திரு சுமந்திரன் அவர்களே ,
உங்களுக்கு உண்மை பேசவே வராதா ?
வடக்கில ஒரு கதை , தெற்கில் இன்னுமொரு கதை , பாராளமன்றத்தில் மற்றுமொரு கதை என நீங்கள் கடந்த 4 ஆண்டுகளாக உங்கள் கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் , தொடக்கம் அப்பாவி பொதுமக்கள் வரை எல்லோரையும் மிக மோசமாக ஏமாற்றி வருகிறீர்கள்
உங்களை யாரும் ஆயுத வழியில் நம்பிக்கை இருக்கிறதா என்பதை பற்றி கேட்கவில்லை . விடுதலை போராட்டம் நடத்தற்கான/ தோற்றுவாய்க்கான அக புற . நியாயங்களை தெளிவாக/ உண்மைகளை பேச வேண்டும் . சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதம் சாதாரண மக்களை / இளைஞர்களை ஆயுதம் நோக்கி தள்ளி விட்ட நிர்ப்பந்தத்தை நாங்கள் சொல்ல வேண்டும் . ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை என்கிற உண்மையை நாங்கள் மறைக்க வேண்டியதில்லை
தமிழர் இன பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் மேடை ஏறி வரும் அவலத்தை சிங்கள சமூகம் புரிய வேண்டும் அல்லவா ?
விடுதலை புலிகளின் அரசியலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்கிறீர்கள் .ஆனால் உங்கள் கட்சியும் நீங்களும் தேர்தல் காலங்களில் சொல்லி வரும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் , தேசியம் சுயநிர்ணய உரிமை தானே விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் ..இதில் இருந்து எவ்வாறு நீங்கள் வேறுபடுகிறீர்கள் ? விடுதலை புலிகள் என்பதற்கு அப்பால் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் , தேசியம், சுயநிர்ணய உரிமை என்பன தமிழர்களின் அரசியல் தானே ? உங்களின் அரசியல் என்ன ?
தேசிய கொடி , தேசிய கீதம் ஆகியவற்றை நீங்கள் ஏற்று கொள்ளுவதாக சொல்லுகிறார்கள் .உங்கள் கட்சி தேசிய கொடி தேசிய கீதம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறது . முழுமையான ஜனநாயக வாதி என சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாத விடயங்களை பொதுவெளியில் ஊடக பேச்சாளராக பகிர்ந்து கொண்டது சரியா ?
தமிழர்கள் எதிர்பார்க்கும் நிலைத்திருக்கும் தீர்வு சிங்கள மக்ககளை ஏமாற்றி பெற்று கொள்ள முடியுமா ? வெட்டி நியாயங்கள் பேசாதீர்கள் .கடந்த 4 ஆண்டுகளில் வடக்கில் நீங்கள் ஒன்றை பேச தெற்கில் அரசாங்கம் இன்னுமொன்றை பேச இறுதியில் நடந்தது என்ன ? இந்த கண்ணாமூச்சி விளையாட்டில் அப்பாவி மக்கள் தானே ஏமாற்றப்பட்டார்கள் ?
கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை பொய்களை பேசி இருக்கிறீர்கள் . இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தில் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என சொல்லப்பட்டு இருப்பதாக சொன்ன பொய் தொடக்கம் சர்வதேச விசாரணை முடிந்தது என நீங்கள் சொன்ன பொய்களை திகதி வாரியாக வரிசைப்படுத்த முடியும் .இதனால் நீங்கள் சாதித்தது என்ன ? ஐ நா பிரேணையில் காலநீடிப்புக்கு உங்க கட்சி தீர்மானத்திற்கு மாறாக துணை போன நீங்கள் வடக்கில் வந்து கால நீடிப்பு அல்ல / மேற்பார்வை நீடிப்பு என வார்த்தைகளில் விளையாடினீர்கள் ?
உங்களுக்கு மனசாட்சி இருந்தால் கடந்த தேர்தலில் நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்து பாருங்கள் . நீங்கள் வாக்கு கொடுத்த விடயங்களில் எதை சாதித்து இருக்கிறீர்கள். மத்திய ஆளும் கட்சியில் சகல சலுகைகளையும் அனுபவித்தவாறு இருந்த உங்களால் குறைந்த பட்சம் வடக்குக்கான பொருளாதர வலயம் , நுண்நிதி கடன் தொல்லைகள் , வடக்கு மக்களுக்கான குடிநீர் பிரச்சனை , பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிரச்சனை என நீண்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு கூட தீர்வு பெற்று கொடுக்க முடியவில்லை .இன்றைக்கும் வடக்கும் கிழக்கும் தான் வறுமை வீதம் கூடிய மாகாணங்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ?
கடந்த 10 ஆண்டுகளில் நீங்களும் உங்கள் கட்சியும் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலத்தில் தான் அதிக சிங்கள ஊழியர்கள் வடக்கில் அமைச்சர்களின் செல்வாக்கில் நியமிக்கப்பட்டார்கள் .பல்கலை கழக துணைவேந்தர் இலங்கை இராணுவம் விரும்பவில்லை என்கிற ஒற்றை காரணத்திற்காக பதவியில் இருந்து அகற்றப்பட்டார்
தமிழ் தேசிய அரசியல் வியாபாரமாகி விட்டது . உங்கள் கட்சியிலே நீங்கள் அணி சேர்க்கிறீர்கள் .உங்கள் அணியை சேர்ந்த உறுப்பினர்களை கொண்டு உங்கள் கட்சி மாகாணசபையையே சீரழித்தீர்கள் .. சமூக தளங்களில் உங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தொடக்கம் ஜனாபதிபதி சட்டத்தரணி தவராஜா வரை பலரை அவமானப்படுத்துகிறீர்கள் .
உங்கள் நோக்கம் என்ன ?
உங்கள் அரசியலுக்காக அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்
பாவம் அவர்கள்
– shaila