மதில் மேல் பூனை – சுமந்திரன்!

80

நடைபெற்று முடிந்த 20ம் திருத்தச் சட்டத்தை அரசு தரப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி  இருக்கிறது. இது எதிர்பார்க்கப்ட்ட வெற்றி தான் ஆனாலும் கடைசி நேரத்தில் காரியம் நழுவிப்போய் விடுமோ என்ற கலக்கம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக் ஷாவையும் களத்தில் குத்தித்து ஆதரவு திரட்டும் படி செய்திருந்தது. இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ம் திருத்தச் சட்டத்தை  எதிர்த்து வாக்களித்து இருந்தனர்

திரைமறைவில் அரசுடன் புரிந்துணர்வுடன் கூடிய செயற்பாட்டில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள்  எதிர்த்து வாக்களித்தமை  இங்கு உற்று நோக்கப்பட வேண்டியது

கூட்டமைப்பிற்கு கடந்த தேர்தலில்  மக்கள் கொடுத்த செய்தி அவர்களை இவ்வாறு வாக்களித்திருக்க வைத்திருக்கக்கூடும். முஸ்லீம் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கடைசி நேர பல்டி முன்னமே எதிர்வு கூறப்பட்ட ஒன்று. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சிறீதரன் நடுவுநிலைமை எனும் நிலைப்பாட்டை எடுக்காது எதிர்த்து வாக்களிக்க காரணமும் மக்கள் கொடுத்த தேர்தல் செய்திதான்.

இனிவரும் காலங்களில் சுமந்திரன் ஸ்ரீதரன் இருவரும் தமிழரசு கட்சியின் தலைமையை கைப்பற்ற பகீரத பிரயத்தனத்தில் ஈடுபடுவர். தங்களை தொடரும் ஆதரவாளர்களை தேர்தலில் நிறுத்தி, பதவியில் அமர்த்தி  அதை சாதிக்க நிச்சயமாகவே தலைப்படுவர். தேர்தல் முடிந்த கையுடனேயே அதை நிறைவேற்றவும் தலைப்பட்டனர். ஆனாலும் மத்திய குழு கூட்டத்தில் மாவை தனது பலத்தை நிரூபித்த பின் சுமந்திரன் தனது வாலை தற்காலிகமாக சுருட்டிக் கொண்டார். அக் கூட்டத்திலிருந்து ஸ்ரீதரன் தப்பித்து ஓடினார்.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல இரட்டை வேஷமிடும்  ஸ்ரீதரன், தமிழ் தேசிய நீக்கத்தில் அயராது உழைக்கும் சுமந்திரனுடன்  உறவாடி வந்த கையோடு, 2ம்லெப்.மாலதி அவர்களின் உருவப்படத்துக்கு விளக்கேற்றி அதை அவசர அவசரமாக முகநூலில் பதிவேற்றியிருந்தார். இவரது இந்த இரட்டை வேஷம் நிலைக்க வேண்டுமானால் எப்படியாவது தமிழரசுக் கட்சியின் தலைமையை கைப்பற்றியாக வேண்டும். ஆகவே தலைமைப் பதவியை கைப்பற்றுவது என்பது சுமந்திரன் ஸ்ரீதரன் இருவர் மனதில் இன்றும் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. அதை நோக்கிய காய் நகர்த்தல்களை இருவரும் கன கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த ஐந்து வருடத்திற்குள் கட்சியை கைப்பற்றுவதே அவர்கள் இலக்கு. அந்த நிகழ்ச்சி திட்டத்தின்  ஒரு பரிணாமமே மக்கள் சந்திப்புகளும் முகநூல் விளம்பரங்களும்.

அத்தோடு தற்சமயம் மணிவண்ணனும் ஒரு சட்ட ஆளுமையாக உருவெடுத்து வருகிறார் தனக்கென்று கணிசமான ஆதரவுத்தளத்தை கொண்டிருக்கும் அவர் சுமந்திரனுக்கு ஒரு மாற்றிடாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளது. அதை சுமந்திரன் தரப்பு விரும்பப்போவதில்லை. ஆனாலும் சுமந்திரன் தரப்பு மணிவண்ணனை தம் பக்கம் இழுப்பதன் மூலம் சுமந்திரனுக்கு வெளியில் போட்டியாக ஒருவர் உருவாவதை தடுத்தாலும் சுமந்திரன் தரப்பில் இருக்கும் சயந்தன் போன்றோர் மணிவண்ணன் எதிர்காலத்தில் தமக்கு போட்டியாக அமையாக் கூடும் என்பதால் அதை உள்ளுர விரும்பப் போவதில்லை .

ஆகவே சுமந்திரன் தரப்பு மணிவண்ணனை இணைத்து தமிழரசு கட்சியின் தலைமையை கைப்பற்றிய பின் மணிவண்ணனை செல்லாக் காசாக்கலாம்.

இழந்து போன தனது செல்வாக்கை சீர் செய்ய கிழக்கில் காணிப் பிரச்சினைகளுக்கு ஐம்பது வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்று கூறும் சுமந்திரன் அரசுடன் எவ்வளவுதூரம் முட்டி மோத முடியும் என்பது கேள்விக் குறியே.  

ஏனெனில் சுமந்திரனின் நிலை இப்போது மதில் மேல் பூனை போன்றதாகும். கடந்த தேர்தலில் பாராளுமன்ற பதவியை கைப்பற்ற ஆகஸ்ட் ஆறாம் திகதி பின்னிரவில் திரைமறைவில் அரச சார்பு கூட்டாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதி அவரை புலிவாலைப் பிடித்த நிலைக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது.

இம்முறை ஜெனீவாவில் சுமந்திரன் தனிக்காட்டு ராஜா போல செயற்பட முடியாது ஏனெனில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அங்கு பிரசன்னமாகி இருப்பார்கள். இவர்கள் இருவரும் ஒரே நிலை எடுப்பது சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரனின் செல்வாக்கை குறைப்பதாக அமையும். ஆகவே இனிவரும் காலங்களில் சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் தமிழ் தேசியக் கட்சிகளை சிண்டுமுடியும் திரை மறைவு வேலைகளை முன்னெடுப்பர்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐக்கிய ராச்சியம் நீக்கியிருப்பதானந்து சுமந்திரன் போன்றவர்களினால் விரும்பப்டும் ஒரு விஷயமல்ல. ஏனெனில் இது சர்வதேசத் தளத்தில் அரசுக்காக சுமந்திரன் செய்யப் போகும் வேலைகளை அதிகப் படுத்துகிறது

ஐக்கிய ராச்சியத்தின் அழுத்தத்தை கையாள அரசு சுமந்திரனை அணுகக்கூடும், நக்குண்டார் நாவிழந்தார் என்பது போல அவரும் இலங்கை அரசுக்காக ஜெனீவாவில் பேசலாம் அல்லது மௌனியாயிருந்து அரசிடம் நல்ல பிள்ளை பெயர் வாங்கலாம்.

இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில், கூட்டமைப்பு பேச்சாளர் பதவியை தனது கைப்பிள்ளை ஸ்ரீதரனுக்கு கொடுக்கும்படி  குழப்பத்தை ஏற்படுத்தியது  போல சுமந்திரன், ஜெனீவாவில் விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமாருடன் மோத முனையலாம்.

முருகேசு ஐயாத்துரை