ஐநாவுடன் மோதினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் – அரசை எச்சரிக்கும் சம்பந்தன் !

53

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்.

என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்துள்ள ராஜபக்ச அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டுக்களையும், அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான அவரின் கரிசனையையும் நாம் மனதார வரவேற்கின்றோம்.

ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்று இலங்கை அரசு கூறியுள்ளமை பெரிய விடயமல்ல. ஏனெனில், சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களையும், அறிவுரைகளையும் இந்த அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிளுக்கு இராணுவத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை, இப்படியான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகிய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிவில் நிர்வாகத்துறையில் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மிருசுவிலில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றால் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் மீதான இராணுவக் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் துன்புறுத்தல்களும் தொடர்கின்றன.

இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. அது தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக்கூறவும் இல்லை. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் அவற்றை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது.

இந்த உண்மைச் சம்பவங்களையே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குற்றச்சாட்டுக்களாக இலங்கை மீது முன்வைத்துள்ளார். ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை.

அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்த்துள்ளார். அதிலுள்ள பாதகங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை இந்த அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடும் சந்திக்கும்” – என்றார்.