விடுதலைப் போராட்டப் பற்றுணர்வை எந்தவொரு கட்டத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவன் சாள்ஸ்.
அவனது இள வயதுக்காதலி, உறவு முறைச் சொந்தக்காரியும்தான். இயக்க முகாமில் போராளிகளிடையே நடந்த சாதாரண விவாதம் ஒன்றில், “போராளிகள் போராளிகளையே திருமணம் செய்தல் சிறந்ததாக இருக்கும்”என்ற கருத்து முன்வைக்கப்பட, அக்கருத்தின் தாக்கத்துடன் சாள்ஸ் தன் காதலியிடம் சென்றான். அப்பெண்ணைப் போராளியாக்கும் முயற்சியில் சாள்சும், சாள்சை போராட்டத்தில் இருந்து விலத்தி எடுக்கும் முயற்சியில் அப்பெண்ணுமாக உரையாடல் நடந்தது.

அங்கு காதல் தோற்றது. இல்லையில்லை… சாள்சின் போராட்டப்பற்று வென்றது. காதற் பயணம் நின்றது. சாள்ஸ்சின் விடுதலைப் பயணம் தொடர்ந்தது.
அதன்பின் அவன் கடமைக்குள்ளேயே ஆழமாய் மூழ்கிவிட்டான். குறித்த காலம் வரை தனிப்பட்ட தனது வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படவோ, காதலிக்கவோ நேரமிருக்கவில்லை அவனுக்கு. காலம் ஓடியது. மட்டக்களப்பு சென்றுவந்து வெற்றிகரமான நடவடிக்கையாளன் என்ற வகையில் அவனது பரிமாணம் வளர்ந்திருந்த வேளையில், அவனது திருமணம் கனிந்தது.

முன்னைய அனுபவத்தாலோ அல்லது தொடர்ச்சியான பணிசார்ந்து அவனுள் உருவாக்கியிருந்த இயல்பினாலோ என்னவோ பேச்சுத்திருமணம் என்றே நின்று கொண்டான். மருத்துவப் போராளியை மனையாட்டியாய்க் கொண்டு இனிதான வாழ்க்கையில் அழகான மூன்று பிள்ளைகள். துணையைச் சமமாய் மதித்து, வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்பத்தலைவனாயிருந்தான்.
வாழ்க்கைத்துணை மருத்துவக் கல்விக்காய் தூர இடம் சென்றிருந்த வேளையில் பல மாதங்களாக குழந்தையைப் பராமரிக்கும் நல்ல தந்தையாக, மிக நல்ல கணவனாக விளங்கினான்.
பணியால் இல்வாழ்விற்கும், வாழ்வினால் பணிக்கும் இடையூறின்றி இனிதாய் நகர்ந்தது அவனது வாழ்வு.
புலனாய்வுத் தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர். எமது துறையின் வெளிக்களப் புலனாய்வின் ஒருபகுதிப் பொறுப்பாளனாய்ச் செயற்படத் தொடங்கிவிட்டான். கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும், தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தந்த ஊக்கமும் அவனது செயற்பாட்டில் துணை நின்றன.
அவன் தனது வாழ்விலும் போராட்டத்தை முதன்மைப்படுத்தியே வாழ்ந்தான். சிந்தித்தான்.
நேரடிக் களச் செயற்பாட்டாளனாகவும், பின்னணி இயக்குனராகவும் அவன் பெற்ற பட்டறிவுகள்; எண்ணற்றவை. தமிழீழப் புலனாய்வுப் பட்டறிவினதும், இராணுவச் செயற்பாட்டுப் பட்டறிவினதும் களஞ்சியமான அவன்; வாழ்ந்த காலம் முழுவதும் தேசியம் பற்றியும், தேச விடுதலை பற்றியுமே சிந்தித்தான்.
புலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.
அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன்.
அன்றைய நாளின் பின் இரவில் சாள்சின் பிரிவின் வேதனையுடன் தனிமையில் இருந்தார் தலைவர் அவர்கள். சாள்சின் வித்துடலுக்கான வீரவணக்கத்திற்கு வரச்சொல்லிக் கேட்க “அவனைக் கடைசியாகக் கண்ட அந்த முகமே நினைவில் இருக்கட்டும்”என்றதும், “சாதித்தவன் போய்ச் சேர்ந்துவிட்டான்” என்றதுமே தலைவரின் சுருக்கமான வார்த்தைகளின் சாரம்சமாகும்.
-பொட்டம்மான்-