தேயும் தென் தமிழீழம்,மீண்டெழுமா?

112

இந்த சிறுவனின் படம் வேறு எந்த நாட்டிலும் எடுக்கப்பட்ட படம் அல்ல. எங்களுடைய தாயகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் கதிரவெளிப்பகுதியில் வீதியோரங்களில் ஒரு மரத்தின் கீழ் ஒரு 75 வயதான ஒரு அம்மா, கணவனால் கைவிடப்பட்ட தனது மகள் மற்றும் தன்னுடைய மகளின் மகள் ஆகியோர் இருந்தனர். அந்த வயதான அம்மா, சிறு வயதான தனது பேர்த்தி சேகரித்து வரும் கற்களை ஒரு சிறு சுத்;தியலால் சிறு சிறு கற்களாக உடைத்து ஒரு இடத்தில் சிறிது சிறிதாக சேமித்துக் கொண்டிருந்தார்.

இவ்வாறு உடைத்த கல் சேர்க்கப்பட்ட ஒரு ரக்ரர் லோட் ஆன பின்னர் அதனை 6000 ரூபாவுக்கு விற்கின்றார்கள். ஆனால் ஒரு ரக்ரர் லோட் கல்லு உடைத்து சேமிப்பதற்கு ஒரு மாதகாலம் ஆகுமாம் அந்த வயதான தாய்க்கு. இதுவே தினமும் அவர்களின் வாழ்வாதாரம்.

அவர்களுக்கு சற்றுத் தொலைவில் இன்னொரு குடும்பம் தந்தையுடன் படத்தில் உள்ள அந்த சிறுவனும் கல்லுடைத்துக் கொண்டிருந்தான். தாய் கல்லுடைக்கின்ற கணவனுக்கும் தன் சிறு மகனுக்கும் தேனீர் ஆற்றிக் கொண்டு இருந்தாள். அருகில் அவர்கள் வீட்டு நாய்யும் படுத்திருந்தது.

கற்கை நன்றே கற்கை நன்றே புச்சைபுகினும் கற்கை என்றே என்று உரைக்கின்ற எம்மால் கல்லுடைக்கும் அந்த சிறுவனிடம் கல்வி பற்றி கதைக்கவே மனம் வரவில்லை. அவன் கண்களில் இருந்த ஏக்கம் முகத்தில் இருந்த கல்லின்தூசுகள் அனைத்தும் எங்களுடைய முகத்தில் கரிபூசியது போல் இருந்தது.

உலகப்போர் ஒன்றிலே போரின் கொடுமை தாங்காமல் ஓடி வந்த ஒரு பிள்ளையின் புகைப்படம் போரின் கொடுமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டியது போருக்குப் பிற்பாடும் எங்களுடைய சமூகம் இருக்கின்ற நிலையை இப்புகைப்படம் சுட்டிக்காடுகின்றது.

இப்படி இன்னும் எத்தனை தமிழ் குடும்பங்கள் அங்கே பசியால் வாடி கொண்டு இருக்கின்றனோ தெரியவில்லை.நாம் எல்லாம் ஒரே இனம்,தமிழர்கள்,நமக்குள் ஏன் இத்தனை வேறுபாடுகள்? ஒரு மக்கள் கூட்டம் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கஷ்டப்படும்போது மறுபுறம் இன்னொரு கூட்டம் நாம் ஆடம்பர தேவைகளுக்களை அதிகப்படுத்தி கொண்டு போகிறோம்.பின்னர் எப்படி நாம் அவர்கள. இருக்கும் அதே இனத்தை நம் பெருமையாக நினைக்க முடிகின்றது? எல்லோரும் ஒரே இனம் என்றால்? எம்மை எது தடுக்கின்றது? ஏன் அவர்களால் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கிறார்கள்? கேள்விகளை உங்களிடமே விட்டு விடுகிறேன்.