மொழி சீர்திருத்தம் எனும் திராவிட சூது

115

பண்டைய வரலாற்றை தெரிந்து கொள்ள கல்வெட்டுகளை படித்தால் ஒன்றும் புரிவதில்லை, ஆனால் அன்று எல்லோரும் வாசிக்கும் வண்ணம்தான் எழுதியிருக்கின்றார்கள், அம்மக்களால் வாசிக்க முடிந்திருக்கின்றது

அதாவது நம் முன்னோர்களால் வாசிக்க முடிந்திருக்கின்றது, நம்மால் முடியவில்லை

ஓலை சுவடிகளை படித்தாலும் அதே நிலைதான், அட ஓலை சுவடி என்ன? 100 வருடத்துக்கு முன் எழுதிய நிலம், வீடு பத்திரங்களே புரிவதில்லை. அவற்றை வாசிக்க தமிழ்நாட்டில் 90 வயது தாண்டியர்களை தேடி ஓட வேண்டி இருக்கின்றது

ஒரு ஆங்கிலேயனால் அவன் மொழியில் 700 வருடங்களுக்கு முன்பு எழுதபட்டதையும் படிக்க முடிகின்றது, ஒரு இத்தாலியனால் 1000 வருடத்துக்கு முற்பட்ட அவன் மூதாதையர் எழுத்தை படிக்க முடிகின்றது

யூதனால் 2000 ஆண்டுக்கு முற்பட்ட ஹீப்ரு மொழியினை படிக்க முடிகின்றது, ஒரு அரேபியனால் 1400 வருடத்துக்கு முற்பட்ட குரானை எளிதாக படிக்க முடிகின்றது

சீனருக்கோ எத்தனை நூற்றாண்டுகளை கடந்த தங்கள் முன்னோர் குறிப்பையும் படிக்க முடிகின்றது.

ஆம் அவர்கள் தங்கள் மொழியினை கவனமாக காத்திருக்கின்றார்கள், ஒரு எழுத்து தவறி எழுதினாலும் வருங்கால சந்ததி குழம்பி தவிக்கும் என்பதில் கவனமாய் இருந்திருக்கின்றார்கள்.

ஆனால் தமிழனால் அவன் மூதாதையர் வரிகளை வாசிக்க முடியவில்லை, 100 வருடத்துக்கு முந்தைய தமிழ் பத்திரங்களை கூட அவனால் வாசிக்க முடியவில்லை

எப்படி இந்த அவலநிலை உண்டாயிற்று?

கல்லூரிகள் வெள்ளையனால் அமைக்கபட்டபொழுது கூட செய்யுளும் ஓலை சுவடிகளும், அதன் சாயலான காகித எழுத்தும் சரியாக தொடரபட்டிருக்கின்றன‌

குழப்பம் ஈரோட்டு ராம்சாமி கோஷ்டி தமிழ் எழுத்து உலகுக்குள் வந்தபின் தொடங்கிற்று, தமிழை திருத்துகின்றேன் பேர்வழி என எதனையோ அக்கோஷ்டி செய்து எல்லாவற்றையும் மாற்றிற்று

புதிய எழுத்துக்கள் உருவானால் வரும் சந்ததி பண்டைய தமிழை எப்படி படிக்கும்? முன்னோர் மொழியினை எப்படி வாசிக்கும் என்ற தீர்க்கதரிசனமோ சிந்தனையோ கொஞ்சமும் இல்லை

ஆம், இப்படி எல்லாம் யோசிக்க அறிவு வேண்டும், பண்டைய மொழிவடிவம் தொடர்ந்தால்தான் பழம் விஷயங்களை அறியமுடியும் எனும் சிந்தை வேண்டும்

தமிழ் அப்படியே தொடரபட்டால் தமிழனை எப்படி ஏமாற்றமுடியும்? உனக்கு மதமில்லை அறிவில்லை நீ காட்டுமிராண்டி என எப்படி சொல்லமுடியும்?

இதனால் தமிழின் எழுத்துவடிவம் மாறினால் பண்டைய தமிழுக்கும் வரும் தலைமுறைக்குமான சங்கிலி உடைபடும் என திட்டமிட்டு செய்தார்கள்

விளைவு இன்று முன்னோரின் எழுத்துக்களை அறியமுடியாத முட்டாள் தலைமுறை, அறிவு முடக்கபட்ட தமிழ் பரம்பரை,குருட்டு பரம்பரை உருவாகிவிட்டது.

அந்த குருடனில் நானும் ஒருவன்

பழைய தமிழ் எழுத்துக்களை பார்க்க முடிகின்றதே தவிர, புரிந்து கொள்ளமுடியவில்லை

ஆம், தமிழை திருத்தியது மிகபெரும் கொடுமை , புதுவடிய தமிழை படித்துவிட்டு ஓலை சுவடிகளையும் பழைய பத்திரங்களையும் கல்வெட்டுகளையும் நோக்கினால், காட்டில் மான்கன்று தாயினை பிரிந்து கதறி திரிவது போல் மனம் திரிகின்றது

எழுத்தை மாற்றுகின்றோம் என தாய்க்கும் பிள்ளைக்குமான உறவை வெட்டிவிட்டார்கள் கொடியவர்கள்

சீனனுக்கும், அரேபியனுக்கும், ஆங்கிலேயனுக்கும், யூதனுக்கும் இருக்கும் தொடர்ச்சி தமிழருக்கு இல்லை, காரணம் அவர்கள் பூமியில் அவர்கள் கலாச்சாரத்தை பாரம்பரியத்தை கெடுக்க வந்த திராவிட காட்டுமிராண்டி கும்பல் இல்லை

அதனால் அவர்களால் அவர்கள் மொழியினை தொடர்ந்து பாதுகாத்து தலைமுறை தலைமுறையாய் கொண்டு சேர்க்க முடிகின்றது, இக்கால தலைமுறையும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல்களை எளிதாய் படிக்க முடிகின்றது.

தமிழனுக்கு இருந்த அந்த வாய்ப்பினை சில கும்பல்கள் மண் அள்ளி போட்டன‌

தமிழகத்தின் இக்கால தலைமுறையினை நினைத்தால் பரிதாபமே மிஞ்சும், 100 வருடத்துக்கு முற்பட்ட தமிழ் அவர்களுக்கு தெரியாது

சரி, ஆங்கிலத்தில் புலிகளாயிற்றே என 100 வருடத்துக்கு முற்பட்ட ஆங்கில கடிதங்களை வாசிக்க கொடுத்தால் வாசிக்க முடியாது

இந்த மண்ணில் தொடர்பட்ட பாரத பொதுமொழியாக சமஸ்கிருதமும் தெரியாது

ஆம் பண்டைய தொடர்ச்சியாக ஏதுமில்லா, பழம் பெருமைகளை படிக்க கூட முடியா ஒரு பரிதாப சமூகமாக இது மாறிவிட்டது

காலம் கடந்துவிட்டாலும் , மெல்ல முயன்றால் அதை மீட்டெடுக்கலாம். இன்றும் கல்வெட்டு நிபுணர்கள் உண்டு, ஓலை சுவடி படிப்பார் உண்டு

இதை இன்னும் விரிவுபடுத்தி பழம் தமிழை எல்லோரும் கற்கவைத்தால் இடையில் வந்த குழப்பங்களை சரி செய்யலாம்

ஒரு தலைமுறை இழந்ததை அடுத்த தலைமுறைக்கு சரியாக சொல்லிகொடுத்து அவர்களுக்கும் பண்டை தமிழ் வடிவங்களுக்குமான தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கலாம்

ஒழிந்தது திரும்பும், திரும்பியது ஒழியும் என்பது காலத்தின் விதி

அப்படி ஒரு காலம் பழைய நல் தமிழ் இங்கே மீண்டெழும், அப்பொழுது மொழியின் தொடர்பறுத்தவன் “தமிழர் தந்தை” அதை பற்றி கவலையே படாதவர் “முத்தமிழ் அறிஞர்” எனும் பொய்பிம்பங்களெல்லாம் உடைந்து சிதறும்

அதுவரை விடியா இருட்டில் இருந்து பழம் ஓலைசுவடிகளையும் கல்வெட்டுகளையும் தடவிகொண்டே இருக்க வேண்டியதுதான், ஒன்றும் புரியாது.

நமக்கு தெரியாமலே காலடியில் பள்ளம் தோண்டி தமிழை புதைத்திருகின்றார்கள் என்பது பழைய தமிழ் எழுத்துக்களை படிக்கும் பொழுதுதான் புரிகின்றது

இந்த திராவிட கும்பலால் எவ்வளவு இழந்தோம் என சிந்தித்தால் முதலில் இழந்தது பண்டைய தமிழ் மரபு தொடர்ச்சியும் , தமிழுக்கும் நமக்குமான தொடர்பினையே என்பதுதான் பெரும் சோகம், அவர்கள் மேல் பெரும் ஆத்திரம் வரவைக்கும் காரியமும் அதுவே.

நன்றி – Stanly Rajan