சுவிஸ்போதகரின் விடயத்தில் கிறிஸ்தவர்களே உங்கள் முன்மாதிரி எங்கே?

49

கடந்த சில நாட்களாக சுவிஸ் போதகர் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களைப் பார்க்கின்ற கிறிஸ்தவர்கள், கோபமடைந்து இயேசுக்கிறிஸ்துவை காப்பாற்றுவதாக நினைத்து பலரும் தமது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

உண்மையில் நீங்களோ நானோ இயேசுக் கிறிஸ்துவைக் காப்பாற்றத் தேவையில்லை. அவர் தெய்வம். அவரது உயிர்தெழுதல் மகிமை இன்றும் மாறவில்லை. அவர் ஜீவிக்கின்றார். இதில் எனக்கு சந்தேகமில்லை.

ஆனால் கிறிஸ்தவர்களாகிய எமக்கு சில சமூகப்பொறுப்புக்கள் உண்டு. அந்தச் சமூகப்பொறுப்பில் இருந்து நாம் தவறும் போது ஏனைவர்கள் எம்மை விமர்சனம் செய்வார்கள்.

இவற்றிற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் கிறிஸ்தவர்களாகிய எமக்கு உண்டு. அதேவேளை எம்மிடத்திலுள்ள தவறுகளை உணர்ந்து நாம் திருந்த வேண்டியதும் இன்றைய காலகட்டத்தின் அவசியம்.

சுவிசேஷம் அறிவித்தல் என்ற பெயரில் பலர் சூழ்நிலைகளை அறியாது செயற்படுகின்றனர். இடம்பொருள் அறிந்து செயற்படுவது அனைவருக்கும் நன்று.

இயேசுக்கிறிஸ்து மதமாற்றத்தை பிரசங்கிக்கவில்லை. மாறாக ஒரு மனிதன் பாவத்திலிருந்து மனந்திரும்பும் மனமாற்றத்தை குறித்து தான் பிரசங்கம் செய்தார்.

கிறிஸ்துவின் பெயரைக் கூறி கொள்ளையிட்டு தங்கள் வயிற்றை நிரப்பும் கூட்டம் பெருகிவிட்டது. ஊழியம் என்றும் பெயரில் பல ஊத்தைகள் கிளம்பிவிட்டன.

இவர்களை கிறிஸ்தவர்கள் அடையாளம் காணவேண்டும். அவ்வாறானவர்களை எமது கிறிஸ்தவ சமூகத்தை விட்டே ஒதுக்கி வைப்பது அனைவருக்கும் நன்மையானது

நாம் அனைவரும் தவறுகளை செய்கின்ற பலவீனமுள்ள மனிதர்கள் தான். ஆனாலும் செய்யும் தவறை உணர்ந்து அந்த தவறுக்கான மனந்திரும்புதல் மிகஅவசியம். இது தான் மனிதப்பண்பு. இதனைத் தான் கடவுளும் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.

சுவிஸ் போதகரின் விடயத்தில் கிறிஸ்தவர்கள் போதிக்கின்ற மன்னிப்பு என்ற ஒரு விடயத்தை செயற்பாட்டில் காட்டியிருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் போயிருக்காது.

கிறிஸ்தவர்கள் வெறுமனே பேச்சாளர்களாக இருக்க கூடாது அவர்கள் எந்த சுவிசேஷத்தைப் போதிக்கின்றர்களே அதனை வாழ்ந்து காட்ட வேண்டும். உங்களது வாழ்க்கை பேசுவதைப் போல உங்கள் அயலானுடன் வேறெதுவும் பேசமுடியாது.


பி.வின்ஸ்லோ