மாற்றான் தாய் மனப்பாங்குடன் செயற்பாடும் சிறிலங்கா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் – வைத்தியர் முரளி வல்லிபுரநாதன்!

291

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பிரதேசங்கள் என்று கூறுவோர் மீது இனவாதிகள் என்பதுடன் இவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA )தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாகாணங்கள் தமிழரின் பூர்வீக பிரதேசம் என கூறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் மே‌ற்கொ‌ள்ள‌ப்படவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள கருத்தானது மாற்றான் தாய் மனப்பாங்கை காட்டுவதாக உள்ளது என சமுதாய மருத்துவ வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கு (PSC ) தான் தனிப்பட்ட முறையில் 20 ஜூலை கடிதம் ஒன்றை அனுப்பியதையும், அதை தொடர்ந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) திணிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை பாரபட்சத்துக்குள்ளாகும் உள்ளகப் பயிற்சியை முடித்துக்கொண்ட மருத்துவர்களின் நியமன அட்டவணையை PSC நிராகரித்ததையும் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

மருத்துவர்கள் நியமனத்தில் நீதியையும் சமத்துவத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாத அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் (GMOA) இன்னமும் தன்னுடைய மாற்றான்தாய் மனப்பாங்கை கை விடமுடியாமல் இப்போது எனக்கு எதிராக முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதானது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பிரதேசங்கள் என்று கூறுவோர் இனவாதிகள் என்பதுடன் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரியுள்ளது.

இக் கடிதம் தொடர்பான உண்மை நிலை பின்வருமாறு அமைந்துள்ளது..

அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் அறிந்து இருக்க வேண்டிய ஸ்தாபனக் கோவையின் தொகுதி 1 அத்தியாயம் XXVIII பிரிவு 6 இன் படி அரசாங்க அதிகாரி ஒருவர் தனது தனிப்பட்ட முறையில் நிர்வாக உயர்மட்டத்தில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் அரசாங்க சேவைகள் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு செய்ய உரித்துடையவர் என்பதுடன் பிரிவு 6 இல் குறிப்பிட்ட நியமங்களின் படி எனது கடிதத்தை அனுப்பியுள்ளேன்.

இந்த அடிப்படை தாபனக் கோவை விதிகளை கூட அறியாதவர்கள் தான் தற்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை (GMOA) நிர்வகிக்கிறார்கள் என்பது அவர்கள் அனுப்பியுள்ள இந்த நகைப்புக்குள்ளாகும் கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்தகாலங்களில் பல்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களினாலும் சட்டம் மற்றும் நிர்வாகக் கோவை தொடர்பாக முழுமையான அறிவு கொண்டவர்களினால் இயக்கப்பட்டுவந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இப்போது எவ்வளவு தரம் தாழ்ந்துள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்தக் கடிதத்தில் ஒப்பமிட்டுள்ள பட்டப் பின்படிப்பு என்னும் கற்பூர வாசனையை அறியாத செயலாளர் வைத்தியர் சேனல் பெர்னாண்டோ என்பவர் கொரோனா நிபுணர் போல கொரோனவை கட்டுப்படுத்துவதற்கு குறைந்தது 68000 PCR பரிசோதனைகளை மாதமொன்றுக்கு செய்யவேண்டும் என்று விஞ்ஞான அடிப்படை இல்லாத பொதுமக்களை பயமுறுத்தும் பல அபத்தமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதுடன் அதைப் பற்றி வேறுஒரு பதிவில் விலாவாரியாக ஆராயலாம்.

மேலும்

இரண்டாவதாக 2012 இல் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை கணக்கீட்டின் படி 93.86% தமிழர்களாகவும் 3.06% தமிழ் பேசும் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் வடமாகாணத்தை தமிழ் பிரதேசம் என்று குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்கமுடியும் ? அது போலவே 2012 கணக்கீட்டில் 39.79 % தமிழர்களாகவும் 36.72 தமிழ் பேசும் முஸ்லிம்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழ் (மொழி வழங்கும் ) பிரதேசங்களாக குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

மூன்றாவதாக (GMOA)அரச மருத்துவ அதிகாரிகள் தாய் சங்கம் முல்லைத்தீவிலுள்ள கிளைச் சங்கத்தின் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கடிதம் எழுதப்பட்டதாக தெரிவித்த போதிலும். முல்லைதீவில் உள்ள மருத்துவர்கள் கிளைச் சங்கக் கூட்டமொன்று இது தொடர்பாக கூட்டப்படவில்லை என்றும் கிளையின் நிர்வாக சபை அதிகாரிகள் இந்த கடிதம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ள நிலையில் இந்தக் கடிதமும் முல்லைத்தீவு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கக் கிளையின் பெயரில் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் காண்டீபன் தங்கராசாவினால் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு சூழ்ச்சி என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. என

சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் அவர்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீது கடும் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார்.

Nadarajah Selvakumar