சிறுபான்மை மக்கள் அடிமைகளாக வாழவேண்டும் என்பதே பேரினவாதிகளின் சிந்தனையாகவுள்ளது – விக்கிரமபாகு கருணாரட்ன!

79

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரக்கூடாது என்ற நயவஞ்சக நோக்கிலேயே மாகாணசபை முறைமையை ஒழிக்கும் முயற்சியில் இனவாதிகள் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளாட்சிசபையொன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ”அதிகாரப்பகிர்வுக்கான ஓர் தளமாக மாகாணசபைகளே இருக்கின்றன.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் பகிரப்படாதபோதிலும் மாகாணசபைகளுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழர் பிரச்சினைக்காகவே மாகாணசபை முறைமைக்கூட உருவாக்கப்பட்டது.

தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிப்பதற்கு இனவாதிகள் களமிறங்கியுள்ளனர். இதன்பின்னணியில் அரசாங்கமே செயற்படுகின்றது.

தமிழ், முஸ்லிம் மக்கள் அடிமைகளாக வாழவேண்டும் என்பதே பேரினவாதிகளின் சிந்தனையாக இருக்கின்றது. இதற்கு இடமளிக்ககூடாது,

மாகாணசபை முறைமையை பாதுகாப்பதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றுபடவேண்டும். தெற்கிலுள்ள முற்போக்கு சக்திகளை நாம் ஒன்றுதிரட்டுவோம்.

ஜனநாயக விரோத பாதையில் பயணிக்க எத்தனிக்கும் இந்த அரசாங்கத்துக்கு கடிவாளம் போடவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.