போர் குற்றச்சாட்டு – மீண்டும் சர்வதேசத்துடன் முட்டிக் கொள்ளும் இலங்கை!

71

போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுக்கு அரச உயர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விமர்சித்திருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் அந்த விமர்சனங்களை புறந்தள்ளியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகவும், கேர்ணல் பிரியங்கர பெர்ணான்டோ இராணுவத்தின் சொத்துக்களுக்குப் பொறுப்பானவரும் அதேபோல 58ஆவது அணியின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மேலும் பல இராணுவ அதிகாரிகள் அரசாங்கத்தின் முக்கிய இடங்களுக்கு நியமிக்கப்பட்டிருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையும, மனித உரிமைப் பேரவையும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருப்பது குறித்து இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்து.

இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,

போர் முடிந்த நாளில் இருந்து இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் திரிக்கப்பட்டு வருகிற இந்த குற்றச்சாட்டை நாம் நிராகரிக்கிறோம். அதற்கு அடிபணியவும் மாட்டோம்” என்றார்.