சுமந்திரனுக்கு எதிராக பிரச்சாரம்,தாக்கப்பட்ட மாவை மகன்

283

சிறிதரனுக்குத் தலைவர் பதவி கொடுத்தால் அதை நான் ஆதரிப்பேன். தமிழரசின் பொருளாளரும் மாவையின் மகனும் வீடு வீடாகச் சென்று எனக்கெதிராகப் பிரசாரம் செய்தார்கள்” எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், நானும் சிறிதரனும் தலைவரிடம் போய், “நீங்களும் சேர்ந்து கட்சிக்குள்ளேயே பாரிய சதி செய்தீர்கள். அதனால்தான் சதிகாரர்கள் எல்லோரும் தோற்றிருக்கிறீர்கள். நாங்கள் இருவரும்தான் வென்றிருக்கிறோம். அதை ஞாபகத்தில் வைத்திருங்கள் என்று சொல்லிவிட்டு வந்துள்ளோம் ” எனத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய இணைய வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்..

பொதுத் தேர்தலில் மோசடி! ராமநாயக்க பரபரப்புக் குற்றச்சாட்டு!!
இந்தியாவில் கொல்லப்பட்டவர் அங்கொட லொக்காதானா?
தோல்வியின் எதிரொலி; கட்சித் தலைவர் பதவி குறித்து ரணில் அறிவிப்பு!
கட்சிக்கு எதிராக எப்போதும் நடந்துகொள்பவன் நான் இல்லை. சக வேட்பாளர்கள் எனக்கு எதிராகப் பிரசாரங்கள் செய்தனர். ஆனால், நான் ஒருபோதும் அவர்கள் போன்று சக வேட்பாளர்களைத் தாக்கவில்லை.

எனக்கு ஆதரவாகப் பேசியவர் சிறிதரன் மாத்திரமே. இதனால் கடைசியில் அவருக்கு எதிராகவும் பிரசாரம் செய்தனர்.

ஆனால், இறுதியில் நானும் சிறிதரனும்தான் வென்றோம். எமக்கெதிராகச் சதி செய்தவர்கள் தோற்றுவிட்டார்கள்.

சுமந்திரனைத் தோற்கடிப்போம் என சக வேட்பாளரின் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வந்தபோது கூட, நான் பத்திரிகையை விநியோகித்தேனே தவிர, அதுகுறித்து பகிரங்கமாக எதையும் பேசவில்லை. இதுகுறித்து தலைவரிடம் கூறினேன். ஆனால் அவர் எதையும் கூறவில்லை.

எனக்கெதிராக யாழ். கிளைத் தலைவரும் பொருளாளருமான கனகசபாவதி மற்றும் தலைவரின் மகனுடன் வீடு வீடாகச் சென்று எனக்கு வாக்களிக்கவேண்டாம் என பிரசாரம் செய்தார்.

இதுகுறித்து நான் தலைவரிடம் பல தடவைகள் கூறியிருந்தேன். நான் இதைத் தேர்தல் முடியும் வரை பகிரங்கமாகக் கூறவில்லை. அதை அப்போது கூறியிருந்தால் நான் தலைவருக்கு எதிராகச் சதி செய்கிறேன் என்று கூறியிருப்பார்கள். இனி நான் அதைக் கூறுவேன். அதற்கான ஆதராங்களும் என்னிடம் உள்ளன.

நானும் சிறிதரனும் தலைவரிடம் போய், “நீங்களும் சேர்ந்து கட்சிக்குள்ளேயே பாரிய சதி செய்தீர்கள். அதனால்தான் சதிகாரர்கள் எல்லோரும் தோற்றிருக்கிறீர்கள். நாங்கள் இருவரும்தான் வென்றிருக்கிறோம். அதை ஞாபகத்தில் வைத்திருங்கள் என்று சொல்லிவிட்டு வந்துள்ளோம்.

இதேவேளை, சரவணபவனுக்கு வேட்பாளருக்கான இடம் கொடுக்கவேண்டாம் என்று நான்தான் கூறினேன். அதற்கான காரணங்களையும் கூறினேன். எவரும் நான் கூறியவை தவறென்று கூறவில்லை.

எனினும், பின்னர் அவர் இனிமேல் அவ்வாறு நடக்கமாட்டார் எனக் கூறி அவருக்கு எனது எதிர்ப்புக்கு மத்தியில் இடம்கொடுக்கப்பட்டது.

மக்கள் தீர்ப்பின்படி சிறிதரனும் நானும் வென்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். ஒரு ஆசனத்தைப் பெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கும்.

அதேவேளை, சிறிதரன் கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பித் தலைவர் பதவியைத் தமக்குத் தந்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். ஆனால், தனக்கு அந்தப் பதவியைத் தரும்படி அவர் கோரவில்லை.

அப்படி சிறிதரனுக்கு தலைமைப் பதவி கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன்.

தேசியப் பட்டியல் அறிவிப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதில் இழுபறி எதுவும் இல்லை. அப்படியான செய்திகள் உண்மையானவை அல்ல.” என்றார்.