“தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார் “ என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுமந்திரன் புகழ் பாடியுள்ளார்.
வேலிக்கு ஓணான் சாட்சி எனிதைத் தான் சொல்வார்களோ?
நேற்று ஒரு கருத்து. இன்று தலைகீழாக மாற்றி இன்னொரு கருத்து!
இரட்டை நாக்கு நச்சுப் பாம்புகளுக்கு மட்டுமல்ல! இவர்களுக்கும்!
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கியிருந்த செவ்வி தொடர்பாக பெரும் சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
“ முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரனினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பேட்டியொன்றின் மீது எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் இந்த நாட்டு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில், சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார்.
எம்.ஏ. சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை எற்படுத்தும் நோக்கம் கொண்டவையாக உள்ளன.
இப்பேட்டியின் நோக்கம் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஆகிய அனைவர் மத்தியிலும் தற்போது நடைபெற்று வரும் நடைமுறையை குழப்புவதாகும். அத்தகைய தீய முயற்சிகளினால் மக்கள் குழப்பமடையவும் தவறாக வழிநடத்தப்படவும் கூடாது.
70 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் தமிழ் அரசியல் போராட்டம் போன்ற சமத்துவத்திற்கும் நீதிக்குமான ஒரு நீண்ட அரசியல் போராட்ட வரலாற்றின் போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
தமிழர் போராட்டம் தொடங்கிய போது அது ஜனநாயக ரீதியானதாகவும் சமாதான வழியிலானதாகவும் வன்முறையற்றதாகவுமே இருந்தது.
ஜனநாயக வழியிலானதும், சமாதானமானதும் வன்முறையற்றதுமான வழி-வழியில் தமிழர் போராட்டம் தொடங்கி, 30 ஆண்டு காலப்பகுதியின் பின்னர், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். முதல் மூன்று தசாப்தங்களின் போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காணப்பட்டிருப்பின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் தோன்றியிருக்காது.
அகிம்சை வழியில் பற்றுறுதி கொண்டிருந்த தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்தோடு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும்; பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமுல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது.
2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதிவழி தமிழர் போராட்டம் தொடர்ந்தது; இன்னும் தொடர்கிறது. நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் எவ்வாறு அனைத்து மக்களுக்கும் ஒளிமயமானதாக அமையக்கூடும் என்பதை இந்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நீதியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான தீர்வொன்றையே தனது இறுதியான ஆர்வமாகக் கொண்டுள்ள சுமந்திரன், அந்தக் கண்ணோட்டத்திலிருந்தே வினாக்களுக்கு விடையளித்துள்ளார். சில விடயங்கள் மீது அவர் தனது சொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது தேசியப் பிரச்சினைக்கான தீர்வுடன் நேரடியாகத் தொடர்புபடாத விடயங்கள் மீது முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதற்குப் பதிலாக, இத்தகையதொரு நிலைப்பாட்டின் பின்னால் ஒன்றுபட்டு நிற்பதிலேயே நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமானதொரு தீர்வினை அடைவதற்கான, எமது வலிமை தங்கியுள்ளது என்பதை வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்றார்
தாம் செய்யும் தவறுகள்,தம் பலவீனங்கள்,பிழைகள் அறிவீனங்கள் என்பவற்றை மறைக்க தமிழரசு கட்சி தலைவர்களும் சரி,தமிழ்தேசிய கூட்டமைப்பு வேடதாரிகளும் எந்நாளும் இனவாத சிறிலங்கா அரசின் பின்னாலும் சிங்கள இனவாதிகளின் பின்னாலும் ஒளிக்க பின்னின்றதில்லை.இவர்கள் தமிழர்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் மூளையில் கொஞ்சத்தையாவது இனவாத சிங்கள அரசுக்கு எதிராக பயன்படுத்த முயற்சி செய்யலாமே? – Editor