தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழ வைப்பகத்தில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை அரசாங்கம் அபகரித்தது. எமது மக்களின் தங்கங்களை ஏன் மீண்டும் எமது மக்களுக்கு கொடுக்க மறுக்கின்றீர்கள். அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு இதனை தெரிவித்தார் .

மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் நுண் கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தத்தை காரணம் காட்டி வடக்கு,கிழக்கில் கடந்த காலங்களில் பொருளாதார வசதிகள் அபிவிருத்திகளை கடந்த கால அரசாங்கங்கள் செய்யவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. கிளிநொச்சியில் நுண் கடன் திட்டங்களால் 07 பேர் தற்கொலை செய்து இருக்கின்றார்கள். எனவே இது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.