சம்பந்தர் ஐயாவின் குசும்பு…

292

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 2015 தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் 2020 தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் இடையில் 6 வித்தியாசம் கண்டு பிடிப்போருக்கு சிறந்த பரிசு அளிக்கப்படும் என்று கூறும் அளவிற்கு அதே விஞ்ஞாபனத்தை மீண்டும் மக்கள் முன் வைத்திருக்கிறார் சம்பந்தர் ஐயா.

பரவாயில்லை. இந்தக் காலத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்து எந்த மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்று சம்பந்தர் ஐயா நினைத்திருக்கக்கூடும்.

அல்லது, தான் என்ன கூறினாலும் அதை தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள் என்றுகூட சம்பந்தர் ஐயா நினைத்திருக்கக்கூடும்.

அவர் என்ன நினைத்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தபால்மூலம் வாக்களிப்புக்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனம் வைக்கப்பட வேண்டும் என்பதைக்கூட ஐயா கவனத்தில் கொள்ளவில்லை.

தபால் மூலம் வாக்களிப்பவர்கள் அனைவரும் படித்தவர்கள். அரச பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் தேவையில்லை என்று ஐயா கருதுகிறாரா? அல்லது அவர்கள் வோட்டு தமக்கு தேவையில்லை என்று கருதுகிறாரா?

இதற்கிடையில் கடந்தமுறை தான் சந்திக்க மறுத்த முன்னாள் போராளிகளை இம்முறை தானே வலிய அழைத்து சந்தித்pருக்கிறார்.

அதுமட்டுமல்ல சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய உதவும்படி கேட்டபோது பேப்பர் படித்துக் கொண்டு திறப்பு தன்னிடம் இல்லை என்று திமிராக கூறியவர் இன்று அதே போராளிகளிடம் கெஞ்சுகிறார்.

வேலை வாய்ப்பு பெற்றால் தீர்வு பெற முடியாமல் போய்விடும் என்றவர் தனக்கு இரண்டு பங்களா, பதவி, 32 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு எல்லாம் கேட்டு வாங்கினார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி மூலம் கிடைத்த 60 வேலை வாய்ப்பில் ஒரு டிறைவர் வேலைக்குகூட முன்னாள் போராளியை நியமிக்காத இந்த ஐயா இப்போது எந்த முகத்துடன் அல்லது என்ன தைரியத்தில் தமிழ் மக்கள் முன் வருகிறார்?

“வன்னி மாட்டுக்கு ஒரு கத்தை வைக்கோல்” என்றுகூறி வன்னி மக்களை முட்டாள்கள் என அன்றைய தமிழ் தலைவர் சுந்தரலிங்கம் கருதினார்.

ஆனால் சம்பந்தர் ஐயா இன்னும் ஒரு படி மேலே போய் தமிழ் மக்களுக்கு மூளையே இல்லை என்று நினைக்கிறார்.

தோழர் பாலன்