செம்மணியில் அவள் இன்னமும் அழுகிறாள்…

93

யாழ்ப்பாணம் உங்களை
அன்புடன் வரவேற்கிறது…..

நினைவிருக்கிறதா மக்காள்
இந்த வாசகம் தாண்டிய வளைவு
கடந்துதானே
யாழ்ப்பாணம் புகுவோம்

அந்த வளைவினருகே
இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது
கிருஷாந்தியின் குருதி

வித்தியாவின் கொடுமைதான்
பலருக்குத் தெரியும்
கிருஷாந்தியின் படுகொலை
உலகுக்கே தெரியும்

இருந்தும் மௌனமாய்
கடந்துவிட்டார்கள்
அவள் மரணத்தையும்

பதினொரு காடையர்கள்
குதறிய போது
எவர் பெயர் சொல்லி கதறியிருப்பாள்..?

பாவம் அன்று கொலைஞர்கள்
பிடியில் கதறிய அவளை
கடவுளும் காக்கவில்லை
காக்க வேண்டியவரும் காக்கவில்லை

கிருஷாந்தி
எங்கள் மூத்த அக்கா
பட்டப்படிப்பு படிக்கும் கனவுகளுடன்
வெட்ட வெளியிலே வீணாக்கப்பட்டாளே!

அடேய்..!
ஈழக்கனவு பற்றி
கொச்சையாய் பேசும்
விலாசமறியாதவர்களே ! எம்மவர்
தனியீழம் கோர
இவள் மரணம் ஒன்று போதாதா…?

இரத்த உறவுகளின் காலை
விரித்து பழகியவர்களுக்கு
சிறுமியென்ன
கிழவியென்ன

கற்பழிப்பு என்பது
சீசனுக்கு வரும் ஆன்லைன்
விளையாட்டை போல
மலிவாகிப்போனதால்
எளிதில் மறந்து விடுகிறோம்

இதனால்த்தானே இன்றுவரை
எம் மண்ணில் பூக்கள் கருகுகிறது


இன்று இருக்கும் பலர் எதை அறிவார்
தார்ச்சாலை
தரமான கல்வி
குடிக்க மது
அணைக்க மாது
உல்லாசக் கடற்கரை
உதவாக்கரை வாழ்வு
இவை தவிர
இவர்கள் ஏதும் அறியார்

கிருஷாந்தி போல
தரிசாகிக்கிடக்கும்
எங்கள் சோதரிகள்
பலர் மரண ஓலம் அறியார்


அக்கா கிருஷாந்தி
இருபத்தியொரு ஆண்டுகள்
ஓடி மறைந்துவிட்டது
இன்றுவரை
உன் இறப்பிற்கு தீர்வுமில்லை
எமக்கு ஈழமும் இல்லை

இருந்தும் அக்கா
வலியோடு இளைப்பாறு
வருங்காலம் நிச்சயம்
தமிழ் ஆளும் மீண்டும்

அனாதியன்