கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் சந்திரகுமார் அணியினர் சிறிதரன்(சுவரொட்டிகள்) மீது துப்பாக்கிச் சூடு என முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என சுயேச்சைக் குழு 5இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையைக் கண்டறியும் நோக்கத்துக்காகவே தாம் வழக்குத் தாக்கல் செய்யவுளோம். தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில் தங்களது தோல்வி அச்சத்தில் எங்கள் மீது பொய்யானதும், உண்மைக்குப் புறம்பானதுமான குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். ஆனால் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். அவர்களுக்கு எது உண்மை, எது பொய் என நன்றாகத் தெரியும்.
இருந்தபோதும் பத்திரிகை ஒன்று உண்மைக்கு புறம்பான , எங்கள் தரப்பு கருத்தை கேட்காது ஒரு தரப்புக் கூறிய பொய்யானதும் ஆதாரமற்ற செய்தியினை வெளியிட்டுள்ளது.
எனவே தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுணம் பிழைக்க வேண்டும் என்ற கணக்கில் கிளிநொச்சியில் எமக்கெதிரான சதிகள் இடம்பெற்று வருகின்றன.
எனவே பொது மக்கள் இது தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் .
