உள் விவகாரங்களில் ஐ.நா மூக்கை நுழைக்கக் கூடாது – ஜனாதிபதி கோட்டாபய!

68

எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களிலும் தலையீடு செய்யாமல் இருப்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் 75-ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (21-09) இணைய வழியில் பங்கேற்றுப் பேசும்போதே அவா் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்குமான கூட்டுறவானது ஒரு நாட்டின் நன்மைக்காக மற்ற எந்தவொரு நாட்டையும் பணயக் கைதி ஆக்கும் வகையில் அமையக் கூடாது எனவும் கோட்டாபய கேட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதும் பொதுவான மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இன்றைய காலப்பகுதியில் நாடுகளின் இறையாண்மை மற்றும் சமத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபை மதித்துச் செயற்பட வேண்டும்.

அத்துடன் இறையாண்மை கொண்ட நாடுகளில் உள்விவகாரங்ளில் ஐ.நா. தலையீடு செய்யாது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இணைந்து செயற்பட்டதுடன், ஐ.நாவின் முக்கிய பல நிகழ்ச்சித்திட்டங்களில் இலங்கையும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியுள்ளது என்பது குறித்து நான் பெருமை அடைகிறேன் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தாா்.

இந்த வரலாற்று சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

முன்னொருபோதும் இல்லாத வகையில் கோவிட்-19 தொற்று நோயால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவி ஒரு சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உலக மக்கள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

எனினும் கோவிட்-19 தொற்று நோயின் சவாலை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. நாட்டில் முதல் தொற்று நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்னரே நாங்கள் கொரோனா தொற்று நோயைத் தடுப்பதற்கான செயலணியை அமைத்தோம்.

இராணுவம், சுகாதாரத் துறையினர் , தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் உள்ள பொதுமக்கள், அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாகத் தொற்று நோயை எதிர்கொண்டோம்.

இலங்கையின் தொற்று நோய் மீட்பு வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90% அதிகமாக உள்ளது. தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய சிறப்பான செயற்பாடுகள் மூலம் நாங்கள் இந்த இலக்கை அடைந்தோம்.

தற்போது ஒரு மாதத்துக்கு மேலான காலப்பகுதியில் இலங்கையில் ஒரு சமூகத் தொற்றுக் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உரையில் குறிப்பிட்டார்.