ஆல்பிரட் முதல் ஆபிரகாம் வரை…

530

யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை துரோகி என சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று ஆகும். (27.07.1975)

துரையப்பாவை துரோகி என சுட்டுக் கொன்றது தவறு என்று சுமந்திரன் உட்பட சிலர் இன்று கூறுகின்றனர்.

வேடிக்கை என்னவெனில் துரையப்பாவை துரோகி என்று கூறி அவரை தமிழ் இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியும் அதன் தலைவர் அமிர்தலிங்கமும்தான்.

துரையப்பாவை மட்டுமல்ல கட்சி மாறிய பொத்துவில் எம்.பி கனகரத்தினத்தையும் துரோகி என்றும் அவருக்கு இயற்கையான மரணம் நிகழாது என்றும் பாராளுமன்றத்திலேயே பேசியவர் அமிர்தலிங்கமே.

இவ்வாறு துரோகி முத்திரை குத்தி சுட்டுக் கொல்லும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் இப்போது தாங்கள் நல்லவர்களாகவும் தங்கள் பேச்சைக் கேட்டு சுட்ட இளைஞர்களை தவறானவர்களாகவும் காட்டுகிறார்கள்.

சரி. பரவாயில்லை. ஆனால் இவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.

ஒரு இனம் தனது விடுதலைக்காக போராடும்போது தான் சந்திக்கும் துரோகிகளை என்ன செய்வது?

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களால் அழிந்து போக வேண்டுமா?

நாம் அறிந்தவரையில் சிங்கள மக்கள் மத்தியில் போராடிய ஜே.வி.பி இயக்கமும் துரோகிகள் மீது மரண தண்டனை நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகில் போராட்டம் நடத்திய பல அமைப்புகள் இவ்வாறு துரோகிகள் மீது நடவடிக்கை எடுத்ததாகவே வரலாறு இருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றையும்விட தமிழ் மக்கள் மத்தியில் நடைபெற்ற துரோக ஒழிப்பே அதிகம் விமர்சிக்கப்படுகிறது.

ஏனெனில் இங்குதான் துரோகிகளை தியாகிகளாகவும் தியாகிகளை துரோகிகளாகவும் மாற்ற முயற்சி செய்கிறார்கள்.

தோழர் பாலன்