“தமிழ் தேசிய” அரசியலை சரியான தடத்தில் நகர்த்திச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ் மக்கள் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.
எனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் “சைக்கிள்” சின்னத்துக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும். என அந்தக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களாகிய நீங்கள் எடுக்கப் போகின்ற முடிவுகள்தான் எமது இனத்தினுடைய எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்றது. இன்று தாயகத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய கட்சிகளில் தமிழ் தேசிய கொள்கையை சரியான முறையில் முன் கொண்டு செல்கின்ற சரியான தரப்பாக நாங்கள் தான் இருக்கின்றோம்.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையில் அரங்கேறிய இனப்படுகொலையை வலியுறுத்தி ஐநா மனித உரிமைகள் சபைக்குள் ஈழத்தில் அரங்கேறிய “இனப்படுகொலை” விவகாரத்தை முடக்காமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை கொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வை எட்டுவதற்கு போராடுகின்ற ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய நாங்கள் தான் இருக்கின்றோம்.
அதுமட்டுமல்லாமல் தமிழர்களிடையே இனப்பிரச்சினைக்கான தீர்வாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்ற பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற ஒற்றையாட்சி இடைக்கால வரைவை நிராகரிக்கின்ற ஒரே ஒரு தரப்பாக நாங்கள் தான் இருக்கின்றோம்.
ஆகவே தமிழ் மக்களாகிய நீங்கள் இந்தப் பொதுத் தேர்தலில் உங்களது வாக்குகளை சிந்தித்து அளிக்க வேண்டும். சிங்கள கட்சிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களாகிய நாங்கள் நிராகரிக்க வேண்டும். அதேபோன்று சுயேட்சைக் குழுக்களையும் நிராகரிக்க வேண்டும். போலித்தேசியம் பேசும் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய “சைக்கிள்” சின்னத்துக்கு வாக்களித்து நீங்கள் விரும்புகின்ற விதத்தில் இலக்கம் 01 க்கும் மேலும் நீங்கள் விரும்புகின்ற இரண்டு விருப்பு வாக்குகளையும் செலுத்துங்கள் என்றார்.
