சீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..!

92

சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரிடையாவே ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனப் பேச்சுக்கள், ஏளனப் பார்வைகள், கருத்துத் திரிபுகள், மட்டம் தட்டும் செயல் போன்றவை அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இவையனைத்தும் ஊடகப் போர்வையில் உள்ள பணபலமும் அதிகாரபலமும் மிக்க ஆரிய, திராவிடக் கைக்கூலிகளின் கீழான செயல்கள் தான் என்பதை அவர்கள் மறைக்க நினைத்தும் மறைக்கவியலா கொண்டையின் மூலம் வெளிப்படையாகிறது.

தான் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட முரண்களை, தடைகளைக் களைந்து சீராக்கி சீமான் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அவருக்கு முன்பாக ஓட ஆரம்பித்து இன்றைய கால ஓட்டத்தில் பின்தங்கிவிட்டவர்களின் வெற்றுக் கூச்சல்களே வெளிக்கொணர்கின்றன.

நாம் தமிழர் கட்சி மீதோ அல்லது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதோ அல்லது அடிப்படை உறுப்பினர் மீதோ நேர்மையாக எழுப்பப்படும் விமர்சனங்கள், கேள்விகள், குற்றச்சாட்டுகள் அனைத்தும் எங்களை நாங்களே செதுக்கிக்கொள்ளும் உளியடியாகவே பார்க்கிறோம். அதேவேளையில் அடிப்படை ஆதாரமில்லாமல் உண்மையைத் திரிக்கும் நோக்கோடு கீழ்மைப் படுத்தும் நோக்கோடு எழுப்பப்படும் விமர்சனங்கள், கேள்விகள், குற்றச்சாட்டுகள் முதலில் எங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தினாலும் கூட அதைக் களைய முற்படும் நாம் தமிழர் உறவுகளின் சீரிய முயற்சியால் உண்மை வெளிக்கொணரப்பட்டு அதில் தெளிவடைந்த பல புதிய உணர்வாளர்களை எங்களுடன் உறுதியாகப் பிணைக்கிறது என்பது மிகையாகாது.

ஏனெனில் முதலில் நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் மற்ற கட்சிகளையும் இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் போலவே பத்தோடு பதினொன்று என்றெண்ணி விலகிப்போக முற்படும்வேளையில் திராவிடக் கட்சிகளின் தீவிர சீமான் எதிர்ப்பு பதிவுகளைப் பார்த்து, இவ்வளவு பெரிய கட்சிகள் எதற்காக இவரை இவ்வளவு அதிகமாக விமர்சிக்கின்றன என்ற ஒற்றைக் கேள்வியே சீமான் மற்றும் நாம் தமிழர் மீது மறுபடி பார்வையைத் திரும்பச் செய்தது. அப்போதுதான் சீமான் பேச்சுக்களுக்குப் பொருள் புரிய ஆரம்பித்தது. அரசியல் களத்தில் மண்ணுக்கும் மக்களுக்குமான உரிமைகளை வென்றெடுக்கவும் சீரழிந்துபோன அரசு நிர்வாகத்தில் உண்மையான மாற்றம் வேண்டும் என விரும்பியவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி அறிவாயுதம் ஏந்திப் போராட களம் அமைத்துக் கொடுத்தது.

தலைவனைத் தலைமையேற்காமல் நல்ல தத்துவங்களைத் தலைமையேற்று ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, ஆயிரங்கள் பல இலட்சங்களாகி மாபெரும் இலட்சிய உறுதியோடு சாதி, மதம் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைந்து மண்ணுக்கும் மக்களுக்குமான தமிழர் அறம் சார் தூய அரசியலைக் கட்டியெழுப்பி வருகிறோம்!

சீமானுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பது உங்கள் பெருந்தவறு; இன உரிமைக்கான போராட்டக் களத்தில் பல இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னால் சீமான் நிற்கிறார் என்பதே உண்மை!

நாங்கள் சீமானுக்காக நிற்கவில்லை; சீமானோடு இணைந்து நிற்கிறோம்!

மண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையும் நேர்மையுமாய்ப் போராடிக்கொண்டிருக்கும் போராடத் துடிக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்குத் தன் நேர்மையாலும், கடின உழைப்பாலும், உறுதியான கொள்கைப்பிடிப்பாலும், தளராத தன்னம்பிக்கையாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்காலும், உயிர்நேயப் பண்பாலும், அடுத்தத் தலைமுறைக்கான அரசியலை வேகமாக முன்னெடுத்துச் செல்கிறார் சீமான்.

தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி!

பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது!

அனைத்து உயிர்களுக்குமான தேவையும் அதை நிறைவு செய்யும் சேவை தான் அரசியல்!

போன்ற தத்துவ முழக்கங்களை முன்னிறுத்தி அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சியை முன்னெடுத்துச் செல்கிறோம்.

இந்நிலையில் சீமானை ஏளனப்படுத்தி அவர் பின்னால் இருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களை ஏளனப்படுத்திவிடலாம் என்றெண்ணி சீமானை சிறுமைப்படுத்துவதற்காகக் களமிறக்கி விடப்பட்டுள்ள கருப்பு ஆடுகள் ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்!

சீமானைச் சீண்டுவது அவரோடு இணைந்து நிற்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களைச் சீண்டுவதற்குச் சமம்!

தன்னை வேண்டுமென்றே ஏளனப்படுத்துவதைச் சீமான் தனது பேரன்பினாலும் பெருந்தன்மையாலும் எளிதாகக் கடந்து சென்று விடுவார்.

ஆனால் நாங்கள் அப்படியல்ல!

எங்கள் பாதையில் இருக்கும் நச்சு செடிகளை அப்படியே விட்டுச் சென்றால் இதே பாதையில் பயணிக்கவுள்ள எங்கள் சந்ததியினருக்கு என்றாவது ஒருநாள் நீங்கள் நச்சு மரமாகி பெரும்தடையாக இருப்பீர்கள் என்றால் தொடர்ச்சியாக அடக்கபடும் ஆற்றாமை ஒருநாள் காட்டாறாக மாறும்; அது நச்சு செடிகளை வேரறுத்துச் செல்லும் என்பதை நினைவிற் கொள்க!

பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை!

பைந்தமி ழர்க்கெலாம் உயிரடா விடுதலை! என்ற பாவேந்தன் பாடல் வேறு அவ்வப்போது மூளைக்குள் முழக்கமிடுகிறது..!

நன்றி தமிழன் பிரபாகரன்