணிச்சலோடு சாதனை புரிந்து காட்ட வேண்டுமென அவசரப்பட்டுச் செயற்படுவதை அவர் அறவே விரும்பவில்லை. புலிகள் இயக்கம் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்தே போராளிகளதும் அமைப்பினதும் பாதுகாப்பில் அவர் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அரச காவல்துறையினர், உளவாளிகள், காட்டிக் கொடுக்கும் துரோகிகள் ஆகியோருக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே ஆயுத வன்முறைத் தாக்குதல்களை நடத்தியபோதும் இயக்கத்தின் இருப்பை பல வருடங்களாக இரகசியமாகவே வைத்திருந்தார் பிரபாகரன். தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சில ஆயுத வன்முறை நடவடிக்கைகளுக்கு 1978 ஏப்ரல் 25 அன்றே விடுதலைப் புலிகள் இயக்கம் உரிமை கோரியது.

விடுதலைப் புலிகளது கெரில்லா முறையிலான ஆயுதப் போராட்டத்தின் தோற்றமானது, தமிழரது தேசியப் போராட்டத்தில் ஒரு புதிய வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. மக்கள் ஆதரவுபெற்ற ஆயுதப் போராட்டமாக அதன் பரிமாணம் விரிவடைந்தது. அரசியல் இராணுவக் கட்டமைப்புகளைக் கொண்ட விடுதலை இயக்கமாக விரைவில் புலிகள் இயக்கம் உருவகம் பெற்றது. சாத்வீக அரசியல் போராட்டங்களில் நம்பிக்கை தளர்ந்து, ஆயுதப் போராட்டம் வாயிலாக அரச அடக்குமுறையை எதிர்க்க வேண்டுமென விரும்பிய தமிழ் இளம் புரட்சிவாதிகளின் அபிலாசைகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பும் செயற்பாடும் அமையப் பெற்றன. மிகவும் நுட்பமான முறையில் போர்த் திட்டங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்து, எதிரியை வியக்கச் செய்யும் வகையில் அவற்றை நடைமுறைப்படுத்திய பிரபாகரன், விரைவிலே தமிழரின் ஆயுதம் தரித்த விடுதலைப் போரின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். அவர் கட்டியெழுப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புரட்சி இயக்கமாக முகிழ்ந்தது.