ரணிலிடம் பால் குடித்து சம்பந்தர் பாடிய பதிகங்கள்

140

திரு சம்பந்தன் அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது வடக்கு கிழக்கு மக்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கோரிக்கையினை நல்லாட்சி அரசாங்கத்திடம் முன் வைத்தால் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தெளிவாக அரசாங்கத்துடன் பேச முடியாது என்று பகிரங்க தளம் ஒன்றில் கருத்து தெரிவித்து இருந்தார்

ஆனால் அதே காலப்பகுதியில்

1. திரு சம்பந்தன் அவர்களின் சிபாரிசில் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் திரு குகதாசன் அவர்கள் பிரதமர் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2. திரு சம்பந்தன் அவர்கள் சுகாதார அமைச்சர் திரு ராஜித சேனாரத்தின அவர்களிடம் மேற்கொண்ட சிபாரிசில் திரு குகதாசன் அவர்களின் உதவியாளர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையின் சிற்றுளியார்களாக நியமிக்கப்பட்டார்கள்.

3. திரு சுமந்திரன் தொடக்கம் திரு சித்தார்த்தன் வரை எல்லோருமே தங்களது உதவியாளர்களுக்கு அரச நியமனங்களுக்கு சிபாரிசுகளை செய்தார்கள் .

4. திரு டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசுகள் திரு சித்தார்த்தன் ஊடக மேற்கொள்ளப்பட்டது

இது நியாயமானதா ? அப்பாவி பொதுமக்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி பேசினால் தீர்வு முயற்சி பாதிக்கும் என பொது அரங்கில் சொன்ன திரு சம்பந்தன அவர்கள் திரைக்கு பின்னால் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிபாரிசுகளை செய்தது ஏமாற்று வேலையில்லையா ?

அதே வேளை தமிழ் அரசியல் வாதிகள் திரைமறைவில் மேற்கொள்ளும் சிபாரிசுகளை வாய்ப்புகளாக பயன்படுத்தி கொண்ட தென்னிலங்கை அமைச்சர்கள் தங்களது உதவியாளர்களை வடக்கு கிழக்கில் இயங்கும் இலங்கை மின்சார சபை,புகையிரத திணைக்களம், வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், நில அளவை திணைக்களம். மத்திய சுற்றுசூழல் அதிகார சபை, மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள், மாவட்ட வைத்தியசாலைகள் என பல நிறுவனங்களின் அரச பணி வெற்றிடங்களுக்கு நடைமுறைகளுக்கு மாறாக நியமித்து இருந்தார்கள் . குறிப்பாக 2019 ஆம் அண்டி மார்ச் மாதம் ஒரே தடவையில் வடக்கு மாகாணத்தின் 4 மாவட்ட செயலகங்களிலும் 7 சிங்கள சாரதிகள் சிபாரிசில் சேர்க்கப்பட்டார்கள். அதே கால பகுதியில் வைத்தியசாலைகளில் நிலவிய வெற்றிடங்களுக்கு குறைந்தது 60 பேர் தென்னிலங்கையில் இருந்து அமைச்சர்களின் சிபாரிசில் நியமிக்கப்ட்டனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் மின்மானி வாசிப்பாளர்களாக 2019 ஆம் ஆண்டு முதல் காலப்பகுதியில் மட்டும் 41 பேர் நியமிக்கப்ட்டனர்.

கடந்த காலங்களில் சந்திரிக்கா குமாரதுங்கா , மகிந்த ராஜபக்சே என ஆட்சிக்கு வரும் தென்னிலங்கை ஆட்சியர்களுடன் ஒட்டி கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா போன்ற ஆயுத தாரிகள் எந்த தகுதியும் அற்ற தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அரசியல் ரீதியான சிபாரிசுகளை செய்து வடக்கு கிழக்கு அரச நிருவாகத்தை பலவீன படுத்தி இருந்தார்கள் . துரதிருஷ்டவசமாக கடந்த நல்லாட்சியில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும் திரைமறைவில் சிபாரிசுகளை செய்தார்கள்

அரசியல் வாதிகள் எக்காரணம் கொண்டும் வேலைவாய்ப்புகளுக்கு சிபாரிசுகளை செய்ய கூடாது . அரசியல் தலையீடுகள் அற்ற பொறிமுறை ஒன்றின் ஊடக அரசாங்க பதவி வெற்றிடங்கள் நிரப்ப பட வேண்டும். Unskilled பணியிடங்களுக்கு பிராந்திய ரீதியாக தொழிலற்று இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

நன்றி – இனமொன்றின் குரல்