‘ஒப்பறேசன் தவளை’க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன.
கோபி ஊருக்குப் போனான்.
தாயினதும், தனயனதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரைபுரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்க வேணும்போல இருந்த தனது நீண்டகால மனஉளைச்சலை அம்மா, மகனிடம் இப்போது வெளிப்படுத்தினாள்.
“உனக்குக் காலும் இல்லைத்தானே தம்பி…… இனியும் இயக்கத்தில இருந்து என்னப்பன் செய்யப்போறாய்……?
அந்தத் தாயுள்ளம் ஏக்கங்களோடு ஆதங்கப்பட்டது.
“காலில்லாட்டியும் பரவாயில்லையம்மா…… இயக்கம் என்னைப் பார்த்துக் கொள்ளும்…… நான் கடலில வேலை செய்வன் கடற்புலிகளில படகு ஓடுவன்……”
“கடலில நேவி வந்திட்டா என்னடா தம்பி செய்வாய்……? ……!”
இது அன்னையின் அச்சம். அது இயல்பானது; அவன் புரிந்துகொண்டான்.
புன்னகையோடு பதில் வந்தது.
“பயப்படாதீங்க அம்மா…… பொடியள் இருக்கிறாங்கள் என்னைக் காப்பாத்துவாங்கள்; விடமாட்டாங்கள்.”
அம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைத்தான். இருப்பினும், முகத்தில் திருப்தி தெரிந்தது.
பழைய நண்பர்கள் சேர்ந்தனர்; ‘பிரிந்தவர் கூடினால்……!’ அது ஒரு ஆரவாரமான சந்திப்பு.
“அடுத்த மாவீரர் நாளுக்கு எங்கட வீட்டுக்காரரும் துயிலுமில்லம் போவினமடாப்பா” – கோபி சொல்லி வைத்தான்.
“இவன் நல்ல பகிடிவிடுறான்,” நண்பர்கள் ரசித்துச் சிரித்தனர்.
“எங்கட வீட்டு ஒழுங்கைக்கு ‘கோபி வீதி’ எண்டு பேர்வைக்க வேண்டிவரும்” – கோபி இதையும் சொல்லி வைத்தான்.
நாலைந்து நாட்கள் இனிமையாகக் கழிய, எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கோபி போய்விட்டான்.
1989 ஆம் ஆண்டின் மையப் பகுதியில், அவன் தன்னை ஒரு விடுதலைப்புலி வீரனாக்கிக் கொண்டான்.
‘சேரா பிறாவோ’ முகாமின் 2ஆவது தொகுதியில் பயிற்சி எடுக்கும் காலத்திலேயே, அவனது ஆற்றல்கள் வெளிப்படத் துவங்கின.
மன்னார் மாவட்டப் படையணியிலிருந்து, பல்வேறு சண்டைகளிலும் பங்காற்றித் தனது திறன்களைக் காட்டிய கோபி, சிலாபத்துறை இராணுவ முகாம் மீது நாம் தொடுத்த மிகப்பெரிய தாக்குதல் முயற்சியின்போது, பலத்த காயத்துக்குள்ளானான்.
சிகிச்சை முடிந்து – காயம் மாறி – அவன் வந்த பின்பு, ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி’யின் உருவாக்கத்திற்கென மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்து அனுப்பப்பட்ட புலிகளின் அணி, அவனையும் கொண்டிருந்தது.
சாள்ஸ் அன்ரனி படையணி, அவனது ஆற்றல்களுக்கும் திறமைகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது என்று சொல்லலாம்.
அந்தப் படையணி எதிரியை எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்த வீரன் தீரத்துடன் களமாடினான்.
சாள்ஸ் அன்ரனி படையணியில், கண்ணிவெடிப்பிரிவில் தான் அவனது பணி துவங்கியது. கால அசைவில் தளபதி பால்ராஜின் பாராட்டுக்களைப் பெற்ற போராளிகளுள் ஒருவனாக அவன் வளர்ந்தான்.
சிங்களப் படையினர் விழி இமையாது காவலிருக்கும் அரண்களின் ஊடுகளுக்குள் அந்த வீரனது இரவுகள் கழியும்.
தனது பாதுகாப்பிற்கெனத் தன்னைச்சூழ எதிரி விதைத்து வைத்திருக்கும் மிதிவெடிகளையும் பொறிவெடிகளையும் அகற்றிவிட்டு, அவனது அழிவிற்கென, அவனுக்கு நடுவில் எமது வெடிகுண்டுகளையும் கண்ணிப்பொறிகளையும் நாட்டும் அபாயகரமான பணி அவனுடையதாக இருந்தது.
எதிரி குடியிருந்த இடங்களுக்கெல்லாம் அவன் குண்டு கொண்டு போனான்.
கண்ணிவெடிப் பிரிவில் திறமையான முறையில் செயலாற்றும் போதே துணிகரமாக அவன் பார்த்த வேவு வேலைகளும், வேவுப் பணியில் அவன் காட்டிய ஈடுபாடும்இ அவனை ஒரு வேவுப்படை வீரனாக்கியது.
அவனது ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் வழி அமைத்து நெறிப்படுத்திய தளபதி பால்ராஜ், கண்ணிவெடிப் பிரிவில் செயற்படும் அதே சமயத்திலேயே இராணுவ வேவுப்பிரிவில் செயற்படவும் அவனை நியமித்தார்.
உயிராபத்து நிறைந்த சூழ்நிலைகளில் – எதிரியின் உள்ளங்கையில் ஏறி அவனது கைரேகைகளை மனனஞ்செய்து – மதிநுட்பம் மிக்க விதமாக கோபி செய்த வேவுப் பணிகள் அதிசயமானவை. தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்கின்ற போது, அவற்றின் பயன்பாடுகளின் தார்ப்பரியங்கள் உணரப்பட்டன.
ஆனையிறவுக்குக் கிழக்கே – தட்டுவன்கொட்டியில் – சிங்களப் படையின் 22 காவலரண்களை வீழ்த்திய தாக்குதலின் வெற்றிக்காக, மேஜர் கிண்ணியோடு சேர்ந்து அவன் ஓய்வற்று உழைத்தான். தாக்குதல் இலக்கு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து சண்டை முடிந்து வெளியேறுகின்ற வரை, இடைப்பட்ட காரியங்கள் எல்லாவற்றிலும் கோபி இருந்தான்.
இதன் பின்னர், பூநகரிக்குத் தெற்கே பள்ளிக்குடாப்பகுதிக் காவலரண்கள் மீதான பெரியதொரு தாக்குதலிற்கான தயாரிப்புக்கள் செய்யப்பட்டன. அங்கு கோபி, இரவு பகலின்றிப் பாடுபட்டான். தாக்கும் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு வேவு பார்த்து, தாக்குதல் அணிகளுள் ஒரு தொகுதிக்குப் பாதை காட்டி, தாக்குதல் குழுவோடு களத்திலும் இறங்கி அந்தத் தாக்குதலில் கோபி ஆற்றிய பங்கு, முக்கியத்துவம் மிக்கது. ஆனாலும், ஆற்ற முடியாத பெரும் சோகம் அவனது இதயத்தைக் கவ்விய இழப்பாக, அந்தத் தாக்குதலில் லெப். கேணல் சுபன் களப்பலியாக நேர்ந்துவிட்டது.
அடுத்ததுதான் பலாலி –
சிங்கள ஆட்சியாளர்களையும் படைத்தளபதிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை அது!
பலாலி கூட்டுப்படைத்தளத்தின் கிழக்குப் பகுதியில் – விமான இறங்கு தளத்தின் பாதுகாப்பிற்கென இராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் அமைக்கப்பட்ட 4 கிலோமீற்றர் நீளமான பாதுகாப்பு வியூகத்தைப் புலிப்படை வீரர்கள் பிய்த்தெறிந்த வீர சாதனை அது.
கெரில்லாப் போர் முறையின் ஒரு புதிய பரிமாண வடிவத்தில் புலிகள் நிகழ்த்திய இந்தப் பெருமெடுப்பிலான தாக்குதலின் திட்டத்தை வரைவதற்கு உறுதுணையாக இருந்த முக்கியமானவர்களுள், கோபியும் ஒருவன்.
எதிரியின் ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாக அவதானித்து, ஒவ்வொரு அங்குலத்தையும் துணிகரமாக வேவு பார்த்து, தாக்குதலின் போது தாக்குதலணிகளுக்கு வழிகாட்டியாகச் சென்றதோடு மட்டுமே நின்று விடாது –
போரிடும் வீரனாய்ச் சண்டையில் இறங்கி, இடது காலை ரவை துளைத்துச் சென்ற பின்பும் சண்டையிட்டு, காயமடைந்த – களப்பலியான – தோழர்களுடன் ஆயுதங்களையும் அகற்றும் வரை, களமுனையிலிருந்து தான் வெளியேற மறுத்து, சோர்ந்து விழுந்து, சுய நினைவிழந்து, ‘இனி இயங்காது’ என்ற காலை மருத்துவர்கள் இதயம் நோக அகற்றிவிட……
அந்த வெற்றியின் பிரசவிப்பிற்காக மூன்று மாதகாலமாக – படுக்கையின்றி, பட்டினி கிடந்து – ஓயாது சுழன்று – அல்லும் பகலும் கசங்கிய அந்த விடுதலைப்புலி, உடல் வேதனையோடும் ஆனால் உளநிறைவோடும் படுத்திருந்தது.
ரவையுடைத்துச் சென்ற எலும்பிற்குக் கட்டுப் போட்டுக் கொண்டு, அடுத்த கட்டிலில் படுத்திருந்த நண்பனிடம் கோபி அடிக்கடி சொல்லுவான் –
“கால் போனது கவலைதான்; ஆனா அது ஒரு பிரச்சினை இல்லை போராட்டத்துக்காக செய்யிறதுக்கு இன்னும் எவ்வளவோ வழியிருக்குத்தானே……”
கோபி!
அவன் மிகவும் மிருதுவானவன். எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அவன் நட்புக் கொள்ளும் முறை அபூர்வமானது.
அடுத்தவர்களை அனுசரித்து, அன்புகாட்டி அவன் பழகும் பண்பு அற்புதமானது.
தான் நிற்கும் இடம் எல்லாவற்றையுமே கும்மாளச் சிரிப்பாலும், குதூகலத்தாலும் நிறைத்துவிடும் அவனுடைய குணாம்சம் சிறப்பானது.
இலட்சிய உறுதியாலும், விடாமுயற்சியாலும், செயற்றிறனாலும் வளர்ந்தவன் அவன்.
வேவு வேலைகள் கொடுக்கப்படும் போது – ஒப்படைக்கப்பட்ட பணியை முழுமையாகவும், திறமையாகவும் செய்து முடிக்கும் வரை – ‘செய்து முடிக்க வேண்டும்’ என்ற உணர்வின் உந்துதலோடு – திரும்பத் திரும்பப் போய், முயற்சி எடுக்கும் தன்மை அவனுடையது.
எப்போதும் சண்டைகளைப் பற்றியே பேச்சு; தாக்குதல்களைப் பற்றியே எண்ணம்; போர்த் திட்டங்களைப் பற்றியே சிந்தனை. தளபதி பால்ராஜுடன் அவன் கதைக்காத நாள் கிடையாது; கதைப்பதற்கு பகலென்றும் இரவென்றும் நேரம் கிடையாது; அந்தக் கதைகளிலெல்லாம் போரன்றி வேறெதுவும் கிடையாது.
“அங்கு ஒரு நல்ல ‘ராக்கற்’ இருக்கு”; “இந்த இடத்தில அவன் வழமையா வந்து போறான்”; “அந்தப் பக்கம் அடிக்கக்கூடிய மாதிரி இருக்கு” என்று தான் அந்தப்புலி வீரன் பேசிக்கொண்டிருந்தானே அல்லாமல் – தனது குடும்பத்தின் கஸ்ட நிலையைப் பற்றி, வானமே கூரையான அவர்களின் வாழ்வைப் பற்றி அவன் ஒருபோதும் வாய் திறந்ததில்லை.
அது மலையகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பம்.
கேகாலையில் உள்ள ‘மாவனெல்ல’ தான் சுப்பிரமணியம் ஐயாவினுடைய குடும்பத்தின் பூர்வீகக் குடிநிலம்.
ஒரு அக்காவிற்கும் மூன்று தம்பிகளிற்கும் இடைப்பட்டவனாக, 1973 யூன் 6இல் பிறந்தவனுக்கு செல்வலிங்கம் எனப் பெயரிட்டு, கண்ணன் என்று செல்லமாக அழைத்தனர்.
அந்தக் குடும்பத்தின் நிறைவான பொருளாதார வாழ்வை மட்டுமல்ல, அவர்களின் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் சேர்த்து சிங்களப் பேரினவாதம் சிதைத்தது.
பத்து வருடங்களுக்கு முன்னர், இலங்கைத் தீவையே இரத்த களமாக்கி, தமிழர்கள் மீது கோரமான இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது, விரட்டியடிக்கப்பட்ட குடும்பங்களுள் அதுவும் ஒன்று.
அல்லல்பட்டுவந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களோடு, அந்தக் குடும்பத்தையும் தாங்கிக் கொண்டது தமிழீழம்.
மன்னாரில், பல்லவராயன்கட்டு கிராமத்தில் அவர்கள் குடியேறும் போது, கோபிக்கு பத்தே வயதுதான்.
‘சிங்களவர்களோடு தமிழர்கள் ஒருகாலத்திலும் சேர்ந்து வாழ முடியாது’ என்பது, ஒரு ஆழமான உண்மையாக அந்தப் பிஞ்சு நெஞ்சில் அப்போதேயே பதிந்தது.
நன்றாகப் படிக்கவேண்டுமென்றும், நல்ல அறிவாளியாக வளர வேண்டுமென்றும் அந்தச் சிறுவனுக்கு நிறைய ஆசை. அதில் ஊக்கமும் ஆக்கமும் கொண்ட பள்ளிக்கூட மாணவனாக அவன், 9ஆம் வகுப்புவரை பாடசாலைக்கப் போனான்.
படம் பார்க்கவென்று அம்மா கொடுக்கும் பணத்தை வாங்கிச் சென்று, படிப்பதற்கு புத்தகங்கள் வாங்கி வந்து சேர்க்கும் அளவுக்கு இருந்தது அவனது கற்கும் ஆர்வம்.
ஆனால், உக்கி உதிரும் கூரையும் சொரிந்து சரியும் திண்ணையுமாக அந்தக் கொட்டில் வீட்டின் ஏழ்மை நிலையினால், அவனது ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் ஒத்துழைக்க முடியாநிலை.
இந்த வேதனை அவனது மனதைப் பாரமாக அழுத்தும் வேளைகளில் எல்லாம், தாங்கள் அவலமாக ஓடிவந்த அந்த நாள், அவனது நினைவில் உறைக்கும்.
விரிவாக்கம் கண்டு வந்த விடுதலைப் போராட்டத்தில், தானுமொரு தமிழ்க்குடிமகன் என்ற வகையில், தனக்குரிய பங்கை உணர்ந்துகொள்ள அவன் தவறவில்லை.
படித்து முன்னேறவேண்டுமென ஆர்வத்தோடு வாங்கிய பாடப்புத்தகங்களிற்குள், ஒளித்து வாங்கி வந்த போராட்ட நூல்களை மறைத்துப் படிக்க அவன் துவங்கினான்.
அந்தச் சிறுவன் வளர வளர அவனுள் அரும்பியிருந்த விடுதலை உணர்வும் விஸ்வரூபம் எடுத்து வந்தது. அது ஒரு கட்டாயக் கடமையாகவும் அவனுள் பரவியது.
கடற்புலிகள் அணி அந்த வீரனைத் தனதாக்கிக்கொண்டது. 1993 இன் ஆரம்பத்தில் தான்.
எதிரியானவன் சிறந்த சண்டைப்படகுகளுடனும், நவீன ஆயுதங்களுடனும் கடலில் வருகின்றான். எம்மிடமிருப்பது குலையாத ஆன்ம உறுதியும், எமது உயிரும் தான். இவற்றைக் கொண்டு நாங்கள் அவனைச் சந்தித்தேயாக வேண்டும் என்ற கருத்தைச் சுமந்து வாழ்ந்த அந்த வேங்கையின் கரும்புலிக் கனவு நனவாகஇ சந்தர்ப்பமும் கிடைத்தது.
கிளாலிக் கடலில் எதிரியைத் தேடியலையும் வெடிமருந்துப் படகொன்றுக்கு கோபி சொந்தக்காரனாயிருந்தான்; இன்னொன்றுக்குக் கணேஸ்.
வரதனும் மதனும் உடைத்த பின், நாகதேவன்துறையில் மிஞ்சிக் கிடந்த விசைப்படகுகள் புலிகளின் கைக்கு மாறும் வரை அவைதான் அவர்களின் குறி.
இலக்குகளைத் தேடி அவர்கள் போனார்கள்; ஆனால், இலக்குகள் அவர்களை விட்டுத் தப்பியோடிக்கொண்டிருந்தன.
கடலலைபோல் காலமும் கரைய, வந்து சேர்ந்தன ‘ஒப்பறேசன் தவளை’யின் நாட்கள் –
கோபியின் கடைசி 48 மணிநேரங்கள் அவை –
யாழ். கடல்நீரேரியின் ஓரத்தோடு – கௌதாரி முனைக்கும் பள்ளிக்குடாவிற்கும் மேற்கே – இந்துமா சமுத்திரத்தின் ஆர்ப்பரிக்கும் அலைகளை ஊடறுத்து அவனது படகு விரையும்.
அவனைக் காணும் எதிரியின் பீரங்கிப் படகுகள் மண்டைதீவுப் பக்கமாக எட்டத்துக்கு விலகும்.
“உங்களை நம்பியே தரையில் எங்கள் போராளிகள் போரிடுகின்றார்கள். சமர் முடிந்து அவர்கள் முற்றாக வெளியேறும் வரை நேவி இறங்காமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களிடமுள்ளது”
சண்டைக்கு முன்னர் தலைவர் சொன்னதை ஒவ்வொரு கணமும் அவன் நினைவு படுத்திக்கொண்டான்.
நடுக்கடலில் இயந்திரம் பிசகும், படகு உடனடியாகக் கரைக்கு விரையும்; அவனது ‘அவசரம்’ அவசரப்படுத்தும்; திருத்தவேலை துரிதமாகும்; படகு மீண்டும் புறப்படும். அந்த இரண்டு நாட்களுக்குள் இது அடிக்கடி நடந்தது.
இப்படியாக வந்து வந்து போனவனை – கடைசித் தடவைக்குப் பிறகு – “அதே சிரித்த முகத்தோடு” நாங்கள் காணவில்லை……
எங்கள் கோபி!
‘கடலில நேவி வந்தால் பொடியள் காப்பாத்துவாங்கள்’ என்று அம்மாவிடம் சொல்லி விட்டு வந்தாயா…
எப்படியடா முடியும்?
எங்களால் நெருங்க முடியாத உயரத்தில் நீ;
எங்களால் எட்ட முடியாத உயரத்தில் உனது இலட்சிய வேட்கை!
நண்பா! இந்த இலட்சியத்தை அடையும் வரை – அதே வழிகாட்டலில் – நாம் அணிவகுப்போம்.
சென்று வா!
“மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட இந்த இனிமையானவர்களை நான் அறிவேன். அவர்களது நெஞ்சத்தின் பசுமையில் ஊற்றெடுத்த உணர்வுகளையும் நான் புரிவேன். ஏதோ ஒன்று, மனித விடிவை நோக்கி நகரும் உந்து சக்தியாக அவர்களை ஆட்கொண்டிருந்தது. அந்த விடுதலையின் தாகத்தைத் தீர்ப்பதற்கு, எதையும் செய்ய அவர்கள் தயாராக இருந்தார்கள்” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை, 1994).