பெரும்பான்மை சமூகம் வாழ்கின்ற பிரதேசத்தில் தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? ஆனால் எமது தேசத்தில் சிங்கள பெரும்பான்மை கட்சியின் தமிழர் ஒருவர் வெற்றி பெறுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைமையே இன்றைய காலத்தில் காணப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27.07.2020) நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமாகிய கனகரட்ணம் சுகாஷ் இவ்வாறு தெரிவித்திருந்தார் .
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..
பெரும்பான்மை இனத்தவர் வாழ்கின்ற அனுராதபுரம், அம்பாந்தோட்டை, காலி போன்ற பிரதேசங்களில் ஒரு தமிழ் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை ஈட்ட முடியுமா? ஆனால் சிங்கள கட்சியின் தமிழ் வேட்பாளர் ஒருவர் சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் வாழ்கின்ற எமது தாயக நிலப்பரப்பில் போட்டியிட்டு வெல்லக்கூடிய ஒரு நிலையே இப்பொழுது காணப்படுகின்றது. இதற்கு காரணம் தமிழ் மக்களாகிய நாங்களே.

இனத்திற்கான தேர்தல் ஒன்று வருகின்ற போது நாம் தமிழ் இனம் என்ற அக்கறையில்லாமல் எல்லோருக்கும் வாக்களிக்கின்றோம். ஆனால் எமது சொந்த விடயம் என்ற ரீதியில் எமது வீட்டில் ஒரு ஆணோ பெண்ணோ திருமண பந்தத்தில் இணைகின்ற பொழுது நமது இனத்தைச் சேர்ந்த ஒரு தமிழருக்கே திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். வீட்டுக்கு தமிழ் மாப்பிள்ளை வேணும் ஆனால் இனத்துக்கான தேர்தலில் வேட்பாளரான தமிழ் மாப்பிள்ளை தேவையில்லை என்ற மனோநிலையில் நாம் இருக்கின்றோம். வீட்டை விட இனமே பெரிது என்கின்ற கலாச்சார மனநிலை மாற வேண்டு்ம் என்று சுகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பத்து வருடத்தில் வடக்கிலுள்ள மக்களின் மனநிலையை மாற்றியது போன்று கிழக்கில் உள்ள மக்களின் மனநிலையை வெகுவிரைவில் மாற்றியமைத்து வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுத்து மக்களுக்கோர் நல்ல தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம்.
இறுதி யுத்தகாலகட்ட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சர்வதேசம் பேரம் பேசி இருந்தது.
அதில் நீங்கள் கிழக்கை கைவிடுங்கள் வடக்கில் ஆட்சி அமையுங்கள் என்று கோரிக்கையினை முன்வைத்தனர், ஆனால் தலைவர் அந்தக் கோரிக்கையை முற்றாக நிராகரித்துவிட்டார் . வடக்கில் உள்ளவர்களை விட கிழக்கில் உள்ளவர்களே தமிழ்ஈழ போராட்டத்தில் மிகப்பெரிய தியாகங்களை செய்துள்ளார்கள் என்று அந்தக் கோரிக்கையை எற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது கிழக்கு மாகாணம் மெல்ல மெல்ல தமிழ் மக்களிடம் இருந்து பறிபோய் கொண்டிருக்கின்றது இங்கு இருக்கின்ற இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு அது தொடர்பில் அக்கறையுமில்லை, கவலையுமில்லை. மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள தேசத்திடம் பறிபோய்க்கொண்டிருக்கின்றது. அதனை முற்றாகத் தடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளது.
எனக்கு ஒரு ஆசை இருக்கின்றது இந்த மண்ணை தமிழ்மக்கள் ஆளவேண்டும், இங்குள்ள மக்கள் தமிழ் பேசவேண்டும், இங்குள்ள பிள்ளைகள் தமிழில் படிக்க வேண்டும். தமிழரை திருமணம் செய்ய வேண்டும். நாம் கோயிலுக்கு செல்ல வேண்டும். இதனை எதிர்பார்ப்பது பிழையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள கட்சிகள் கிழக்கு மாகாண மக்களுக்கு பசப்பு வார்த்தைகளை காட்டி ஏமாற்ற முனைகின்றது. அவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாகவும் அபிவிருத்திகளை மேற்கொள்வதாகவும் போலியான வாக்குறுதிகளை வழங்கி கிழக்கில் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிங்கள தேசியவாத கட்சிகளுடன் இணைந்து நகர சபைகளையும், பிரதேச சபைகளையும் ஆண்டுகொண்டு கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுகின்ற சிங்கள இனவாத அமைப்புகளை தடுக்க நாதியில்லாது துணைபோகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பின் வாசல் கதவால் கையூட்டல்களைப் பெற்றுக்கொண்டு விகாரைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்குகின்றனர்.
எனவே இவர்களின் போலியான முகத்திரைகளை கிழித்து கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் சைக்கிள் சின்னமான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கரங்களை பலப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று முன்னணியின் வேட்பாளர் சுகாஷ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.