சுயஸ் கால்வாயை முடக்கிய எவர்கிவன் கப்பல்.

50

எகிப்து நாட்டின் சுயஸ் கால்வாயில் எவர்கிவன் கப்பல் குறுக்காக சிக்கியதால் 237 கப்பல்கள் நடுக்கடலில் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

400 மீற்றர் நீளமும், 2 லட்சத்து 24 ஆயிரம் தொன் எடையும் கொண்ட எவர் கிவன் என்ற கப்பல் அசாதாரண காலநிலை காரணமாக கடந்த 22 ஆம் திகதி கடலில் குறுக்காக சிக்கிக்கொண்டது.

193 கிலோமீற்றர் நீளமான இந்தக் கால்வாயில் குறுக்காக சிக்கிக்கொண்ட கப்பலை மீட்கும் பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் சிக்கிக் கொண்ட கப்பலை மீட்கும் பணிகள், திங்கள் கிழமை வரை நீடிக்கலாம் என மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கப்பலில் பணியாற்றுபவர்களில் 24 பேர் இந்தியர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே சுயஸ் கால்வாயைக் கடக்க முடியாமல் 237 கப்பல்கள் நிற்பதாகக் கூறப்படுகிறது.

உலக வர்த்தகத்தில் சுமார் 12 வீதமான பொருட்கள் சுயஸ் கால்வாயின் வழியாகச் செல்கின்றன. சுயஸ் கால்வாயில் இதுவரை தரைதட்டிய மிகப்பெரிய கப்பல் இதுவாகும் என்றும் கரையோரமாகத் தரை தட்டியதால், மீண்டும் மிதக்கும் திறனை அது இழந்து விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகளவில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் முடங்கியுள்ளது. குறிப்பாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 4 வீதம் வரை உயர்ந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் பயணிப்பதாக சுயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.