சிறிலங்கா அரசில் மலிந்த போர்குற்றவாளிகளும் ஊழல் அதிகாரிகளும்

42

இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஒரு அதிர்ச்சி தரும் எண்ணிக்கையைக் கொண்ட போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ஊழல் செய்ததாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் ஆகியோரைத் தனது புதிய அரசாங்கத்தில் பதவிகளில் நியமித்துள்ளதாக சர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த சட்ட ஆய்வு அமைப்பானது ஜனாதிபதி ராஜபக்சவின் உள்வட்டத்தினை சித்தரித்துக் காட்டும் ஒரு விளக்கப்படத்தை மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. இந்த உள்வட்டமானது ஜனாதிபதியின் கஜபாகு படையணியில் இருந்த ஆறு ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களை உள்ளடக்குவதுடன் இவர்களை அவர் இராணுவத்தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் போன்ற முக்கிய பதவிகளில் நியமித்துள்ளார்.

கஜபாகு படையணியைச் சேர்ந்த இரண்டு ஜெனரல்கள் 1989 இல் மாத்தளை மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவிற்கு கீழ் நேரடியாகப் பணியாற்றினார்கள். இவர் மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாக இருந்தவேளையில் குறைந்தது எழுநூறு சிங்களவர்கள் இராணுவத்தினர்கள் மற்றும் பொலிஸ் காவலில் காணாமற் போயிருந்தார்கள்.

தற்போது முக்கிய உத்தியோகபூர்வ பதவிகளைக் கொண்டுள்ள பதினான்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கோத்தபாய ராஜபக்ச அதிகாரம் மிக்க மற்றும் அதிகம் அஞ்சப்பட்ட பாதுகாப்பு செயலாளராக இருந்த போது சிவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அவரின் கீழ் பணியாற்றினார்கள்.

“இலங்கையானது இப்பொழுது இராணுவ அதிகாரிகள் கூட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர்களில் பலர் 1989 மற்றும் 2009 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அவர்களது பிரஜைகள் கொல்லப்பட்டமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில்; உடந்தையாக இருந்தமைக்காக நீதிமன்றத்தில் ஒருநாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகமானது முன்னர் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் தொடரான கூட்டு ஜ.நா தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு பேராவலுடனான ஒரு நிலைமாற்று நீதி திட்டத்தை முதலீடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு பிரிவுக்கான சீர்திருத்தம் மற்றும் மீளாய்வு மற்றும் வடிகட்டல் நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாடு இருந்தது.

“அதிகாரத்தில் இந்த இராணுவ ஜெனரல்கள் இருக்கையில் இந்த நாடானது அரச அதிகாரிகளை அவர்களுடைய மனித உரிமைகள் பதிவுகளுக்காக மீளாய்வு மற்றும் வடிகட்டல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்போவதில்லை என்பது தெளிவு. ஆயினும் ஜெனிவாவில் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கிய உறுப்புரிமை நாடுகள் இந்த விழுமியங்களைப் பேணுவது அவர்களின் கடமையாகும்” என சூக்கா தெரிவித்தார்.

( International Truth and Justice Project)

நன்றி

Muralitharan