434 அரச நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் ராஜபக்க்ஷ குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழ்!

446

ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு கீழ் வருகின்ற 434 அரச நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் ராஜபக்க்ஷ குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவர்களின் சேவைகள் நாட்டுக்காகவா அல்லது குடும்பத்திற்காகவா என்று பார்க்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அமைச்சர்களாக சமல் ராஜபக்‌ஷ , நாமல் ராஜபக்‌ஷ என்ற இருவர், அத்துடன் இராஜாங்க அமைச்சராக ஷசிந்திர ராஜபக்ஷ மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நிபுண என ஒரு வலையமைப்பு உருவாக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 3 அமைச்சுகள் , கோட்டாபய ராஜபக்‌ஷவின் கீழ் 23 நிறுவனங்கள், சமல் ராஜபக்‌ஷவின் கீழ் 17 நிறுவனங்கள், பிரதமர் வகிக்கும் அமைச்சு பதவிகளின் 76 நிறுவனங்களும், நாமல் ராஜபக‌்ஷவின் கீழ் 7 நிறுவனங்களும், ஷசிந்திர ராஜபக்‌ஷவின் கீழ் 6 நிறுவனங்களும் உள்ளன.

அதேபோன்று அமைச்சு பெயர் குறிப்பிடப்படாத முக்கிய 7 நிறுவனங்கள் பஷில் ராஜபக‌்ஷ தலைமையிலான கொரோனா வைரஸ் தொற்றுத் கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் இருக்கின்றன.

இதன்படி 126 நிறுவனங்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தின் கீழ் நிர்வகிக்கப்படு கின்றன. 434 நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் அதாவது 26 வீதமான நிறுவனங்கள் ராஜபக‌்ஷ சகோதரர்கள் குடும்பத்தின் கீழே இயங்குகின்றன என மேலும் தெரிவித்துள்ளார்.