வணக்கம் நண்பர்களே..எழுத்துக்களை ஊடறுத்து உள் செல்லும் முன் ஒரு வேண்டுகோள். விருப்பு வெறுப்பின்றி, மனதை சமநிலைப் படுத்திக்கொண்டு இதை வாசித்தால் நன்று.
சீமான். இந்த ஒற்றைப் பெயர் இன்று பலரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் நண்பர்களையோ அல்லது சீமானை எனக்குப் பிடிக்கும் என்று சொல்பவர்களையோ பார்த்த உடனேயே பதறிப்போய் அவர்களிடம் தர்க்கம் செய்யத் தொடங்கிவிடுகின்றனர்.
சீமான் வெறுப்பாளர்களே…
திறந்த மனதோடு, சமநிலையான புத்தியோடு ஒரு நிமிடம் நின்று சிந்தித்து சொல்லுங்கள் சீமானை நீங்கள் வெறுப்பதற்கான மிகச்சரியான குறைந்தபட்சம் உங்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரே ஒரு காரணத்தைச் சொல்லுங்கள்.
நல்லது.
இப்போது உங்களுக்கு ஏதோ ஒரு காரணம் தோன்றியிருக்கும் அல்லவா. அந்த காரணத்தை அல்லது அந்த விமர்சனத்தை நீங்கள் நேசிக்கும் கட்சிக்கு அப்படியே பொருத்திப் பாருங்கள். விருப்பு வெறுப்பற்று சொல்லுங்கள் நீங்கள் சீமான் மீது வைக்கும் விமர்சனம் நீங்கள் விரும்பும் கட்சிக்கு கொஞ்சமும் பொருந்தவே பொருந்தாதா ? எனில் சீமானை மட்டும் விமர்சிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது. இன்னும் எளிமையாகவே சொல்கிறேன்.
சீமான் மீது பொது வெளியில் மாற்றுத் தரப்பு நண்பர்களால் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
திமுக, மதிமுக மற்றும் இடதுசாரி தோழர்களால் வைக்கப்படும் பிரதான விமர்சனம் சீமான் மறைமுக பாஜக ஆதரவாளர். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் சாதிய உணர்வோடு இருப்பவர். சீமான் மீது மதம், சாதி சார்ந்து பிரதானமாக வைக்கப்படும் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளை முதலில் பார்ப்போம்.
திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். அது ஆரியத்திற்கு எதிரானது. திராவிடத்தை மறுப்பது என்பது ஆரியத்திற்கு வலு சேர்ப்பது போலாகும். என்பதே திராவிட சித்தாந்தவாதிகள் மற்றும் திராவிடக் கட்சிகளின் விமர்சனம்.
நல்லது திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரானது. ஆரியத்தை வீழ்த்துவதே பிரதான நோக்கம் என்று சொன்னது திமுக. 1967 தேர்தலில் அதே திமுக வால் குல்லுகப்பட்டர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட, குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தார் என்று திமுக இப்போது வரை கடும் விமர்சனத்தை முன் வைக்கும் ஆரியரான, ராஜாஜியுடன் தேர்தலில் கூட்டணி வைத்தது திமுக. ஆரிய ராஜாஜியால் மூடப்பட்ட பள்ளிகளை தெருவுக்கு தெரு திறந்து, மதிய உணவு அளித்து குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்த பச்சைத்தமிழரை , அவர்களின் மொழியில் சொல்வதென்றால் பச்சை திராவிடரான காமராஜரை வீழ்த்தியது திமுக. காமராஜரை வீழ்த்த ஆரியருடன் கைகோர்த்த திமுகவினர் சொல்கின்றனர் சீமானைப் பார்த்து அவர் ஆரிய ஆதரவாளர் என்பது விந்தையிலும் விந்தை.
வாஜ்பாய் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பார்ப்பனரான ஜெயலலிதா விலக்கிக் கொண்டபோது, பார்ப்பனக் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரம் வாய்ப்பே இல்லாமல் போக வேண்டிய சூழலில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்ததோடு தேர்தலில் கூட்டணியும் வைத்து முதல் முறையாக மத்தியில் பாஜக ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியை நிறுவிட துணை நின்றது திமுக. அந்த திமுகதான் சொல்கிறது சீமானை பாஜக வின் மறைமுக ஆதரவாளர் என்பது விந்தையிலும் விந்தை.
நாடி நரம்பெல்லாம் பார்ப்பனத்தன்மை ஊறிப்போய் உள்ள ஒரு மனிதர் ஹெச்.ராஜா. தமிழகத்தில் சாரணர் ( ஸ்கவுட் ) படைக்கான தேர்தலில் கூட வெற்றி பெற வலிமையில்லாத மனிதர், நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கும் பாஜகவைச் சேர்ந்தவர். தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் அவரால் ஒரு கவுன்சிலா் தேர்தலில் கூட வெல்ல முடியாது. அவருக்காக வீதி வீதியாக வாக்குகள் சேகரித்து தேர்தலில் கடும் உழைப்பைச் செலுத்தி ஹெச்.ராஜாவை எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தது திமுக. அந்த திமுக சீமானைப் பார்த்து கேள்வி கேட்பது விந்தையிலும் விந்தை.
காமராஜரையும், கக்கனையும் பார்க்காதவர்கள் இன்றளவும் வாழும் காமராஜராக, கக்கனாகப் பார்ப்பது ஐயா நல்லகண்ணு அவர்களைத்தான். பாஜக உடன் கூட்டணி வைத்த திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் ஐயா நல்லகண்ணுவை தோற்கடிப்பதற்காக அயராது உழைத்ததோடு அவரை தோல்வியடைச் செய்தது மட்டுமின்றி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அழகு பார்த்தது திமுக. அவர்கள்தான் சீமானைப் பார்த்து கேள்வி எழுப்புகின்றனர்.
குஜராத்தில் அப்பாவி இசுலாமியச் சொந்தங்கள் மோடி ஆட்சியின்போது கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டபோது, அதைக் கண்டும் காணாமல் இருந்ததோடு, அப்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து, மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்திருந்த திமுக தான் சொல்கிறது நண்பர்களே சீமானை நம்பாதீர்கள் என்று.
மக்களவையில் முத்தலாக் மசோதாவை ஆதரித்து வாக்களிக்கிறது அதிமுக, மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்க மனமின்றி வெளிநடப்பு செய்கிறது. அந்த அதிமுக. அதே அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவோடுதான் நிறைவேறுகிறது சிஏஏ மசோதா. மக்களவையில் ஒரு நிலைப்பாடு மாநிலங்களைவியல் ஒரு நிலைப்பாடு என்றிருக்கும் அதிமுகவிற்கு கொஞ்சமும் சளைக்காமல் என்.ஐ.ஏ. மசோதாவை ஆதரித்து வாக்களித்த திமுக அடுத்த நாள் முரசொலியில் என்.ஐ.ஏ. மசோதா சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது என்று நீலிக்கண்ணீர் வடித்தது. எனில் அந்த மசோதாவை ஏன் ஆதரித்தீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பினால் அவர்கள் உங்களை நோக்கி ஒரு எதிர்கேள்வி கேட்பார்கள், “ தோழர் நீங்கள் ஏன் பாஜக ஆதரவாளர் போல் பேசுகிறீர்கள் “ என்று. சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்று தெரிந்தே சிஏஏ வை ஆதரித்த அதிமுக, என்.ஐ.ஏ.வை ஆதரித்த திமுக இரண்டும் சிறுபான்மை மக்களுக்கான கட்சி. ஆனால், இந்த இரண்டையும் எதிர்த்து தொண்டை கிழிய கத்தி எதிர் பரப்புரை செய்து அதனால் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கை வாங்கிய சீமான் பாஜக ஆதரவாளரா ? விந்தையிலும் விந்தை.
ஒரு விவாதத்தில் யாரென்றே தெரியாத ஒரு சங்கி, சிபிஎம் தோழர் சுந்தரவள்ளியைப் பார்த்து நாம் தமிழர் கட்சிக்கு பதில் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டாராம். எனவே நாம் தமிழர் கட்சிக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதாம். என்ன வாதம் இது. இதுதான் உங்கள் அளவுகோல் எனில், எத்தனை விவாதங்களில், பாஜக வினர், சிபிஎம் கட்சியினரைப் பார்த்து கேரளாவில் காங்கிரஸ் உங்களை நோக்கி வைக்கும் விமர்சனங்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எனில், பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் ரகசிய உறவு என்று சொல்வீர்களா ? இது என்ன சொத்தையான வலுவற்ற வாதம்.
வலுவான ஆதாரப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். மோடி அரசால் கொண்டுவரப்பட்ட உயர் சாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஆதரித்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதை விடவா ஒரு பார்ப்பனத் தன்மை இருக்கப்போகிறது. ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்கும் செலுத்தியதே. அந்த உயர் சாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து தொடர் பரப்புரை செய்து வரும் சீமானைப் பார்த்து ஆதரித்து வாக்களித்த சிபிஎம் சொல்கிறது சீமான் ஒரு பார்ப்பன ஆதரவாளர் என்று, இது விந்தையிலும் விந்தை.
உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுவரை அக்கட்சியின் பொலிட் பீரோவில் ஒரே ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினருக்குக் கூட இடம் கொடுக்கவில்லையே அது ஏன் ?
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட பொலிட் பீரோ உறுப்பினராக ஆக்க மனமில்லாத கம்யூனிஸ்ட் தோழர்கள்தான் பொதுத்தொகுதியிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி, இவரை தமிழராக பார்த்தால் எனக்கு வாக்கு செலுத்து, இல்லையேல் உன் ஓட்டு எனக்கு தீட்டு, உன் ஓட்டே வேண்டாம் என்று மேடைக்கு மேடை பரப்புரை செய்த சீமானைப் பார்த்துச் சொல்கிறது அவர் தமிழ்த் தேசியத்தின் பெயரால் சாதியை வளர்க்கிறார் என்று. விந்தையிலும் விந்தை.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களை சாதியைச் சொல்லி மிக மிக இழிவாகப் பேசியவர் வைகோ. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அவர் மக்கள் நலக்கூட்டணியில் இருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் சந்திப்பில், கலைஞரைப் பார்த்து, இதற்குப் பதில் நீங்கள் வேறு ஏதாவது தொழில் செய்யலாம். உங்கள் பரம்பரைத் தொழில் இருக்கிறதே என்றார். இப்போது கூட பலரும் அந்த தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே அந்த தொழிலைச் செய்யுங்கள் என்று மிக மிக இழிவாகப் பேசினார். அந்த வைகோவை அடுத்த சில ஆண்டுகளிலேயே மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்த திமுகவைச் சேர்ந்த அப்பாவித் தொண்டர்களிடம் ஒரு கேள்வி. இது போல் சாதி ரீதியில் என்றாவது கலைஞரை தரக்குறைவாக சீமான் பேசியதுண்டா ?
ஒரு புறம் உங்கள் தலைவரை மிக இழிவாக பேசிய ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்புவதும், இன்னொருபுறம், அரசியல் ரீதியிலான விமர்சனங்களை முன் வைக்கும் சீமானை தரம் தாழ்ந்து பேசுவதும் வேதனையிலும் வேதனை.
காங்கிரசை கருவறுப்பதே நோக்கம் என்று சொல்லி பாஜக உடன் கூட்டணி வைத்து மோடியை தன் தோள்களில் சுமந்து தமிழகம் முழுவதும் வலம் வந்த வைகோ, அடுத்த தேர்தலிலேயே பாஜக மதவாதக் கட்சி என்று முத்திரை குத்தி, ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம் அவரை பிரதமர் ஆக்குவோம் என்று பேசினார்.. அடுத்த சில மாதங்களிலேயே டெல்லி சென்று அத்வானியின் காலில் விழுந்து வணங்கினார்.
பின் மீண்டும், ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்த படுபாதகச்செயலை செய்தது காங்கிரஸ் கட்சிதான் என்று வீரவேசமாக பேசினார். இதற்கு பெயர் சுயமரியாதை. பகுத்தறிவு. ஆனால், தொடர்ந்து தேர்தல் வெற்றி முக்கியமல்ல. தேவை ஆட்சி மாற்றம் அல்ல. அடிப்படை அரசியல் மாற்றம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் சீமான் தெளிவற்றவரா ? கொடுமையிலும் கொடுமை.
திருச்செந்தூரில், முருகன் கோவில் வாயிலில் மேடை போட்டு, இது தமிழர்களின் கோவில், முருகன் தமிழ்க் கடவுள், சமஸ்கிருதம் பேசும் பார்ப்பனர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டதோடு, நாம் தமிழர் ஆட்சிக்கு வந்த உடன் கோவில்களில் பூசை செய்வதற்கு தமிழர்களுக்கே அனுமதியளிக்கப்படும். அதுவும் தமிழிலும் வழிபாடு என்றெல்லாம் பூசி மெழுகாமல் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்தப்படும் என்று முழங்கிய சீமானைப் பார்த்து கேள்வி கேட்பவர்கள் யார் என்று பார்த்தால், நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள், ஜாதகம் பார்த்து தேர்தலில் சீட் கொடுப்பவர்கள், அத்தி வரதரை தரிசிக்க விஐபி – பாஸ் வாங்கிச் சென்றவர்கள் எல்லோரும்தான் சீமானைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.
வட மாநிலங்களில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் அணு உலை அமைக்க ஆதரவு தெரிவிக்கும். தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலைக்கழிவுகளை கர்நாடகாவில் வீணாக மூடிக்கிடக்கும் கோலார் தங்க வயலில் புதைக்க பாஜக உடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். இது குறித்து நீங்கள் கேள்வி எழுப்பினால், காரல் மார்க்ஸ்சில் ஆரம்பித்து உங்களுக்கு ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுக்கும். மாநிலத்திற்கு மாநிலம் வாக்கு வங்கி அரசியலுக்காக வேடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் இவர்கள்தான் தமிழக நலனுக்காக தொடர்ந்து கேள்வி கேட்கும் சீமானை இன அரசியல் பேசுகிறார் என்கிறார்கள். துயரத்திலும் துயரம்!
நிறைவாக, பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் என்று எல்லோரையும் குறித்து சீமான் விமர்சித்து வந்தாலும் திமுக வை மட்டுமே விமர்சிப்பது போல் எண்ணிக்கொள்வதும், திமுகவை விமர்சிப்பதாலேயே அவருக்கு பாஜக சாயம் பூச முயற்சிப்பதையும் நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலம் சீமானை நோக்கி நகரும் இளைஞர்களை உங்கள் பக்கம் இழுக்க முயற்சியுங்கள்.. ஒரு வேளை அது வேண்டுமானால் உங்களுக்கு ஓரளவு வெற்றியைத் தரலாம். மாறாக, அடிப்படையற்ற விமர்சனங்களை சீமானை நோக்கி வீசுவதன் மூலம் அவரின் வெற்றியை உங்களால் ஒருபோதும் தடுக்கவே முடியாது.
இதே போல் நீங்கள் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வைக்கும் விமர்சனங்களுக்கு ஏராளமான பதில்கள் எதிர் கேள்விகள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அவையாவும் உங்களின் கட்சிகளை வழிநடத்திய / வழிநடத்தும் தலைமைகளின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக இருக்கும். எனவே அரசியல் நாகரீகம் கருதி அதை தவிர்த்திருக்கிறேன்.
இல்லையில்லை… கண்டிப்பாக அந்த ஒப்பீடும் தேவையெனில் இந்த கட்டுரையின் இரண்டாம் பாகமாக அதுவே இருக்கும். நீங்கள் அந்த ஒப்பீட்டை எதிர்பார்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
இப்படிக்கு,
சீமானின் தம்பி
தமிழ்த் தேசிய அரசியல் விரும்பி!