எகிப்திலுள்ள இந்தக் கால்வாய், செங்கடலிலுள்ள எகிப்தின் சூயஸ் நகரின் ஊடாக மத்திய தரைக்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது.
இந்தப் பாதையில்தான் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு சரக்குகள் நேரடியாகச் செல்கின்றன. இந்தப் பாதையைத் தவிர்த்தால் ஆப்ரிக்காவிலுள்ள `குட் ஹோப்’ முனையை சுற்றிச் செல்ல வேண்டும் அதற்குப் பல நாள்களோ அல்லது வாரங்களோ ஆகும்.

இந்தக் கால்வாய் யாரால் கட்டப்பட்டது?
இந்தக் கால்வாய்க்கான கட்டுமானப் பணி 1859-ம் ஆண்டு தொடங்கியது. கிட்டதட்ட 10 வருடங்களாக இந்தக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பலர் அடிமைப் பணியாளர்களாக இருந்தனர். இதற்காக பணியாற்றும்போதே காலரா மற்றும் பிற காரணங்களால் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
மேலும் இந்தக் கால்வாய் கட்டப்படும் சமயத்தில் எகிப்து நாடு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. எனவே, காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் பல எதிர்ப்புகள் இருந்தன. அது, கட்டுமானத்தை வெகுவாக பாதித்தது.
இதனால் அந்தச் சமயத்தில் இருந்த நவீன தொழில்நுட்பம் எதையும் கட்டுமானப் பணியில் பயன்படுத்த முடியவில்லை. மேலும், திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் இதன் கட்டுமானச் செலவு இரட்டிப்பானது.
சூயஸ் கால்வாய் அதிகாரபூர்வமாக 1869ம் ஆண்டு, நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. தற்போது உலகின் அதிக அளவிலான சரக்குக் கப்பல் செல்லும் ஒரு பாதையாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சரக்குக் கப்பல்கள் இந்தப் பாதையைக் கடந்து செல்கின்றன.
2015-ம் ஆண்டு, சூயஸ் கால்வாயின் விரிவாக்கத்தை மேற்கொண்டது எகிப்து. முக்கியக் கடல்வழியை ஒட்டி 35 கி.மீ நீளத்தில் மற்றொரு பாதையையும் கட்டமைத்தது எகிப்து. இதனால் இருவழிப் போக்குவரத்து சாத்தியமானது. அதுமட்டுமல்லாமல் பெரிய சரக்குக் கப்பல்கள் செல்லவும் ஏதுவாக அமைந்தது.
தற்போது இந்தக் கால்வாயை சூயஸ் கெனால் அத்தாரிட்டி
என்ற எகிப்து அரசுக்குச் சொந்தமான நிறுவனம் நிர்வகிக்கிறது.
சூயஸ் கால்வாய் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
தினந்தோறும் சராசரியாக 50 கப்பல்கள், 300 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சரக்குகளைச் சுமந்துகொண்டு சூயஸ் கால்வாயைக் கடந்து செல்கின்றன.
ஐரோப்பாவிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் செல்வதால் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் குறைகிறது. தெற்கு அட்லாண்டிக் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் பாதையில் செல்வதோடு இந்தப் பாதையை ஒப்பிட்டால் சுமார் 7,000 கிலோமீட்டர் பயணம் மிச்சமாகிறது.
சூயஸ் கால்வாய் நெருக்கடி
சூயஸ் கால்வாயைச் சூழ்ந்திருந்த ஒரு முக்கிய அரசியல் நெருக்கடி 1956-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது எகிப்தின் அதிபராக இருந்த கமால் அப்தெல் நாசீர், சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கி டீரான் நீரிணையை மூடினார்.
இதனால் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எகிப்தின் மீது படையெடுத்தன. ஐ.நா-வின் தலையீட்டுக்குப் பிறகு மூன்று நாட்டு படைகளும் விலகிக்கொண்டன. கால்வாய் வர்த்தகக் கப்பலுக்கான பாதையைக் கொடுத்தது.
இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையே நடைபெற்ற ஆறு நாள் போரால் எகிப்திய அதிகாரிகளால் சூயஸ் கால்வாய் 1967-ம் ஆண்டு மூடப்பட்டது.
சூயஸ் கால்வாய் எந்த நாட்டின் கட்டுப்பாடில் உள்ளது?
இரண்டு உலகப் போர்களின்போதும் பிரிட்டன், சூயஸ் கால்வாயைக் காட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதன் பின் எகிப்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1956-ம் ஆண்டு படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன் பிறகு எகிப்தின் அதிபர் கமால் அப்தெல் நாசீரிடம் அதிகாரத்திற்கு வந்ததுள்ளது.

