செய்திகளுக்கு அதிரடியாக தடைவிதித்த பேஸ்புக் நிறுவனம்

21

ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’ ஊடகம், செய்திகளுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’ சமூக ஊடகத்தில் உள்ளூர் மற்றும் உலக செய்திகளை மக்கள் வாசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் ஆஸ்திரேலியாவில் செய்திகளை பார்ப்பதற்காக ‘பேஸ்புக்’ பக்கங்களை திறந்தபோது அவற்றில் செய்திகள் இல்லாமல் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

‘பேஸ்புக்’ சமூக ஊடக நிறுவனம்,நேற்று எந்தவித முன்அறிவிப்பும் இன்றி ஆஸ்திரேலியாவில் செய்திகளை ‘பேஸ்புக்’கில் தடை செய்து விட்டது.

வெளிநாடுகளில் வாழ்கிற ஆஸ்திரேலிய மக்களும் கூட ‘பேஸ்புக்’ மூலம் தங்கள் நாட்டு செய்திகளையோ,தாங்கள் வாழும் நாட்டு செய்திகளையோ பார்க்க முடியாமல் போயினர்.

அது மட்டுமின்றி,ஆஸ்திரேலிய அரசின் பல்வேறு அரசு சுகாதார சேவை மற்றும் அவசர கால பக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. வானிலை செய்தி பக்கங்களைக்கூட ‘பேஸ்புக்’ தடை செய்திருப்பது ஆஸ்திரேலிய அரசையும், மக்களையும் ஒரு சேர அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் செய்தி ஊடக பேர மசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா, இணையவழி சமூக ஊடக நிறுவனங்கள், தங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை செய்தி ஊடக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதை கட்டாயம் ஆக்குகிறது.

இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா எடுப்பதற்கு அந்த நாட்டின் ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக்கின் தூண்டுதல்தான் காரணம் என சொல்லப்படுகிறது.

இதற்கு உடன்படாமல்தான் ‘பேஸ்புக்’ சமூக ஊடக நிறுவனம், ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’கில் செய்திகளுக்கு அதிரடியாக தடை விதித்து விட்டது.

‘பேஸ்புக்’கின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‘பேஸ்புக்’கில் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகை மாற்றி அமைக்கக்கூடும். ஆனால் அதற்கு அர்த்தம், அவர்கள் உலகை இயக்க வேண்டும் என்பது அல்ல.

ஆஸ்திரேலியாவை நட்புவட்டத்தில் இருந்து ‘பேஸ்புக்’ நீக்கி உள்ளது. சுகாதார, அவசர செய்திகளை கூட ‘பேஸ்புக்’ இருட்டடிப்பு செய்திருப்பது அராஜகம். இது ஏமாற்றம் அளிக்கிறது.

நான் இந்த பிரச்சினைகள் தொடர்பாக எப்போதும் உலக தலைவர்களை தொடர்பு கொண்டு வந்தேன். எங்களை இதன்மூலம் மிரட்டி விட முடியாது. கூகுள் போல இந்த விஷயத்தில் ‘பேஸ்புக்’ அரசுடன் ஆக்கப்பூர்வமாக நடந்துகொள்ள வேண்டும். நல்ல நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

-ஈழம் ரஞ்சன்-