தமிழீழ காவல்துறை தொடங்கிய நாள் இன்றாகும்

59

பிரதேசத்திற்கு ஒரேயொரு அலுவலகம்
கிராமத்திற்கு ஓரிரண்டு தமிழீழ காவல்துறையினர்,
விடுதலைப்புலிகளின் மிக நேர்த்தியான நிர்வாகம்.

எமது விடுதலை இயக்கத்தின் தலைமையால் போராளிகளுக்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மக்களும் தாங்களாகவே பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.
அதனாலேயே விடுதலைப்புலிகளின் நிர்வாகக் காலப்பகுதியில் குற்றச்செயல்கள்,சமுதாய சீர்கேடுகள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டிருந்தது.அதையும்மீறி ஆங்காங்கே ஒருசில சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும் அவைகள் நாளடைவில் கட்டுப்படுத்தப்பட்டன.

பிரதேசத்திற்கு ஒரேயொரு அலுவலகம்
கிராமத்திற்கு ஓரிரண்டு தமிழீழ காவல்துறை உறுப்பினர்கள்,
வீதிகளில்,கடைகளில்,பள்ளிகளில்,
பொது மண்டபங்களில்,கோயில்களில் எங்கும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை,நகைமாடங்களில்கூட காவலாளிகள் நிறுத்தப்படவில்லை,
இரும்புசங்கிலிகளால் வாயிற்கதவுகள் பிணைக்கப்படவில்லை,வீட்டுவாசல் கதவுகளை யாரும் பூட்டி வைப்பதில்லை,
முற்றத்தில் பாய்போட்டமர்ந்து அப்படியே அங்கேயே விடியும்வரை படுத்துறங்கி எழும்பும் அச்சமற்ற வாழ்வை மக்கள் உணர்ந்து வாழ்ந்தனர்.
யாரும் தண்ணீர் போத்தல்களுடன் பிரயாணிப்பதில்லை யார்வீட்டு வாசலில் நின்றேனும் தண்ணீர் என்றால் அங்கே தண்ணீருடன் படலை திறக்கும் பல கரங்கள்.
வீதியில் கோழி அடிபட்டால்கூட அங்கே கூட்டம்கூடி அது ஏது எப்படியென விசாரித்துச் செல்லும்.

மக்கள் அனைவரும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் நடத்தப்பட்டனர்.நாளடைவில் மக்கள் தங்களுக்குள்ளும் அதனை வளர்த்துவந்தனர்.
விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் மக்கள் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருந்தனர்.
அதனாலேயே விடுதலைப்புலிகளால் இவற்றை சாதிக்கமுடிந்தது.

மிக நல்லொழுக்கத்துடன் வீட்டையும் நாட்டையும் நேசிக்கக்கூடிய மாணவ இளையோர் சமுதாயம் அங்கே வளரத்தொடங்கியிருந்தது.எந்தச்சாம வேளையிலும் ஒரு இளம்பெண் தனித்து வீதியால் சென்று வருமளவிற்கு பாதுகாப்பான நிர்வாக கட்டமைப்புக்குள் மக்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
வீதியில் படுத்திருக்கும் நாயும், ஆங்காங்கே உலவித்திரியும் ஆடு மாடு கோழிகூட பாதுகாப்பை உணர்ந்த தருணங்கள் அவை.

மக்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிணக்குகள் தொடக்கம் பெரும் சச்சரவுகள் வரை வழக்குப்பதிவுகளின்றியே சாதாரண தமிழீழ காவல்துறை உறுப்பினர்களாலேயே மிக இலகுவாக தீர்த்துவைக்கப்பட்டிருந்தது.
இதனால் மக்களுக்குள் ஒருவருக்கொருவர் குரோத மனப்பான்மைகள் வளர்வது தடுக்கப்பட்டு சமூகப்பிணைப்புகள் பலப்படுத்தப்பட்டது.ஏற்றத்தாழ்வுகள் அடியோடு களையப்பட்டது.
சாதிப்பாகுபாடுகளும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும்,மதப்பிரிவினைகளும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும்
அடியோடு இல்லாமல் போயிருந்தது.
பாதைமாறி,திசைமாறிப் பயணித்துக்கொண்டிருந்த ஈழத்தமிழினத்தை இழுத்துநிறுத்தி தன்மானத்தமிழர்களாய் தலைநிமிரச் செய்ததில் விடுதலைப்புலிகள் இயக்கம் வெற்றியும் அடைந்திருந்தது.

விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டுப்பாட்டுப்பகுதியில் வாழ்ந்திருந்த மக்கள் தங்களைப் பெருமையாக நினைத்து வாழ்ந்த காலம் அது ஈழத்தமிழர் வரலாற்றின் பொற்காலம்.

தமிழீழத்தில் ஒரு நிகழ் அரசு இயங்கிவந்ததென்பதை மறுக்கமுடியாமல் உலகம் ஏற்றுக்கொள்வதற்கு “தமிழீழ காவல்துறை”முக்கிய காரணியாக விளங்கியிருந்தது.

இன்று தமிழீழ காவல்துறை பிறப்பெடுத்த நாள்.

இந்நாளில்,தமிழீழ காவல்துறையின் அளப்பரிய சேவைகளையும்,
கடமையின்போது சாவடைந்த, அதேநேரம் களமுனைகளில் வீரச்சாவடைந்த காவல்துறை மாவீரர்களையும் எம் நெஞ்சங்களில் நினைவிருத்திக்கொள்வோம்.

புலவர்
கடற்புலிகள்.