மத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து திரும்பியவருக்கே கொரோனா தொற்று – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

மத்தியகிழக்கு நாடொன்றில்இருந்து நாடு திரும்பிய நிலையில் 50 வயதான மதிக்கத்தக்க நபர் விடத்தல்பளையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சுவாச நோய் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

மத்தியகிழக்கு நாடான சவுதிஅரேபியாவில் இருந்து காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 11ம் திகதி நாடு திரும்பியுள்ள நிலையில் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு சுவாச நோய் பிரச்சினை காரணமாக கடந்த 21ம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 22 ம் திகதி வைத்தியசாலையின் கொரோனா தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பரிசோதனைகளின் முடிவின் படி அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னராக 22 ம் திகதி மாலை வைத்தியசாலையின் ஏழாம் விடுதிக்கு மாற்றப்பட்டு அங்குள்ள தனிமைப்படுத்தல் பிரத்தியேக அறையில் அவருக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பின்னர் 25 ஆம் திகதி காலை வைத்தியசாலையிருந்து மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

அங்கு மீண்டும் அவருக்கு சுவாச நோய் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டதன் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் இரத்த மாதிரிகளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகளின் படி அவருக்கு கொரோன தொற்று குறைவான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவர் சிகிச்சை பெற்று வந்த கொரோன தனிமைப்படுத்தல் விடுதியொன்றும் மற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவ விடுதியொன்றில் அக் காலப்பகுதியில் பணிபுரிந்த 4 உத்தியோகத்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான கொரோனா தொற்று பரிசோதனைகள் வரும் 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டும் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் அவர் தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இருந்து வந்த நோயாளி என்ற அடிப்படையில் அதற்கேற்ப சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும். இந்நிலையில் வைத்தியசாலையின் ஏனைய பணியாளர்களுக்கோ ஏனையவர்களுக்கோ தொற்றுக்கான வாய்ப்பு இல்லை எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் வைத்தியசாலை பணிகள் வழமை போன்று தொடரும் என தெரிவித்தார்.

ஏற்கனவே கடற்படை சிப்பாய் என இணையத்தளங்களில் வெளிவந்த செய்தியினை அவர் மறுத்துள்ளார்.