உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் பிறந்து வாழ்ந்து மாண்டு போய் விடுகின்றன. உயர்ந்த அறிவு படைத்த மனிதனும் அதேபோல் பிறந்து வாழ்ந்து மாண்டு போகின்றான். இவை உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் மாண்ட பிறகும் இந்த பூமியில் தங்களது தடங்களை விட்டுச் செல்பவர்கள் வெகுசிலரே.
நாம் நினைத்தால் இனி அனைவரும் நமக்கான இடத்தை உருவாக்கலாம். தமிழர்கள் மத்தியில் இரண்டு வகையான முறைகள் இருக்கிறது ஒன்று இறந்தவர்களை எரிப்பது அதுவே பெரும்பாலான மக்கள் செய்து வருகிறார்கள் மற்றொன்று இறந்தவர்களை புதைப்பது.
போர் வணிகம் போன்ற தொடர் பயணங்களை தொழில்களாக கொண்ட குடிகள் எரிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கலாம். விவசாயம் பூஜை போன்ற தொழில்களை செய்பவர்கள் புதைக்கும் பழக்கங்களை கொண்டிருக்கலாம். உலகில் பெரும்பாலான நாடோடி கொடிகள் எரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர்கள் நாடோடிகள் அவர்களும் எரிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். எதையும் தீயில் போட்டு எரித்தால் நேராக சொர்க்கத்துக்கு போய்விடும் என்ற நம்பிக்கை அவர்களால் விதைக்கப்பட்டது.
ஆனால் இன்று அனைவரும் ஓரிடத்தில் தங்கி வாழும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலும் எரிப்பது என்பது தவறு என்று தோன்றுகிறது. நிலம் பணமான வியாபார நாகரீக உலகம் இறந்தவர்களுக்கு இடங்களை கொடுக்க விரும்பவில்லை அவர்களை எரிக்கவே விரும்புகிறது. நகரங்கள் போன்ற இடங்களில் அது அவசியம் என்று பார்க்கப்பட்டாலும் கிராமங்களிலும் இது நடப்பது வேதனையாக இருக்கிறது.
ஒருவன் வாழ்ந்த எந்த ஒரு சுவடும் இன்றி அவனை எரித்து அழிப்பது என்பது எந்த வகையில் சரியான முறை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இருக்கும் போது யாருக்கும் பயனில்லாமல் வாழ்ந்தவன் கூட இறந்தபின் மண்ணில் விதைக்கப்பட்டால் புழு பூச்சிக்கு பயனாவான்.
இன்று உலகில் நடக்கும் அனைத்து அகழ்வாராய்ச்சிகள் பெரும் உறுதுணையாக இருப்பது மனித எலும்புகளே. இதனை நமது முன்னோர்கள் அறிந்திருக்க வேண்டும். அதற்கு சான்று முதுமக்கள் தாழி.
ஆசீவகர்கள் முதுமக்கள் தாழி என்ற முறையே கையாண்டு வந்துள்ளார்கள். உலகில் பழமையான பல இனங்களில் இந்தப் பழக்க வழக்கம் இருந்துள்ளது. அவைகள் தமிழர்கள் இடத்திலிருந்துதான் சென்று இருக்கும் என்பது எனது கணிப்பு. எகிப்து பிரமிடு முறைகூட அந்த முறையின் பரிணாம வளர்ச்சிதான்.
சில இடங்களில் முதுமக்கள் தாழியின் கீழே வாய் போன்ற ஓட்டை இருக்கிறது. இறந்தவர்களின் உடலிலுள்ள எலும்பைத் தவிர பிற அனைத்து பாகங்களும் நாளடைவில் உருகி அந்தப் பானையின் ஓட்டை வழியே வெளியேறிவிடும். எலும்பு மட்டும் எதிர்கால உலகிற்கு சாட்சியாக தாழியால் பாதுகாக்கப்படும். இந்த முறை மிகவும் முன்னேறிய முறையாக இதுவே சரியான முறையாக எனது பார்வையில் தோன்றுகிறது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் பூர்வகுடிகள் தமிழர் என்று நாம் கூறுகிறோம் அவர்கள் மரத்திற்கு மேலே ஒரு தளத்தை அமைத்து அதில் இறந்தவர்கள் உடலை கழுகுகள் திங்க வைத்துவிடுவார்கள் கடைசியில் மிஞ்சும் எலும்பை புதைப்பார்கள்.
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து தகவல்களும் சேமிக்கப் பட்டாலும் ஏதோ ஒரு விபத்தால் அனைத்தும் அழிய வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் பழைய செப்பேடு முறைகள் போன்ற முறையில் இறந்தவர்களை பற்றிய சிறு குறிப்புகள் அவர்களை புதைக்கும் இடத்தில் வைத்தல் சரியாக இருக்கும்.
உடலை பிற உயிருக்கு தானமாக கொடுக்கும் முறையே புதைக்கும் முறை அதுவே சரி என்று வள்ளலார் முதல் பலர் கூறுகிறார்கள். உலகில் பெரும்பாலான மதங்களில் அதைத்தான் பின்பற்றுகிறார்கள். சங்க இலக்கியங்களிலும் நடுகல் சான்றுகள் அதைத்தான் கூறுகிறது. ஆனால் பெரும்பாலும் தமிழ் இந்துக்கள் எரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயிரம் ஆயிரம் நுண்ணுயிர்களின் கூடாரம் நமது உடல். அதில் நமது ஒற்றை உயிர் பிரிந்த காரணத்திற்காக ஒட்டுமொத்த நுண்ணுயிரிகளையும் எரிப்பது எந்தவிதத்திலும் அறமாகாது. ஒரு உயிர் பல ஆயிரம் உயிர்களாக உருவெடுத்த வேண்டும். இறந்தவர்களை புதைக்க வேண்டும் அந்த இடத்தில் மரக்கன்றுகளை நடவேண்டும். தாத்தா மரம், பாட்டி மரம், அம்மா மரம் என அனைத்து உறவுகளும் மீண்டும் உயிர்களாக வேண்டும். முன்னோர்கள் காடுகளாக வேண்டும் அந்தக் காட்டில் நானும் ஒரு மரமாக வேண்டும்.
இறந்தவர்களை புதைப்போம் மரங்களாக விதைப்போம் நாளைய சமுதாயத்திற்கு காவல் மரங்களாக காப்போம்.
கலம் – #தாழி – புறநானூறு 228
கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!
நன்றி
தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே