2009 மார்ச், ஏப்பிரல் உட்பட மே மாதத்தின் முதல் 17 தினங்களும் தமிழின வரலாற்றில் நாம் மறந்துபோக முடியாத, மறந்து போக கூடாத தினங்கள்.
நவீன உலகு பார்த்திருக்க பல வல்லரசுகளின் உதவியுடன் இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து ஒன்றரை இலட்சம் எம் உறவுகளை இனவழிப்பு செய்த தினங்கள் இவை.
நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இவ் இனவழிப்பினால் தமிழினத்தின் ஆன்மா சிதைக்கப்பட்டது.
தமிழினத்தின் அனைத்து கட்டமைப்புக்களும் சிதைக்கப்பட்டு முட்கம்பி வேலிகளிற்குள் தமிழினம் முடக்கப்பட்டது.
பல தசாப்தங்களாக ஒப்பற்ற உயிரிய விடுதலைப்போரின் மூலம் தமிழீழ தனியரசை நிறுவி ஆட்சி செய்த புலிகளை ,பலரின் கூட்டுத்துரோகங்களால் சிங்களம் வெற்றிகொண்டது.
எவ்வித சமரசங்களும் செய்யாமல் தமிழின விடுதலை என்னும் இலக்கு நோக்கிய புலிகளின் பயணம் மெளனித்த நேரத்தில்தான் வாக்கு என்னும் ஜனநாயக ஆயுதம் கொண்டு தமிழர்களின் அபிலஷைகளை நிறைவேற்றும் ஆணையினை தமிழ்மக்கள் கூட்டமைப்பிற்கு வழங்கினார்கள்.
கூட்டமைப்பிற்குள் பின்கதவால் நுழைந்து பதவியினை பெற்ற சுமந்திரனும், புலிகளின் போராட்ட காலம் முழுவதும் அரசியல் பரப்பில் செயற்பட்ட சம்பந்தன், மாவை போன்றவர்களும் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையினை முழுவதுமாக உதாசீனம் செய்தார்கள்.
தமிழர்களின் குரலாக ஒலிக்கவேண்டிய இவர்களின் குரல் சர்வதேச அரங்கில் சிங்களத்தை காப்பாற்றவும்,
ரணிலை காப்பாற்றவும் மட்டுமே பல தடவைகள் பயன்பட்டது.
இனவழிப்பை வெறும் போர்க்குற்றமாக மாற்றுவதிலும்,
இனச்சுத்திகரிப்பு செய்த புலிகளை விசாரிக்கவேண்டும் எனவும் சுமந்திரன் புலிநீக்க அரசியல் செய்த அதேவேளை, கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது என்பதை பொதுவெளியில் கூறுவதற்கு சம்பந்தர் பம்மிய அவலமும் நிகழ்ந்தது.
மகிந்தாவை தேசியத்தலைவர் என கூறும் சம்பந்தர் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுத்தருவார் என நம்ப நாம் ஒன்றும் முட்டாள்களில்லை.
பல இலட்சம் தமிழர்கள் இறந்த ஒரு தேசத்தில் ,
ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் தியாகம் நிறைந்த மண்ணின்மேல் நின்றுகொண்டு ,
அவர்களின் போராட்டம் தவறானது, அவர்களை நான் ஆதரிக்கவில்லை என சிங்கள அதிரடிப்படை பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்கும் சுமந்திரன் தமிழினத்தின் பெரும் அவலம்.
கடந்த 11 வருடங்களாக தமிழர்தரப்பின் அரசியல் அவாவினை, அவர்களின் வலியினை, அவர்களின் பண்பாட்டு விழுமியங்களை சர்வதேச பொதுவெளிகளில் பேசுவதில் கூட்டமைப்பு தவறியிருக்கின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை பற்றியோ,
அரசியல் கைதிகளைப்பற்றியோ பேசினால் சிங்களம் கோபம்கொண்டு தமக்கான சலுகைகளை நிறுத்தி விடும் என்பதால் சில்லறை சலுகைகளிற்காக கூட்டமைப்பு விலைபோயிருக்கின்றது.
இவ்வளவு வலி சுமக்கும் தமிழினத்தின் அவலங்களை சர்வதேச பொதுவெளியில் எவ்வாறேல்லாம் கூட்டமைப்பு பேசியிருக்கலாம்,ஆனாலும் அதை செய்யவில்லை.
அவலப்படும் தமிழினத்தின் வலியின் கனதி கூட்டமைப்பிற்கு புரியவில்லை அல்லது புரிந்தும் தமது நலனிற்காக தமிழினத்திற்கு துரோகம் இழைக்கின்றார்கள்.
எம் இனத்தின் வலி புரியாதாவர்கள் எமக்கெதற்கு?
இறுதியாக,
எம்மின விடுதலைக்காய் போர்க்களம் புகுந்து,
இறுதியில் தவிர்க்கமுடியாமல் சரணடைந்த போராளிகளை இவர்கள் குப்பி கடிக்காமல் எதற்காக சரணடைந்தார்கள் என நக்கலும் ,நையாண்டியுமாக கேட்ட மரபு கொண்ட கூட்டமைப்பை நாம் நிராகரிப்போம்.