இரண்டு ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு – திட்டமிடும் ராஜபக்ஷர்கள்!

107

புதிய அரசமைப்பை இயற்றும் பணிகள் ஈராண்டு காலப்பகுதிகளில் நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு உத்தேசித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஊடாக தற்போது நடைமுறையிலிருக்கும் 19ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர், புதிய அமைப்பை உருவாக்குவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான ஒத்திசைவு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்பட மாட்டா எனவும் அவை மட்டுப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காணாமலாக்கப்பட்டோர் பணியகம் தொடர்பிலும் சில சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

19 ஆவது திருத்தச் சட்டம் வருவதற்கு முன்னால் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்களாக இருந்தது. இது நீக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்.

19வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழித்த பின் ஜனாதிபதியால் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என்பதுடன் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடிய சூழ்நிலையும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.