தமிழரின் சமூக நீதி

118

சமூகநீதியின் மற்றொரு சிறப்புக்கூறு – சமுதாயத்தில் உள்ள அனைவரும் சமம். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை வலியுறுத்துவது தான். சங்க காலத்தின் சமூக அமைப்பு, நடப்பு போன்றவைகளை நோக்கும்பொழுது ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமூக அமைப்பு இருந்ததை சில பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

இன்றைய ஜனநாயக ஆட்சியிலேயே அதிகாரத்தில் உள்ள ஒருவரை அவருக்கு சற்று குறைவான அதிகாரம் படைத்த ஒருவருடன் ஒப்புமைப்படுத்தி கூறும்போது அதிகாரம் படைத்தவருக்கு அது ஒரு அவமானச்செயலாக கருதப்படுகிறது. இதேபோல் ஸ்மிருதியை முன்னிருத்தி பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வினை கற்பிப்போர்கள் பிறப்பின் அடிப்படையில் தனக்கு சமமான ஒருவரை தான் நேரிலேயே சந்திப்பார்கள்.

இப்படி தான் காங்கிரஸ் தலைவர் கக்கன் அவர்கள் ஒருமுறை காஞ்சி மகாபெரியவரை சந்திக்க வந்தபோது கக்கன் அவர்களை சாஸ்திரப்படி தீண்டத்தகாத குலத்தை சேர்ந்தவர் என கூறி அவரை வீட்டிற்குள் நுழையவிடாமல் வெளியில் ஒரு மைதானத்தில் ஒருபுறம் பசுமாட்டை தண்ணீர் தொட்டியுடன் கட்டிவைத்து அதன் அருகே கக்கன் அவர்களை அமர வைத்து மறுபுறத்தில் பெரியவர் அமர்ந்தபடி தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது என எழுத்தாளர் உஷா சுப்ரமணியன் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தார். ஏனெனில் இந்த சம்பவம் நடந்ததே உஷா சுப்ரமணியன் அவர்களின் வீட்டில் பெரியவர் தங்கியிருந்த சமயத்தில் தானாம். அப்போது உஷா சுப்ரமணியன் சிறுமியாக தான் இருந்தபோது கண்ட காட்சியாக கூறியிருந்தார்.

அதேபோல் விதவையானதால் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரையும் கிணற்றுக்கு அருகே தான் சந்தித்தாராம். ( ஆறு,குளம் போன்ற நீர் நிலைகளின் மறு கரையில் இருந்தோ மாட்டுத்தொழுவத்திலோதான் தலித்துகள், விதவைகளை சந்திக்கலாமாம். இடையில் தண்னீர்இருப்பது தீட்டுக்கு பரிகாரமாம்).

இப்படி சாஸ்திரப்படி கண்டாலே தீட்டு எனும் நிலையில் கடந்த நூற்றாண்டு வரையில் இருந்தவர்களுக்கு தன்னினும் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவருடன் ஒப்புமைப்படுத்தி கூறினால் அதனை எவ்வாறு அணுகியிருப்பார்கள் என எண்ணிப்பாருங்கள். ஆனால் சங்க காலப்புலவரான மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார் மிக அழகாக அரசனையும் வேடனையும் ஒரே தராசில் வைத்து பாடுகிறார்.

குமரிக்கடல் முழுவதையும் தன் வெண்கொற்றக் குடையின் கீழ் கீழ் கொண்டு வந்து ஆளும் மன்னனாகினும், இரவு பகல் பாராமல் காட்டில் விலங்குகளை வேட்டையாடும் வேடனாக இருந்தாலும் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் ஒன்றுதான் என அரசனுடன் வேடனை ஒப்புமைப்படுத்துகிறார்.

அவர் தனது புறநானூற்று பாடலில் ,

“தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே!” – புறம் 189

ஆக ஒரு அரசனை வேடனுடன் ஒப்பிட்டு கூறி சமத்துவத்தை வலியுறுத்தினாலும் அன்றிருந்த மன்னராட்சி முறையிலும் தமிழ் புலவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறியமுடிகிறது.

நன்றி – Vickey Kannan