ஸ்பெயினில் 15 நாட்கள் அவசரகால நிலை பிரகடனம்…

123

ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் கொவிட்-19 நோய்த்தொற்று வீதங்களைக் குறைக்க ஸ்பெயின் அரசாங்கம் 15 நாட்கள் அவசரகால நிலைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு விதிக்கப்பட்ட ஒரு பகுதி முடக்கநிலையை நீதிமன்றம் இரத்து செய்ததையடுத்து, இந்த புதிய உத்தரவினை ஸ்பெயின் அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
மட்ரிட் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள குறித்த கட்டுப்பாடுகளை, 7,000 பொலிஸார் கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்ரிட் சுகாதார அமைச்சர் என்ரிக் ரூயிஸ் எஸ்குடெரோ ஏற்கனவே நடைமுறையில் உள்ள நடவடிக்கைகள் செயற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் ஸ்பெயினில், இதுவரை எட்டு இலட்சத்து 90ஆயிரத்து 367பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32ஆயிரத்து 929பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 5,986பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், 241பேர் உயிரிழந்துள்ளனர்.