ஈழத்தமிழரின் இருப்பை இந்தியா பாதுகாக்க வேண்டும்! -சிறிதரன்!

214

எமது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் வணக்க நிகழ்வு நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மறைந்த பாடகர் தமிழ் மக்களினுடைய உணர்வுகளோடு பயணித்த ஒருவர் அதற்காக பல பாடல்களை எங்கள் இனம் சார்ந்து எங்கள் தேசம் சார்ந்து பாடி இருக்கின்றார் என்று குறிப்பிட்ட அவர் எங்களுடைய பாதுகாப்பையும் எங்களது வாழ்வையும் இருப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற என்னத்தோடு எங்களை உங்களிடம் ஒப்படைத்து காத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கும் இப்போதுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் இலங்கையில் நடைபெறப்போகும் பல காரியங்களும் எங்களை தாண்டி ஏதோ செய்யப் போகின்றது என்ற அச்சமும் எங்களிடம் இருக்கின்றது. எனவே எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் இந்தியாவிடம் ஒப்படைக்க பட்டிருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் குருகுலராஜா மற்றும் கலை படைப்பாளிகள் கலைஞர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்கு வணக்கம் செலுத்தியதுடன் இரங்கல் செய்தியினையும் துணைத்தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.