முதல்வன் பாணியில் நாடாளுமன்றம் செல்லும் ஊடகவியலாளர் முஷாரப்

329

ஊள்ளூராட்சித் தேர்தலிலே வெற்றி பெறவே தகுதியில்லாத சின்னப் பையன், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்று கேலி செய்தவர்களை நாடாளுமன்றத்தில் எதிர்த்து கேள்வி கேட்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளார் ஊடகவியலாளரான முஷாரப்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த 9-வது நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களை பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்ததாக இந்தத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நான்காவது முறையாக மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார். புதிய ஆட்சியில் அவர் குடும்ப உறுப்பினர்களே அதிகமான அளவில் அங்கம் வகிப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த தேர்தலில் சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்துள்ளன. பழுத்த அரசியல்வாதிகளும் பரம்பரை அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசியலில் முதல்வன் படப்பாணியில் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் நுழைந்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளதை இலங்கை மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய இலங்கை ஊடக நண்பர்கள் சிலர், “இலங்கை பொத்துவிலையைச் சேர்ந்தவர் முஷாரப். தமிழ் திரைப்படங்களில் பாடல் எழுதிவரும் பொத்துவில் அஸ்மினும் இவரும் நண்பர்கள். ஊடகத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதி விருது, கம்பன் கழக விருது பெற்றுள்ளார். வழக்கறிஞரான இவர், அரசுத் தொலைக்காட்சியான வசந்தத்தில் அதிர்வு என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சி இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நிகழ்சிக்கு வருகிற அரசியல்வாதிகளைக் கேள்விகளால் துளைத்தெடுத்து அவர்களை திக்குமுக்காட வைப்பதால் அரசியல்வாதிகள் எரிச்சல் அடைந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டபோது அவரை, முதல்வன் படத்தில் வருவதுபோல பேட்டி கண்டிருக்கிறார் முஷாரப். பதில் சொல்ல முடியாமல் திணறிய அமைச்சர், அந்த நிகழ்ச்சி முடிந்த பின் அவருக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி முஷாரப்பின் வேலைக்கு வேட்டு வைத்தார்.

வசந்தம் தொலைக்காட்சியிலிருந்து நீக்கப்பட்ட முஷாரப்பை அந்த அமைச்சருக்கு போட்டியாக செயல்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இணைத்துகொண்டது. கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக உயர்த்தியது. அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக முஷாரப்பின் பேச்சு மக்களை ஈர்த்ததால் செல்வாக்கு அதிகரித்தது.

அதை புரிந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பொத்துவில் தொகுதியில் முஷாரப்பை வேட்பாளராக அறிவித்தது. பொத்துவில் மக்கள் அனைவரும் இளைஞர் முஷாரப்புக்கு வேலை செய்யத் தொடங்கினார்கள். தேர்தல் செலவுக்கு ஊர்மக்களும், நண்பர்களும் பங்களித்தார்கள்.

உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறவே தகுதியில்லாத சின்னப் பையன், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்று கேலி செய்தவர்களை நாடாளுமன்றத்தில் எதிர்த்துக் கேள்வி கேட்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளார் ஊடகவியலாளரான முஷாரப். ஒருபக்கம் வாரிசு அரசியல், பண அரசியல் வளர்ந்துகொண்டிருக்கும் இலங்கையில், இதுபோன்ற ஊழலுக்கு எதிரான இளைஞர்கள் வெற்றி பெற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது” என்றனர்.

.