51 நாட்களின் பின் திறந்து 38 வினாடிகளில் 8400 கோடியை இழந்து முடங்கிய சீறீலங்கா பங்குச்சந்தை

மார்ச் 20ஆம் நாள் மூடப்பட்ட சிறீலங்கா பங்குச்சந்தை, 51 நாட்களின் பின், மே 11ஆம் நாள் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு, வெறும் 38 வினாடிகளில் 10 சதவீதத்திற்கு அதிகரித்த வீழ்ச்சியைக் கடந்து நகர, அதன் விற்பனை நிறுத்தப்பட்டது. இவ்வீழ்ச்சியால் அது தன்பெறுமதியில் 8400 கோடி ரூபாய் இழப்பை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

மர்ர்ச் 9ஆம் நாள் முதல், மார்ச் 20ஆம் நாள் வரையிலான இரண்டு வார காலப்பகுதியில், சிறீலங்கா பங்குச்சந்தை 35 ஆயிரத்து 500 கோடி பெறுமதி இழப்பைச் சந்தித்திருந்த நிலையில், நாடு தழுவி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிலையைத் தொடர்ந்து, மூடப்பட்டது. தற்போது சிறீலங்கா மீண்டும் வழமைக்குத் திரும்ப முனைந்துள்ள நிலையில், மே 11 திங்கள் மீண்டும் பங்குச்சந்தை திறக்கப்படும், ஆனால் 2 மணிநேரமே விற்பனை நடைபெறும் என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டது.

ஆனால் திறந்து வெறும் 38 வினாடிகளில், மீண்டும் மூடப்பட்டது. மே 12ஆம் நாள் மீண்டும் திறக்கப்டவுள்ளது. திங்கள் அன்றான 38 வினாடி இழப்புடன், மார்ச் 9ஆம் நாளிற்கு பின்னாலான பங்குச்சந்தை பெறுமதி இழப்பு, 44 ஆயிரம் கோடிகளாக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு 2019 மே மாதத்துடன் ஒப்பிடுமிடத்து, 40 சதவீத வீழ்ச்சியையும் சிறீலங்கா பங்குச்சந்தை சந்தித்துள்ளது.

2018இல் 3.3 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த சிறீலங்கா, 2019இல் மேலும் வீழ்ச்சியடைந்து 2.3 சதவீத வளர்ச்சியையே கண்டது. தென்ஆசியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி வீதமே 6 சதவீதமாக இருந்தபோது, சிறீலங்காவின் இந்த மோசமான பொருளாதாரநிலைமை, தற்போதைய உலகளாவிய கோவிட்-19 வைரஸ் தாக்கத்தினாலான பொருளாதார சரிவில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்பதே நிலை.

வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம், உல்லாசத்துறை மற்றும் ஏற்றுமதிகளிலேயே வருவாய்க்காக பெரிதும் தங்கியுள்ள சிறீலங்கா, 2020இல் பெரும் சவாலைச் சந்திக்கும். பங்குச் சந்தையிலான வெளிநாட்டு முதலீடுகள் பெரிதும் காணாமல் போயுள்ளன. வெளிநாடுகளில் வேலை செய்தவர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றுக் காரணமாக பெரிதும் நாடு திரும்யிபுள்ள நிலையில், அப்பணம் பெரும் வீழ்ச்சியை இவ்வாண்டு சந்திக்கும்.

உலகளாவிய பொருளாதார முடக்கம் தவிர்க்கமுடியாத யதார்த்தமாகியுள்ள நிலையில், ஏற்றுமதிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும். அனைத்துத் துறைகளிலும் பெரும் பாதிப்பை உல்லாசத்துறையே எதிர்கொள்வதால், 2 மில்லியன் உல்லாசப்பயணிகள் என்ற நிலையை ஏய்திய சிறீலங்கா உல்லாசத்துறையிலான வருவாயில் மட்டுமல்ல, அதிலில் இருந்தான பெரும் வேலை வாய்ப்புக்களையும் இழக்கப்போகின்றது.

இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க, பல அரசுகளும் மக்களிற்கும் வியாபாரங்களிற்கும், பல மானியங்களை வழங்கி வருகின்றனர். ஆனால் சிறீலங்காவில் மட்டும் அரசு நலிந்து போயுள்ள தன் மக்களிடமே, அவர்களது மே மாத சம்பளத்தை முழுமையான அரசிற்கு வழங்குமாறு கேட்கிறது. சிறீலங்கா, பங்களாதேஸ், ஜேதான் ஆகிய நாடுகளே தற்போதைய நிலையில், பங்குச்சந்தைகளை நீண்ட நாட்களாக மூடிவைத்திருந்த நாடுகள் வேறு.

1950ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டுவரையிலான 65 ஆண்டுகளில், சராசரியாக 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த சிறீலங்கா, 2020 இல் பொருளாதார வளர்ச்சியில் பெரும் சவாலைச் சந்திக்கிறது. 2018இல் 83.7 சதவீதமாக இருந்த சிறீலங்காவின் துண்டுவிழும் தொகை, 2019இல் 86.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிறீலங்காவின் தரவரிசையை கிரடிட் நிறுவனங்கள் தொடர்ந்தும் குறைத்துவரும் நிலையில், அதிகரித்த வட்டியிலேயே பணத்திற்காக அல்லாடும் நிலையில் சிறீலங்கா திண்டாடுகிறது.