போதையில் தமிழர் வீடுகளிற்குள் நுழைந்த சிறிலங்கா சிங்கள இராணுவப்படையின் அடாவடித்தனம்!

89

கொரணா காலங்களிலும் தமிழர் நிலங்களை அபகரித்து ஆக்கிரமித்து கட்டுப்பாடுகள் எமுவும் இன்றி கட்டாக்காலிகளாக மக்கள் மத்தியில் எதேச்சை அதிகாரத்தோடு அலைகிறது சிறிலங்கா இராணுவம்.

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் நள்ளிரவில் சிறிலங்கா இராணுவம் தமிழரொருவரின் வீட்டிற்குள் அடாவடித்தனமாக நுளைந்து மக்களை அச்சுறுத்தித் தாக்கியுள்ளனர்!

இவ்வாறு சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டவருள் ஒருவரான தமிழர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்களைத் தாக்கிக் காயப்படுத்தியது போதாதென்று காப்பாற்ற வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வந்த நோயாளர் காவு வண்டியையும் பாதிக்கப்பட்டவரை அழைத்துச் செல்லவிடாது தடுத்து இருக்கின்றது இனவெறி இராணுவம்!

ஆனால் அதனையும் மீறிக் காவு வண்டி சாரதி தனது பணியை மேற்கொண்டதாக அறிய முடிகிறது.

ஏற்கனவே கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் தமிழ்மக்களுக்கும் சிறிலங்கா சிங்கள இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவாகி பாரிய முறுகல் நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது!

அதனைத் தொடர்ந்து பல அச்சுறுத்தல்கள், சுற்றிவளைப்புக்கள் என அப்பகுதித் தமிழ் மக்கள் பழிவாங்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு, பின் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனை படையினர் தொடர்ச்சியாக தேடிவரும் நிலையில், பொலிஸார் நீதிமன்றில்

“அவ்வாறு ஒரு சந்தேகமான இளைஞனே இல்லை. அவ்வாறு எவரையும் படையினர் தேடவில்லை.” எனக் கூறியிருக்கின்ற நிலையில் தான் நேற்று நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்துள்ளனர்.

எனினும் அந்த இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டில் இருந்தவர்களை மிக மோசமாக அச்சுறுத்தியுள்ளதுடன், தாக்குதலும் நடாத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தைப் பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் தர்க்கம் நடைபெற்றிருந்தபோது அதில் முன்னின்ற இளைஞன் ஒருவனை இராணுவம் தீவிரமாக தேடிவருகின்றது.

எனினும் அவரை இதுவரை கைது செய்ய முடியாத நிலையில் பல தடவைகள் அவருடைய குடும்பத்தார் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கச் சென்றால், நீதிமன்றில் “அவ்வாறு ஒரு நபரே இல்லை, நாங்கள் தேடவும் இல்லை” என கூறிய பொலிஸார், காரணமே இல்லாமல் குறித்த இளைஞனை தங்களிடம் ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்பதாகவும், முறைப்பாட்டை பெற பின்னடிப்பதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தான் நிறை மது போதையில் அந்த வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் வெறியாட்டம் ஆடித் தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதற்குச் சான்றாக அவர்கள் தவறுதலாக விட்டுச் சென்ற தொப்பி, தொலைபேசிகள் உள்ளமை தெரியவருகிறது.

2009 மே தமிழினப்படுகொலை செய்த அதே அரசின் படையினரின் அடாவடித்தனங்கள் 11 ஆண்டுகளின் பின்னும் இன்னும் எம் மண்ணில் …

தொடரும் துயரோடு எம் மக்கள்!

மறுக்கப்படும் நீதி அநீதியை விடக்கொடியது!

எம் மக்களுக்கு நீதி வேண்டும்! நிம்மதியான வாழ்வு வேண்டும்!

அதுவரை தமிழர் எம் போராட்டங்கள் தொடர வேண்டும்!