எதிர்வரும் பொது தேர்தலில் அதிக ஆசனங்கள் பெறுவது தான் தங்கள் இலக்கு என்று திரு சம்பந்தன் அவர்கள் சொல்லி இருக்கிறார் . கடந்த தேர்தலிலும் இவ்வாறான கோசத்தை முன்வைத்து 16 ஆசனங்களுடன் பெரு வெற்றி பெற்ற தமிழரசு கட்சி 2015 ஆம் ஆண்டு நடந்த பாராளமன்ற தேர்தலில் அரசியல் ரீதியான விடயங்களுக்கு மேலதிகமாக பல்வேறு பட்ட மக்கள் நலன் சார்ந்த விடயங்களை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன் வைத்து இருந்தது (தேர்தல் வாக்குறுதிகள்). அதில்,
1. வடக்கு- கிழக்கில் வாழும் இளைஞர்களுக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டின் மூலம் புதிய கைத்தொழிற் துறைகளும் வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படும்
2. முன்னாள் போராளிகளிக்கு வழங்கப்படும் புனர்வாழ்வுத் திட்டங்கள் அவர்கள் தமது வாழ்க்கையை சுயகௌரவத்துடன் மீள ஆரம்பிக்கத்தக்க தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பன அடங்கிய பூரணத்துவமிக்க திட்டங்கள் உருவாக்கப்படும்
3. வடக்கு கிழக்கில் ஆதரவின்றியிருக்கும் 90,000 இற்கும் அதிகமான விதவைகள் போர் விட்டுச் சென்ற ஆழ்ந்த வடுக்களாய் வாடுகின்றனர். அவர்களது ஆளுமையினை விருத்தி செய்து அவர்களது வாழ்க்கையினை மேம்படுத்த தெளிவானதொரு திட்டம் வரையப்படும்
4. குழந்தைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோரதும் தேவைகளும் நிவர்த்தி செய்யப்படும்
5. மீனவர்கள் தமது தொழிலில் சுயாதீனமாக ஈடுபடுவதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வுகள் காணப்படுவதுடன் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான பொருத்தமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும்
6. பனைவளத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவி பெறப்படும்
7. வடக்கு கிழக்கில்; உள்ள துறைமுகங்களையும் மற்றும் மீன்பிடித்துறைமுகங்களையும்; அபிவிருத்தி செய்ய படும்
8. விவசாயத்திற்கு அவசியமான நீர்த் தேவை மற்றும் குடிநீர்த் தேவை என்பவற்றைப் பூர்த்தி செய்யும் பொருட்டும் வடக்கு-கிழக்கில் உள்ள அனைத்து சிறு குளங்களையும் புனர் நிர்மானம் செய்யும் திட்டத்தினை செயலபடுத்த படும்
9. வடக்கில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையினைத் தீர்க்க ஏற்ற வல்லுனர்களின் உதவியுடன் ஆவண செய்ய படும்
10. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் அடங்கலாக வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான விரிவானதொரு நிகழ்ச்சித் திட்டம் இலங்கை அரசாங்கத்தினதும், புலம்பெயர் தமிழர்களதும், சர்வதேச சமூகத்தினதும் முனைப்பான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும்
11. வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்படுவதோடு, திரும்பத்தக்கதான சூழலும் உருவாக்கப்பட வேண்டும்.
மேற்குறித்த வாக்குறுதிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது பற்றி தங்களுக்கு வாக்களித்த அப்பாவி மக்களுக்கு நேர்மையாக அறிக்கையிடவேண்டும்.
குறிப்பாக 2015-2019 காலப்பகுதியில் மத்திய அரசின் பங்காளிகளாக இருந்து மத்திய அமைச்சர்களுக்குரிய சகல சலுகைகளையும் அனுபவித்து வந்த தமிழரசு கட்சி .கடந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என்பதை சொல்ல வேண்டும்
மத்திய அரசியில் பங்குபற்றியும் கொடுத்த வாக்குறுதிகளில் எதனையும் செய்யவில்லை என்றால் அது ஏன் என்பதனை ஆவணப்படுத்த வேண்டும்.
அத்துடன் வாக்களித்த மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
மீண்டும் அதிக ஆசனங்கள் கேட்கும் திரு சம்பந்தன் அவர்களுக்கு அந்த பொறுப்பு இருக்கிறது.
நன்றி இனமொன்றின் குரல்