சின்ன கதிர்காமரும் குடா கழுதைகளும்

112

சுமந்திரன் தன்னுடைய வாயால் தமிழ் மக்களிடம் அம்பலப்படும் போதெல்லாம், “சனம் இந்த முறை சுமந்திரனுக்கு ஒரு பாடம் படிப்பிக்கும்” என்று பலர் கருத்திடுவதை அவதானித்திருக்கிறன். அவ்வாறு நினைப்பது தவறில்லைத் தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்த பின்பும் ராஜபக்ச கூட்டத்தினாலோ அல்லது அவர்களின் எடுபிடிகளாலோ தமிழர் தாயகமான வடகிழக்கில் காலூன்ற முடியவில்லை.

யாழ்ப்பாணம் ஒரு விசித்திரமான மக்கள் வாழும் மண். விடுதலைப் புலிகள் காலத்திலேயே துணை இராணுவக் குழுவான ஈபிடிபியை சேர்ந்த டக்கிளஸ் தேவாந்தாவை வெற்றி பெற வைத்தவர்கள். இன்று வரை டக்கிளஸ் தேவானந்தாவை வெல்ல வைத்துக் கொண்டு தான் உள்ளார்கள். சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விதானைமார், தொண்டராசிரியர்கள், இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள் என்று டக்கிளஸ் அமைச்சராக இருந்த போது முறைகேடாக வழங்கப்பட்ட நியமனங்கள் எண்ணிலடங்காதவை. இத்தகைய நியமனங்களில் வேலை வாய்ப்பை பெற்றவர்களில் பாதிப்பேரும் அவர்களின் குடும்பங்களுமே டக்கிளஸ் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற போதுமானது.

ஆனால் 2009 வரை யாழ்ப்பாணத்தில் டக்கிஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கும்பல் செய்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் கற்பழிப்பு காட்டிக்கொடுப்பு போன்ற அனைத்து அட்டூழியங்களையும் வவுனியாவில் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் செய்தது. அத்துடன் 2009 ஆம் ஆண்டு ஜனாபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்தவர் சித்தார்த்தன். 2010 பொதுத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தோற்கடிக்கப்பட்டவர். வரலாறு இப்படி இருக்க 2013 இல் மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதி கூடிய விருப்பு வாக்குகளான 39000 விருப்பு வாக்குகளைப் பெற்று வடமாகாண சபை உறுப்பினரானவர். அதன் பின்னர் 2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிறிதரன், மாவைசேனாதிராசா போன்றவர்களுக்கு அடுத்தபடியாக 50000 இற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

புளொட் சித்தார்த்தனுக்கும், ஈபிடிபி டக்கிளஸ் தேவானந்தாவிற்கும் வாக்குப் போடுவதற்கே ஒரு இலட்சம் மக்கள் இருக்கும் யாழ்ப்பாணத்தில் வீட்டுச் சின்னத்தில் கேட்கும் சுமந்திரனைத் தோற்கடிப்பது என்பது நடக்காத காரியமாகும்.

அப்புறம் அன்னம் என்டு கழுகுக்குக் குத்தின பத்தாயிரம் மக்களும் யாழ்ப்பாணத்திலை தான் இருக்கினம். இந்த இலட்சணத்திலை சுமந்திரனை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று சொல்லி யாரும் பந்தயம் போட்டு விடாதீர்கள். ஏனெனில் யாழ்ப்பாணத்தாரின் டிசைன் அப்பிடி இருக்கு….

நன்றி :#வேலவன்