கிளிநொச்சியில் 10 வருட அரசியலில் வெறும் 21700 விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளீர் – சிறீதரனுக்கு_பகிரங்க மடல்!

130

திரு. சிறீதரன் அவர்களே,

தமிழ் இனத்தின் மீட்சியை ஊடக அறத்தின் வழி பேசுகின்ற தமிழ்க்குரல் ஊடகம் மீது மீண்டும் நீங்கள் அவதூறுகளை அள்ளி வீசியுள்ளதன் மூலம் நீங்கள் பொய்யின் வடிவம் என்பதை உணர்த்தியுள்ளீர்கள். இன்றைய தினம் கிளிநொச்சியில் நடந்த உங்கள் ஊடக சந்திப்பில் தமிழ்க்குரல் ஊடகத்தை பதிவு செய்யாத ஊடகம் என எந்த ஆதாரமும் இன்றி பொய்யுரைத்திருப்பது இதுநாள்வரை நீங்கள் பொய்யை வைத்து செய்யும் அரசியலுக்கு சான்று.

கிளிநொச்சியில், விக்னேஸ்வரன் அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் பற்றியும் இதன்போது கருத்து கூறிய தாங்கள், தங்களுக்கு கிடைத்த வாக்குகளை குறித்து கணக்கிட்டுக்கொள்ளவேண்டும் என்பதை எடுத்துரைக்கிறோம். வெறும் ஆறு மாதங்களே தனியாக அரசியலை செய்த விக்கினேஸ்வரன், 1,877 வாக்குகளை பெற்றுள்ளார். தாங்கள் பத்து வருடங்களாக கிளிநொச்சியை தனிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் தங்களுக்கு வெறுமனே 21ஆயிரத்து 700 வாக்குகளே கிடைத்துள்ளது.

ஒரு முன்னாள் ஆசிரியரான தங்களுக்கு கணக்கு தெரியும் என்று கருதுகிறோம். 1,877ஐ பத்தால் பெருக்கினால் விக்கினேஸ்வரனுக்கான ஆதரவை தங்களால் புரிந்துகொள்ள முடியும். அத்துடன் 500 ரூபாவும் அரைப் போத்தல் சாராயமும் கொடுத்து இந்த வாக்குகளை விக்னேஸ்வரனின் கட்சி பெறவில்லை. இவை தமிழ் தேசியப்பற்றுள்ள மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள். இன்றும் பணத்தை கொடுத்து ஆட்களை கூட்டும் தங்களுக்கு இந்த விடயம் புரியாமல் இருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல.

கிளிநொச்சியில், விக்னேஸ்வரன் பெற்றிருக்கும் வாக்குகளையும் உங்களுக்கு கிடைத்திருக்கும் வாக்குகளையும் ஒப்பிடுவது சிறுபிள்ளைதனமான செயலாகும். உங்கள் தமிழ் தேசிய துரோகச் செயற்பாடுகளை நிறுத்த தயாரில்லை என்பதே நீங்கள் மீண்டும் வெளிப்படுத்தும் செய்தி. இந்த தேர்தலில் இருந்து நீங்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் நீங்கள் தொடர்ந்தும் பழைய பாதையில் சென்று தமிழரசுக் கட்சியை மண்ணோடு மண்ணாக்கியே தீருவேன் என்பதை சூழுரைத்துள்ளீர்கள்.

வரப்பிரசாதங்களை துறந்து மக்களுக்கு அவற்றை நிவாரணமாக அளிக்க நீங்கள் தயாரில்லை. இரண்டுமுறை வாகனப் பேமிட் எடுத்த நீங்கள் மீண்டும் அதற்கு தயாராகிவிட்டீர்கள். இரண்டு முறை உங்கள் ஆராய்ச்சியாளர் பதவியை மனைவிக்கு கொடுத்த நீங்கள் இம்முறையும் அதனையே செய்யப்போவதாக சொல்கிறார்கள். இனியும் உங்கள் உறவினர்களுக்குதான் வேலை கொடுத்து அவர்களுக்கு பாதிச் சம்பளம் கொடுக்கப் போகிறீர்கள். நீங்கள் எதனையும் கற்றுக்கொள்ளவும் மாற்றவும் தயாராக இல்லை.

தமிழ்க்குரல் உங்களுக்கு எதிராக செய்த பிரசாரங்களை மக்கள் ஏற்றுக்கொண்டதனால்தான் உங்களுக்கு வீழ்ச்சி என்றால் தமிழ்க்குரல் நீதியின் தடத்தில் பயணிப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறீர்கள் அல்லவா? குறிப்பாக மாவையின் பதவியை பறிப்பது உங்கள் நோக்கம் என்பதை நேற்றைய ஊடக சந்திப்பில் ஏற்றுக்கொண்டுள்ளீர்களே? மாவை பதவியை விட்டுத் தர வேண்டும் என்பதைதானே மறை முகமாக கூறியுள்ளீர்கள்?

மாவை சேனாதிராஜா செய்யாதுவிட்ட தவறு எதுவெனில், உங்களுக்கும் சுமந்திரனுக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமையே. சுமந்திரனைவிட மாவை சேனாதிராஜா ஏழாயிரம் வாக்குகளை மாத்திரமே குறைவாகப் பெற்றார். உங்களுக்கு விழுந்த வாக்குகள் தமிழ் தேசிய நீக்கத்திற்கும் புலி எதிர்ப்புக்கும் கிடைத்த வாக்குகளே. தோல்வியை மாவை ஏற்க வேண்டும் எனில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளால் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்காமல் விடுவதே உத்தமம். ஏனெனில் கட்சி தலைவர் மாவையே.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு மாத்திரமின்றி, கிளிநொச்சியின் பின்னடைவுக்கும் வாக்கு இழப்புக்களுக்கும் நீங்களே காரணம்? கட்சியின் வீழ்ச்சிக்கு மாவை காரணம் எனில் கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? எவரையும் கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் நிற்கும் நீங்கள், இனியேனும் வேறு உறுப்பினரிடம் கிளிநொச்சியை பொறுப்புக் கொடுத்து செல்வதே சரியான வழியாகும்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாத உங்களது பக்குவமின்மையும், ஊடகங்கள்மீது அவதூறு பரப்பும் உங்கள் மமதையும் இன்னுமின்னும் தோல்வியில் உங்களை தள்ளும் என்பதை எச்சரிக்கை செய்கிறோம். பழைய சிறீதரனாகவே உங்கள் அராஜக அரசியலை தொடர்ந்தால் எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் படுதோல்வி அடைவீர்கள் என்பதை இப்போதே குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் தவறுகளை களைந்து, அவதூறு சிந்தனைகளை விடுத்து, உங்களை கிருமி நீக்கம் செய்யாவிட்டால், உங்கள் இடத்திற்கு புதிய இரத்தம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வருவார். இம்முறை ஏற்பட்டுள்ள மாற்றம், எதிர்வரும் காலத்தில் தமிழ் அரசியலை முழுதாக சுத்தப்படும். எமது மக்களை பொருட்படுத்தாமல் தான்தோன்றித் தனமாக நடக்கும் உங்கள் அரசியல் வாழ்வுக்கு அதுவே முடிவுரையாக இருக்கும்.

தமிழ்க்குரல் – ஆசிரியர் பீடம் என குறிப்பிடப்பட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.