தொடரும் தமிழர் நில அபகரிப்பு,தாண்டவமாடும் சிங்களம்

204

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை உட்பட பல மத்திய அரசு சார்ந்த அமைச்சுக்கள் / நிறுவனங்கள் என்பன நில ஆக்கிரமிப்புகளை 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்து வருகின்றன .

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் கூட மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் வடக்கு கிழக்கில் பலவேறு மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் மக்களின் வாழ்விடங்களை / மேய்ச்சல் தரைகளை ஆக்கிரமித்தது

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் ஏறத்தாழ 11,031.64 ஏக்கர் நிலப்பரப்பை “நாயாறு இயற்கை ஒதுக்கிடம்” என்கிற பெயரில் சுவீகரித்து இருந்தது (http://documents.gov.lk/files/egz/2017/1/2003-10_T.pdf)

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வட்டுவாகல்/ வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் 672 ஏக்கர் தனியார் காணியை பொது தேவைகள் என்கிற பெயரில் ஆக்கிரமித்து இருந்தது (http://documents.gov.lk/files/egz/2017/8/2030-44_E.pdf?fbclid=IwAR3vpJotqDOB89ICpYITqjyhQ0iEXgcY07QKEm2zV3YFC9qyLxjKsVDj0L4)

கடந்த 4 ஆண்டுகளில் நடந்த நூற்றுக்கணக்கான சம்பவங்களில் மேற்குறிப்பிடப்பட்டவை வெறும் இரு சம்பவங்கள் மட்டுமே

குறிப்பாக 2015-2019 காலப்பகுதியில் மத்திய அரசின் பங்காளிகளாக இருந்து மத்திய அமைச்சர்களுக்குரிய சகல சலுகைகளையும் அனுபவித்து வந்த தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் நில அபகரிப்பு கொடூரங்களை ஏன் தடுக்க முடியவில்லை என்பதை இப்போதாவது சொல்ல வேண்டும்

அதே போல மத்திய அரசியில் பங்குபற்றியும் தங்களால் தடுக்க முடியாமல் போன நில அபகரிப்புகளை குறைந்த பட்சம் ஆவணப்படுத்த வேண்டும்.

அத்துடன் வாக்களிக்க போகும் மக்களுக்கு கோட்டாபய ராஜபக்சே நிருவாகம் செய்துவரும் /செய்ய போகும் நில ஆக்கிரமிப்புகளில் இருந்து மக்களையும் நிலங்களையும் பாதுகாக்க தாங்கள் வைத்து இருக்கும் பொறிமுறை பற்றி தமிழர் கட்சிக்கு மாற்று சக்திகளாக தங்களை முன் நிறுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , விக்னேஸ்வரன் போன்றவர்களும் தெளிவு படுத்த வேண்டும்

ஒரு தேசிய இனத்திற்கு மொழியும் நிலமுமே ஆதாரம் .

நிலமும் மொழியும் இழக்கப்பட்டால் அந்த தேசிய இனம் தானாகவே அழிந்து விடும்

படம் : நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என்கிற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட 11,031.64 ஏக்கர் நிலப்பகுதி

நன்றி இனமொன்றின் குரல்